மூன்று பெண்கள். ஓர் இமாம். மூன்று நிகழ்வுகள்.
<><><><><><><><><><><><><><><><><>
ஹஸன் பின் அப்துல்லாஹ் அல்அஸ்கரி அவர்கள், இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார்:
“என்னை ஏமாற்றிய ஒரு பெண் உண்டு; எனக்கு, உலக விருப்பத்தை குறைய (சுஹ்த்) வைத்த மற்றொரு பெண் உண்டு; என்னை ஃபிக்ஹில் (இஸ்லாமிய சட்டத்தில்) முன்னேற்றிய மற்றொரு பெண் உண்டு.”
➤ என்னை ஏமாற்றிய பெண் யாரென்றல்,
ஒரு நாள் நான் கூஃபா நகரின் புறநகரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் விரலால் சைகை செய்வதைக் கண்டேன். அவர் பேச இயலாதவர் என்று எண்ணிக்கொண்டேன். அருகே சென்றபோது அவர் ஒரு பெண் எனத் தெரியவந்தது. அவள், பாதையில் வீசப்பட்டு விழுந்து கிடந்த ஒரு பொருளை நோக்கி சைகை காட்டினாள். அது அவளுடைய பொருள் போலிருக்கிறது என்று நினைத்து, அதை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
அவள் சொன்னாள்: “இதை இதன் உரிமையாளர் வரும் வரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஷரீஅத்தில் இதற்கு ‘லுக்த்தா’ (لقطة யாரோ ஒருவர் தொலைத்த பொருள்) என்று பெயர். அதாவது, யாரேனுமொருவர் கீழே கிடக்கும் ஒருபொருளை கண்டுபிடித்தால், அதன் உரிமையாளர் யார் எனத் தெரியவில்லை என்றால், அதை கண்டெடுத்தவர் அதை பாதுகாக்க வேண்டும்; அதன் உரிமையாளர் வந்து அதைப்பெற்றுக் கொள்ளும்படி அறிவிக்க வேண்டும். ஒரு வருடம் கழித்தும் உரிமையாளர் வராவிட்டால், அதை கண்டெடுத்தவர் எடுத்தவர் அதற்கு உரிமையாளர் ஆவார்.”
இவ்வாறு அந்தப் பெண் அந்தப்பொருளை எடுத்து அதன் பொறுப்பை ஏற்காமல் தவிர்த்து அவளுக்கு பகரமாக என்னை ‘லுக்த்தா’ பொறுப்பை ஏற்க வைத்ததால், அவள் என்னை ஏமாற்றினாள். இது , அவளுடைய மாரக்க அறிவையும் அல்லாஹ்வின் மீதான (தக்வா) பயத்தையும் உணர்த்தியது.
➤ எனக்கு வணக்க வழிபாட்டில் ஈடுபாட்டையும் (சுஹ்து) உலகின் மீதான விருப்பமின்மையையும் ஊக்குவித்த பெண் யாரென்றால்,
ஒரு முறை நான் பெண்கள் இருக்கும் பாதை வழியாகச் சென்றேன். அப்போது அவர்களில் ஒருத்தி சொன்னாள்: “இவர்தான் இமாம் அபூ ஹனீபா; இவர் இஷா தொழுகைக்காக செய்த وضوء (வுழூ)வைக்கொண்டு (அதை முறிக்காமல்) ஃபஜ்ர் தொழுகிறார்.”
அந்த வார்த்தையை கேட்டதும், “மக்கள் என்னை அவ்வாறு நினைக்கிறார்கள் என்றால், நான் அந்த நம்பிக்கையை உண்மையாக்க வேண்டும்” என்று எண்ணினேன். அதன்பின், உண்மையில் ஃபஜ்ரை இஷாவின் وضوء கொண்டு தொழுவதை வழமையாக்கிக் கொண்டேன். இவ்வாறு அது எனக்கு வழக்கமாகி விட்டது. மக்கள் நல்ல எண்ணம் வைத்தால் அதைவிட நன்றாக இருக்க வேண்டும் என்று இமாம் அவர்கள் எண்ணிய உறுதியை பாருங்கள்.
➤ என்னை ஃபிக்ஹில் (சட்ட அறிவில்) முன்னேற்றிய பெண்:
ஒரு முறை, மாதவிடாய் தொடர்பான ஒரு கேள்வியை ஒரு பெண் என்னிடம் கேட்டாள். நான் பதில் தெரியாமல் கூச்சப்பட்டேன். அதன்பின், எந்தக் கேள்விக்கும் நான் பதில் தெரியாமல் இருக்கக் கூடாது என்று எண்ணி, தீவிரமாக ஃபிக்ஹ் கல்வியை கற்றுக் கொண்டேன்.
⸻
📘 அறிஞர் தாரிக் சுவைதான் அவர்கள் எழுதிய “இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களின் வாழ்க்கை – புகழ்மிக்க இமாம்களின் தொடர் ஓவிய நூல்கள்.”
#imam_ilyas_riyaji #ilyas_riyaji







