السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 16 May 2024

முஹப்பத்தின் இரகசியம் என்ன?

 

முஹப்பத்தின் இரகசியம் என்ன?

காட்டில் ஓர் அசிங்கமான உருவத்தைக் ஒருமனிதர்கண்டு, யார் நீ? என்று கேட்டார். உனது தீய அமல்தான் நான்! என்று அது கூறியது. உன்னிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஏதும் மார்க்கம் உண்டா? என்று அதனிடம் அவர் கேட்டார். ஆம் உண்டு! ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத் உரைப்பீராக! என்று அது பதில் கூறியது.
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
என் மீது கூறப்படும் ஸலவாத் ஸிறாத்துல் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பதற்குரிய பேரொளியாகும். எவராவது ஒருவர் வெள்ளிக் கிழமைகளில் எண்பது விடுத்தம் ஸலவாத் உரைப்பாராயின், அவரது எண்பது ஆண்டுகால குற்றங்கள் மன்னிக்கப்படும்.
ஒருவர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத் கூறாதிருந்தார். ஒரு தினம் அம்மனிதர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவில் கண்டார், அவரை ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திரும்பியும் பார்க்கவில்லை. பெருமானாரை நெருங்கி என்னைப் பார்க்காது முகம் திரும்பியதன் காரணத்தை நான் அறியலாமா? என்மீது தாங்களுக்கு கோபமா? என்று கேட்டார்.
உம்மை நான் அறியேன் என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள். தாங்கள் என்னை எப்படி அறியாதிருக்க முடியும்? பெற்றோர் பிள்ளைகளை அறிந்திருப்பதை விட, தாங்கள் உங்கள் உம்மத்தை அறிந்திருப்பதாக உலமாக்கள் கூறக் கேட்டிருக்கின்றேனே! என்றார் அம்மனிதர்
உலமாக்கள் உண்மைதான் உரைத்துள்ளனர், நீர் என்மீது ஸலவாத் கூறி என்னிடம் உம்மை நினைவூட்டவில்லையே! என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் நவின்றார்கள்.
எனது உம்மத்தில் எவர் என்மீது அதிகமதிகம் ஸலவாத் கூறுகின்றாரோ அந்தளவு அவரை நான் அறிந்திருப்பேன். இக்கூற்று அம்மனிதன் மனதைத் தொட்டது. அதிலிருந்து அவர் தினமும் நூறுவிடுத்தம் ஸலவாத் கூறும் வழக்கத்தை ஆரம்பித்தார்.
குறுகிய காலத்திற்குள் மீண்டும் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டார். இப்போது உம்மை நான் அறிவேன். உமக்கு நான் ஷபாஅத் செய்வேன், என்று நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சோபனம் சொன்னார்கள்.
ஏனெனில்,, இப்போது அவர் உள்ளத்தில் பெருமானார் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முஹப்பத் நேசம் துளிர்த்து விட்டது.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பதாயின், என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான்.
இந்த திருவசனம் இறங்கியதன் காரணம் இதுதான்.
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைஷித் தலைவர்களான கஃபு இப்னு அஷ்ரப் அவர்களையும், அவர் தம் தோழர்களையும் இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள் போன்றவர்கள், அவனை அதிகமாக நாங்கள் நேசிக்கின்றோம் என்றனர்.
அப்போது அல்லாஹுத்தஆலா கூறினான்,
நபியே! கூறுவீராக! உண்மையில் அல்லாஹ்வை நீங்கள் நேசிப்பதாயின், என்னைப் பின்பற்றுங்கள், நான் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவேன். அவனது செய்தியை உங்களுக்கு எத்தி வைப்பவர் உங்களுக்காக அல்லாஹ்வின் அத்தாட்சியாக நான் வந்துள்ளேன். என்னை நீங்கள் பின்பற்றினால் அல்லாஹுத்தஆலா உங்களை நேசிப்பான், உங்கள் குற்றங்களை மன்னிப்பவன், அவன் மன்னிப்பவன், இரக்கமுள்ளவன்.
அல்லாஹ்வை முஃமீன்கள் முஹப்பத் வைப்பதானது அவனது சட்டங்களை எடுத்து நடப்பதில் அவனை வணங்குவது, அவனது திருப்பொருத்தத்தை தேடுவது ஆகும். முஃமீன்கள் பேரில் அல்லாஹுவுக்குள்ள முஹப்பத் யாதெனில், அவர்களைப் பாராட்டுவது, அவர்களுடைய அமல்களுக்கு நற்கூலி வழங்குவது, அவர்களின் குற்றங்களை மன்னிப்பது, அவர்கள் பால் தனது ரஹ்மத்தை சொரிவது, நல்லுதவிகளை வழங்குவது.
இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஹ்யாஉலூ முத்தீனில் கூறுகின்றார்கள்,
எவர் ஒருவர் நான்கு காரியங்கள் இல்லாமல், நான்கு காரியங்களை இருப்பதாக வாதித்தால் அவர் பொய்யராவார்.
01. நன்மையான காரியங்களை செய்யாமல் சொர்க்கத்தை நேசிப்பது.
02. ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நேசிப்பதாக வாதிக்கின்றார்கள். ஆனால், உலமாக்கள், ஸாலிஹீன்களை நட்புக் கொள்வதில்லை.
03. நரகத்தை அஞ்சுவதாக வாதிக்கின்றார்கள், ஆனால், பாவம் புரிவதிலிருந்து விலகியிருப்பதில்லை.
04. ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பதாக வாதிக்கின்றார். ஆனால், கஷ்டங்களை முறையிடுகின்றார்.
ஹளரத் அன்னை றாபிஅத்துல் அதவியா கூறினார்கள்,
அல்லாஹ்வை நேசிப்பதாக வெளிப்படையாகக் கூறிக் கொண்டே நீ அல்லாஹ்வுக்கு மாறு செய்கிறீர்! எனது ஆயுள்மீது ஆணையாக! இது என்ன புதுமை! உனது நேசம் உண்மையாயின், அவனுக்கு நீ வழிப்பட்டிருப்பாய் காரணம் நேசத்திற்குரிய அடையாளம் நேசனுக்கு நேர்பாடயிருப்பதாகும், மாறு செய்வது நேசத்தின் அடையாளமன்று!
ஒரு கூட்டம் ஞானிகள் நாயம் ஹளரத் ஷிப்லி ரஹ்மத்துல்லாஹி அலைஹியிடம் வந்து, நாங்கள் உங்களை நேசிக்கின்றோம் என்றனர். அவர்களைப் பார்த்து ஞானி ஷிப்லி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கல் எறிந்தார்கள். உடனே அம்மக்கள் ஓடிவிட்டனர். உண்மையில் நீங்கள் நேசிப்பதாயின், என் தரப்பிலிருந்து தொடுக்கப்பட்ட துயரத்தைக் கண்டு ஏன் ஓடினீர்கள்.? பின்பு கூறினார்கள்,
நேசர்கள் நட்பின் பானத்தைப் பருகியதால் விரிந்த பூமியும் நகரங்களும் ஒடுங்கிவிட்டன. அல்லாஹுத்தஆலாவை எப்படி அறிய வேண்டுமோ அப்படியே அவர்கள் அறிந்துள்ளனர். அவன் மகத்துவத்தின் முன் தலை கவிழ்ந்துள்ளனர். அவன் ஆற்றல் முன் மதிமயங்கி விட்டனர். முஹப்பத்தின் ரசத்தை அவர்கள் பருகிவிட்டனர். நட்பின் சாகாரத்தில் மூழ்கி விட்டனர்.
பின் ஒரு கவிதை பாடினார்கள்,
யா அல்லாஹ்! உனது நேசத்தின்
நினைவலைகள் என்னை
மயக்கி விட்டன. போதை
மயக்கமில்லாத நேசனை
நீ கண்டதுண்டா?
ஒரு கூற்றுண்டு, ஒட்டகத்திற்கு நட்பின் போதை ஏற்பட்டால் நாற்பது நாட்கள்வரை புல் தின்ன மாட்டாது. இரு மடங்கு சுமையை ஏற்றினாலும் அது சுமக்கும். காரணம், அது அதன் காதலியின் நினைவில் மூழ்கி நிற்கின்றது. ஆகவே, புல் தின்பதில் நாட்டமில்லை. அதிக சுமையின் பாரமும் தெரிவதில்லை.
ஒட்டகம் தனது காதலியின் அன்பில் தனது ஆசைகளை துறக்கின்றது. அதிக சுமைகளை சுமக்கின்றது என்றால், எப்பொழுதாவது நீ அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தனது இச்சைகளை ஒதுக்கியதுண்டா? எப்பொழுதாவது ஊண், குடிப்பை தவிர்த்ததுண்டா? அல்லாஹ்வுக்காக எப்பொழுதாவது சுமைகளைத் தாங்கியதுண்டா? எதையும் நீங்கள் செய்யவில்லையாயின் நீங்கள் புரட்டுவாதம் புரிபவராகவே உள்ளீர்கள். உங்களுக்கு இருப்பதிலும் பயனில்லை, மறுமையிலும் மகிமையில்லை, மக்களிடத்திலும் மரியாதையில்லை படைத்தவனிடமும் பயனில்லை.
ஹளரத் அலி ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்,
சொர்க்கத்தை விருப்புபவர் விரைந்து நன்மைகள் செய்து கொள்ளட்டும், நரகத்தை அஞ்சினால் இச்சையை துறக்கவும், எவனிடத்தில் மரணம் உறுதியாகுமோ அவன் உலக இன்பத்தை அழித்துக் கொள்வான்.
ஹளரத் இப்றாஹீம் கவாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இடத்தில் முஹப்பத் என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. முஹப்பத்து என்பது, தனது நாட்டத்தை அழித்தல், அனைத்து பண்புகளையும், தேவைகளையும் சாவடித்தல் தனது இருப்பை சிலேடை என்ற சமுத்திரத்தில் மூழ்கடித்தல் என்று பதில் கூறினார்கள்.


கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.