السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும் தொடர் 8

 

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும் தொடர் 8

கப்றின் ஃபித்னா :
-------------------
ஜனாஸாத்தொழுகையில் கப்றின் ஃபித்னாவிலிருந்து அவரைப்பாதுகாப்பாயாக! என்று கேட்கும் துஆவில் இரு விடயங்கள் சுட்டிக்காட்டபடுகின்றன,_
1- கப்றின் நெருக்கம்,
2- முன்கர் நகீராகிய இரு மலக்குகளின் விசாரணை
கப்றின் நெருக்கம்:
கப்றின் நெருக்கம் என்பது , கப்று இருபக்கமும் சேர்ந்து மத்தியில் மைய்யித்தை நெருக்குவதற்குக் கூறப்படும், இதுதான் முன்கர், நகீரின் விசாரணைக்கு முன் நிகழும் கப்றின் முதற் சோதனையாகும்;
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
القبر اما حفرة من حفر النار او روضة من رياض الجنة ،
கப்று ஒன்றில் நரகத்தின் குழிகளில் ஒரு குழியாக இருக்கும், அல்லது சொர்க்கத்தின் பூங்காவில் ஒரு பூங்காவாக இருக்கும்.
இந்த சோதனையை அல்லாஹ்வின் நல்லடியாரும், பாவியும் சந்திக்க வேண்டி வரும், ஹளறத் ஸஃதுப்னு முஆத் அன்ஸாரி றழியல்லாஹு அன்ஹு ஸஹாபாக்களில் அதி உச்ச பதவியிலிருந்தவர்களாகும்; அன்னார் வபாத்தான போது அவர்களின் றூஹை வரவேற்கும் ஆனந்தத்தில் அர்ஷு துளும்பியது; இதன்மூலம் அவர்களின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்; இந்த உச்ச பதவியைப் பெற்றும் கூட கப்றின் நெருக்கத்திலிருந்து தப்பமுடியவில்லை;
ஹளறத் அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயாரும் கண்மணி றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வளர்த்த இரண்டாவது தாயுமான ஹளறத் பாத்திமா பின்து அஸத் றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கப்றின் நெருக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் என்று ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது; சிறுகுழந்தைகளுக்கும் கூட இந்த நெருக்கம் இருக்கும்; சங்கையான நபிமார்கள் யுத்த களத்தில் ஷஹீதான ஷுஹதாக்கள் மாத்திரமே இதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாகும்;
ஹளறத் அமீறுல் முஃமினீன், ஹளறத் உமர் இப்னு கத்தாப் றழியல்லாஹு அன்ஹு இமாமுல் ஹறமைன் (இமாம் ஙஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் உஸ்தாத்,) ஹாறூன் றஷீத் றஹ்மதுல்லாஹி அலைஹிமா உள்ளிட்டோரும் இந்த சோதனையிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்று ஒர் அறிப்பு கூறுகிறது;
(இந்த நெருக்கத்தின் தன்மை பற்றி அறிஞர்கள் விளக்கியுள்ளனர், விபரம் தேவைப்பட்டவர்கள் நமது ஜாஅல் ஹக் - சத்தியம் அழிந்தது! என்ற நூலைப்பார்க்கவும்.)
நகீறைன் என்பது இருமலக்குகளாகும், இவர்களை முன்கர், நகீர் என்று கூறப்படும்; அவலட்சணமானதை முன்கர் என்று கூறப்படும்; இவர்களின் தோற்றம் பயங்கரமானதாகவும், திகிலூட்டக்கூடியதாகவும் இருப்பதனால்தான் முன்கர், நகீர் எனக் கூறப்படுகின்றது;
கப்றில் நல்லடக்கம் முடிந்தபின்னர் இந்த இரு மலக்குகளும் மைய்யித்திடம் சில கேள்விகளைக் கேட்பார்கள், பதட்டத்தின் காரணமாக மைய்யித் இக்கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திக்கிக்கொண்டிருக்கும்;
முன்கர், நகீர் ஆகிய இரு மலக்குகளும் கியாமத் நாளில் மைய்யித் எந்த கப்றிலிருந்து எழுப்பப்படுவார்களோ அந்த கப்றுக்குள்தான் நுழைவார்கள்; மீண்டும் தோண்டி எடுக்கும் நோக்கில் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டவர்களின் கப்றில் விசாரணை நடக்காது;
இருமலக்குகளும் நகீறைனின் (நிராகரிப்பவர்களின்) கோலத்தில் காபிர்களின் கப்றுக்குள் வருவார்கள், இன்னும் முபஷ்ஷிர், பஷீரின் (சோபனம் கூறுபவர்) கோலத்தில் முஃமின்களின் கப்றில் நுழைவார்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றார்கள்; ஒவ்வொரு மலக்கும் அவரவர்களின் பாஷையில் மைய்யித்திடம் விசாரணை செய்வார்கள் சிலர் சுரியானி மொழியில் கேள்வி கேட்பார்கள் என்கின்றனர்; சரியான கூற்றுப்படி அரபு மொழியில் கேட்பார்கள் என்று இமாம் இப்னு ஹஜர் மக்கி றஹ்மதுல்லாஹி அலைஹி பதாவா ஹதீதியாவில் குறிப்பிடுகின்றார்கள்;
பின்வரும் நான்கு கேள்விகள் கேட்கப்படும்;
1- அல்லாஹ்வின் அடியானே எழுந்திரு. قم يا عبد الله
فيمن كنت.
நீர் எந்த மக்களைச் சேர்ந்தவர்?
من ربك وما دينك
3- உனது றப்பு யார்? இன்னும் உனது மார்க்கம் என்ன?
4- ما تقوا في هذاالرجل الذي بعث فيكم وفي الخلق اجمعين،
உங்கள் மத்தியிலும், இன்னும் அனைத்து படைப்பிலும் அனுப்பப்பட்ட இந்த மனிதரைப்பற்றி நீர் கூறுவது என்ன?
சிறுவர்களின் மைய்யித்தாக இருந்தால், மைய்யித்தின் துஆவுக்குப் பகரமாக,
اللهم اجعله (ها) لوالديه (ها), فرطا وذخرا وعظة واعتبارا وسلفا وشفيعا وثقل به ( ها) وموازينهما وافرع الصبر علي قلوبهما ولا تفتنهما بعده (ها) ولا تحرمهما اجره(ها)
யாஅல்லாஹ்! அவரை அவர்களின் தாய் தந்தைக்கு அதிகத்தையும், சேமிப்பையும் நல்ல செய்தியாகவும்; படிப்பினையாகவும்; முந்தியதாகவும்; பரிந்துரை செய்யக்கூடியதாகவும்; ஆக்குவாயாக! இன்னும் அவர்கள் ஊடாக அவர்களின் நன்மையை கனதியாக்குவாயாக! இன்னும் அவர்களிருவரின் இதயங்களில் பொறுமையை நிரப்புவாயாக! அவருக்குப்பின் அவ்விருவரையும் சோதனைக்குள்ளாக்காதே! அவரின் கூலியை அவ்விருக்கும் தடுக்கப்பட்தாக ஆக்காதே!
என்று ஓதவேண்டும்.
4- ஸலாம்:
நான்காவது தக்பீறுக்குப் பின் எதுவும் வாஜிபில்லை, ஆயினும், பின்வரும் துஆவை ஓதுவது சுன்னத்தாகும்;
اللهم لا تحرمنا اجره (ها) ولا تفتنا بعده(ها) فاغفرلنا وله (ها)
யாஅல்லாஹ்! எங்களுக்கு அவரின் கூலியிலிருந்து விலக்கப்பட்டதாக ஆக்காதே! இன்னும் அவருக்குப்பின் ஃபித்னாவில் எங்களை சோதித்து விடாதே! எங்களையும், அவரையும் மன்னித்துக்கொள்வாயாக!
இதற்குப்பின் முதல் ஸலாம் வாஜிபாகும், இந்த ஸலாம் றுக்னாகும்! இரண்டாவது ஸலாம் சுன்னத்; ஸலாமில் வறஹ்மதுல்லாஹ் என்று சேர்த்துக் கொள்வது சுன்னத்தாகும்; தக்பீறுக்குப் பின் எதுவும் வாஜிபாக இல்லாத காரணத்தால்தான் நான்காவது தக்பீருக்குப் பின், ஸலாம் கொடுப்பது ஆகுமானதாக இருக்கின்றது!
மைய்யித் பழுதாகுவதற்கான அச்சமிருந்தால், தொழுகையில் பர்ளோடு போதுமாக்கி சுன்னத்தைத் தவிர்க்க வேண்டும்;
ஜனாஸாவைச் சுமப்பது:
மைய்யித் இருக்கும் இடமும், நல்லடக்கம் செய்யும் இடமும் வேவ்வேறாக இருந்தால், ஜனாஸாவை சுமந்து செல்வது வாஜிபாகும், ஜனாஸாவை தூக்கிச்செல்வது சிறந்த முறை நான்கு கம்புள்ள தட்டில்வைத்து முன்னால் இருவரும், பின்னால் வருபவருமாகத் தோளில் வைத்துத் தூக்கிச்செல்வதாகும்; இதுவே பொதுவான நடைமுறையாகும்; ஆண்கள்தான் ஜனாஸாவைத் தூக்க வேண்டும்; ஆண்கள் இல்லாத சந்தர்பத்தில் பெண்கள் தூக்கலாம்;
ஸஹாபாக்களும் தாபியீன்கள் றழியல்லாஹு அன்ஹும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தார்கள்;
ஜனாஸாவோடு சேர்ந்து முன்னால் நடந்து செல்ல வேண்டும்; அல்லது ஜனாஸா கண்ணில்படத்தக்கதாக அருகில் நடந்து செல்ல வேண்டும்; மைய்யித் பழுதுபடும் என்ற அச்சமிருந்தால் விரைவாகச் செல்ல வேண்டும்; இல்லையேல் மெதுவாகச்செல்ல வேண்டும்;
தற்காலத்தில் வஹாபிஸமத்தைத்தழுவிய சிலர் தாமகவே முன்வந்து ஜனாஸாவோடு வருபவர்களை கவனத்தில் கொள்ளாமல் வேகமாக எடுத்துச் செல்வதின் உள்நோக்கம் தீயதாகும்; இதில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்;
ஹனபி மத்ஹபினர்களிடத்தில் மைய்யித்திற்குப் பின்னால் செல்ல வேண்டும்; மைய்யித்தை எடுத்துச் செல்லும் போது நடந்துசெல்ல வேண்டும்; திரும்பும் போது நடந்து அல்லது வாகனத்தில் வரலாம்; சிலர் ஜனாஸாவோடு வாகனத்தில் வருவதைக் கண்ட றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள்;
الا تستحيون ان الملائكة علي اقدامهم وانتم علي ظهور دواب،
உங்களுக்கு வெட்கமில்லையா? மலக்கு உங்களுக்கு முன்னால் நீங்கள் வாகனத்தில் முதுகில்?
ஜனாஸாவோடு செல்லும் போது இவ்வாறு கூறுவது சுன்னத்தாகும்,
الله اكبر الله اكبر الله اكبر هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زاد هم ايمانا وتسليما ،
அமீறுல் முஃமினீன் உதுமானிப்னு அப்பான் றழியல்லாஹு அன்ஹு இவ்வாறு கூறினார்கள்;
سبحان الحي الذي لا يموت ،
மைய்யித்தின் முகத்தை மூட வேண்டும்,
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
خمروا وجوه موتاكم ولا تتشبهوا باليهود وفي رواية باهل الكتب .
உங்களின் மைய்யித்துக்களின் முகத்தை மூடுங்கள், யஹூதிகளுக்கு ஓர் அறிவிப்பில் வேதக்களுக்கு ஒப்பாகாதீர்கள்!
யஹூதி, நஸாறாக்கள் மைய்யித்தின் முகத்தை மூடுவதில்லை;
பலஸ்தீன் உள்ளிட்ட சில அரபு நாடுகளில் மைய்யித்தின் முகம் திறந்தநிலையில் எடுத்துச் செல்வது தொலைக்காட்சியில் காணக்கூடியதாக இருப்பதைக்கண்டு ஏமாந்து விட வேண்டாம்; இப்போது நமது பகுதிகளிலும் மைய்யித்தின் முகத்தைத் திறந்த நிலையில் பார்வைக்கு வைக்கின்றனர்; இது சுன்னத்திற்கு மாற்றமாகும்;
ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது சுன்னத்தாகும், ஹனபிகளிடத்தில் சிறப்பாகும்; கப்றில் மண்ணைப் போடும் வரை உட்காரக்கூடாது; ஜனாஸாவோடு செல்லும்போது மரணசிந்தனையோடும், கவலையோடும்; மைய்யித் சந்திக்கப்போகும் சூழலைப்பற்றி மீட்டிப்பார்த்தவர்களாகவும் மௌனமாகச்செல்ல வேண்டும்,
கலிமா, திக்று திருக்குர்ஆன் ஓதல் உள்ளிட்டவையை தவிர்க்க வேண்டும் என்று புகஹாக்கள் கூறியிருப்பது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலுள்ளவர்களுக்காகும்; இக்காலத்தில் மக்களின் சிந்தனை ஆரம்பகாலத்தைப் போன்று இல்லாத காரணத்தால் வேண்டத்தகாத பாவங்களைத் தவிர்ப்பதற்காக மேற்கண்டவையை கூறிக்கொண்டு செல்ல வேண்டும், இக்காலத்தில் அது மைய்யித்தின் அடையாளமாகிவிட்டது; அதைத் தடுக்கக்கூடாது என்று இமாம் முதாபிஙி றஹ்மதுள்ளாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
(இதுபற்றிய விரிவான விளக்கமும், மறுப்பாளர்களின் வாதத்திற்கான தக்கபதிலும் ஜாஅல்ஹக் அசத்தியம் அழிந்தது! என்ற எமது நூலில் தனிப்பிரிவாக உள்ளது! விளக்கம் தேவைப்படுவோர் அதைப்பார்க்கவும்.)
மௌத்தானதிலிருந்து நல்லடக்கத்தை முழுமை செய்யும் வரை சாம்புறானி உள்ளிட்ட வாசனைபத்திகளை பற்ற வைப்பது சுன்னத்தாகும்.
இக்காலத்தில் சில வழிகேடர்களின் மறைமுகமான முன்னெடுப்பில் ஜனாஸாவை வாகனத்தில் எடுத்துச் செல்வது குற்றமாகும், இதனால் ஊரிலுள்ள அனைவரும் பாவியாவார்கள்; இந்த பாவத்தை உலமாக்களின் ஆதரவில் பள்ளிவாசல் நிருவாகம் முன்னின்று செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை
தொடரும்.....!

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி