السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 14 May 2024

பேரருள் நாயனை, புகழ் திருநபிகள் நெற்றிக் கண்ணால் பார்த்தார்களா?

 

பேரருள் நாயனை, புகழ் திருநபிகள் நெற்றிக் கண்ணால் பார்த்தார்களா?

அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறைவனைத் தனது புறக் கண்ணால் பார்த்தார்களா? அல்லது அகக் கண்ணால் கண்டார்களா? என்பதில் உலமாக்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். ஹதீதுக் கலை வல்லுனர் அல்லாமா காழி இயால் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இறைவனைப் பார்ப்பது சாத்தியமே என்று பல்வேறு ஆதாரங்கள் மூலம் நிறுவி உள்ளார்கள்.
அல்லாஹ், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கலாம் - பேச்சாலும், நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குல்லத் - நட்பாலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ருஃயத் - பார்வையாலும் தேர்ந்தெடுத்தான். இந்த ஹதீதை ஹாகிம், நஸயீ, திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி போன்றோர் பதிவு செய்துள்ளனர்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ் பார்வையால் தேர்ந்தெடுத்தான் என்று இந்த நபிமொழி அறிவிக்கின்றது. இதற்கு ஆதாரமாக திருமறை,
(நபியுடைய) இதயம் தான் கண்டதைப் பற்றி பொய் கூறவில்லை. அவர் கண்டதைப் பற்றி நீங்கள் சந்தேகித்து அவருடன் தாகிக்கின்றீர்களா? இன்னும் நிச்சயமாக அவர் இரண்டாவது முறையாகவும் அவனைக் கண்டார்கள் (அல்குர்ஆன் 53-11-13) என்று கூறுகிறது. (மா கதபல் புவாது மா ரஆ அஃப துமாரூனஹு அலா மா யரா வலகத் ரஆஹு நஸ்லதன் உக்ரா)
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் கருத்துப்படி, மேற்கண்ட வசனத்தில் வருகின்ற ரஆஹு என்ற வார்த்தையிலுள்ள ஹு அல்லாஹ்வைக் குறிக்கிறது.
இமாம் ஹஸனுல் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றார்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை தமது புறக் கண்ணாலேயே கண்டார்கள் என்று!
இப்னு இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கின்றார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அல்லாஹ்வைப் பார்த்தார்களா? என அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மர்வான் வினவியகாலை, ஆம்! பார்த்தார்கள் என்று பதில் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் அவர்களின் ஹதீஸை நான் பலமாக ஆதரிக்கின்றேன். அல்லாஹ்வை, அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்களால் பார்த்தார்கள், பார்த்தார்கள் என பன்முறைக் கூறி தன்னை மறக்கும்வரை அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக நக்காஷ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவி்க்கிறார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறைவனை மிஃறாஜி்ன்போது தமது புறக் கண்களால் கண்டார்கள் என்ற இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களது கூற்றுத்தான் மேலான முதன்மையான கருத்து என அல்லாமா முல்லா அலிகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷரஹ் ஷிபாவில் கூறுகின்றனர்.
அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், புறக் கண்களால் கண்டார்கள் என்பதை மறுத்துரைப்பது ஹதீஸ்களின் அடிப்படையில் அல்ல! புறக் கண்களால் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பார்க்கவில்லை என்று ஏதாவது நபிமொழிகள் அன்னை அவர்களுக்கு கிடைத்திருந்தால், அதனை தமது வாதத்திற்கு ஆதாரமாகத் தந்திருப்பார்கள். ஆனால், அப்படி எந்த நபிமொழியையும் அவர்கள் கூறவில்லை.
எனவே அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வாதம் அவர்களது ஆய்வின் முடிவால் ஏற்பட்டது. இஜ்திஹாதில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் இறைவனிடம் அதற்கு கூலி உண்டு.
அன்னையவர்கள் தமது ஆய்வுக்கு இரண்டு இறை வசனங்களை ஆதாரமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
1. லா துத்ரிகுஹுல் அப்ஸுர் - அவனைப் பார்வைகள் எத்திக் கொள்ளாது.
2. அவ் மின் வராஇ ஹிஜாபின் - (அல்லாஹ் யாருடனாவது பேசுவதாயின் திரைக்குப் பின்னாலிருந்து பேசுவான்-பார்வைகள் அல்லாஹ்வை அடைய முடியாது - திரையின்றிப் பேசவும் முடியாது. எனவே நபியவர்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்பது திருமறை வசனத்திற்கு முரணாக இருப்பதால் இதனை ஏற்க முடியாது என்கி்ன்றனர் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்!
இத்ராக் என்றால் சுற்றிச்சூழ முழுமையாகப் பார்வையால் சூழ்ந்து பார்த்தல் எனப்பொருள்.
அல்லாஹ்வின் தாத்துடைய குன்ஹு - உள்ளமையை யாராலும் முழுமையாகக் காண முடியாது. ஆனால் அவனது பேரழகை, ஜலாலை இலட்சணங்களை பார்க்க முடியும். இது மேற்கூறப்பட்ட இறை வசனங்களுக்கு முரணல்ல.
பேசுவதற்குத்தான் திரை வேண்டுமென்று கூறுகிறது அல்குர்ஆன், பார்ப்பதற்கல்ல! திரையின்றிப் பார்த்திருக்கலாம். பின் திரைக்குப் பின்னாலிருந்து பேசி இருக்காலாம். பார்த்தால் பேசி ஆகவேண்டுமென்பது கட்டாயமல்லவே என்பது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களது கருத்து. இக்கருத்தையே பலரும் ஆதரிக்கின்றனர்.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் இறைவா! உன்னையான் பார்க்க வேண்டுமே! என வினவியகாலை என்னைப் பார்க்க மாட்டாய் என இறைவன் பதில் கொடுத்தான். இதனால் மற்ற எவரும் பார்க்க இயலாது என்பது கருத்தல்ல!.
நபி என்பவர் எது சாத்தியம். எது அசாத்தியம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார். இறைவனை நன்கு புரிந்து வைத்திருப்பவர் நபி. எனவே நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டதே அல்லாஹ்வைப் பார்த்தல் சாத்தியமானது என்பதற்குத் தக்க சான்று!
இது எல்லோருக்கும் சாத்தியமல்ல! அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு சாத்தியம்தான்! ஏனெனில், அன்னார் சிருஷ்டிகள் அனைத்திலும் மிக்க மேலானவர்கள். அல்லாஹ்வுக்கு மிகுந்த நேசமானவர்கள். எனவே, இதற்குத் தகுதி படைத்தவர்கள் அண்ணலராக இல்லையாயின் வேறு யாராகத்தான் இருக்க முடியும்?
எனவே, முஜ்தஹிது அல்லாத யார் அல்லாஹ்வை, மிஃறாஜின்போது அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் புறக்கண்களால் தரிசித்தார்கள் என்பதை மறுக்கின்றானோ, அவன் வழிகேடன் என்பதையறிந்து அவனது சகவாசத்தை உதறித் தள்ளிவிட்டு நேரிய சுன்னத் வல் ஜமாஅத்தின் சீரிய பாதை செல்ல முனைதல் வேண்டும். அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.