السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 May 2024

கூட்டு துஆவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தீர்ப்பும் ஓர் ஆய்வு! 3

 

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கூட்டுத்துஆ பற்றிய பத்வாவில், நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிய துஆக்களை தவிர வேறு எந்த துஆக்களையும் ஓதுவது தப்பு என்று குறிப்பிட்டிருந்தனர். இவர்களின் இந்த தப்பான வாதத்தை தக்க ஆதாரத்துடன் ஆய்வு இரண்டில் நிறுவியிருந்தோம்,  அதில் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே நபியவர்களிடம் கேட்காமலேயே ஸஹாபாக்கள் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் புதிய புதிய துஆக்களை உருவாக்கி ஓதினர் என்பதையும், இந்த துஆக்களை நபியவர்கள் செவி மடுத்த போது அதனை பாராட்டியதையும் நாம் நமது ஆய்வில் மிக விளக்கமாக ஆதாரத்துடன் கூறியிருந்தோம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கூட்டுத்துஆ பற்றிய பத்வாவில், நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிய துஆக்களை தவிர வேறு எந்த துஆக்களையும் ஓதுவது தப்பு என்று குறிப்பிட்டிருந்தனர்.
இவர்களின் இந்த தப்பான வாதத்தை தக்க ஆதாரத்துடன் ஆய்வு இரண்டில் நிறுவியிருந்தோம்,
அதில் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே நபியவர்களிடம் கேட்காமலேயே ஸஹாபாக்கள் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் புதிய புதிய துஆக்களை உருவாக்கி ஓதினர் என்பதையும், இந்த துஆக்களை நபியவர்கள் செவி மடுத்த போது அதனை பாராட்டியதையும் நாம் நமது ஆய்வில் மிக விளக்கமாக ஆதாரத்துடன் கூறியிருந்தோம்.
இந்த தொடரில் நபி அவர்களிடம் கேட்காமலேயே ஸஹாபாக்கள் நபியவர்கள் வாழும் போதும், மறைந்த பின்பும்: புதிய, புதிய அமல் இபாதத்தை எப்படி எல்லாம் உருவாக்கி செயல்படுத்தி வந்தனர் என்ற விளக்கத்தை ஆராய்வோம்.
01-அமீறுல் முஃமினின் உத்மான்இப்னு அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலமெல்லாம் நோன்பு நோற்றும் இரவெல்லாம் தொழுதார்கள்.
ஆதாரம்: ஹில்யத்துல் அவ்லியா
பாகம் 01. பக் 56
02- அமீறுல் முஃமினீன் உத்மான் இபுனு அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முற்றுகை இடப்பட்ட போது சிலர் அவர்களை கொல்வதற்கு துடித்தனர் இவர்களைப் பார்த்து அமீறுல் முஃமினீன் அவர்கள் துணைவியார்.
நீங்கள் அவரைக் கொன்றாலும் சரி, விட்டாலும் சரி, அவர் இரவு முழுவதையும் ஒரு ரகாஅத்தில் திருக்குர்ஆனை ஓதி ஹயாத்தாக்குவார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!என்றார்கள்.
03- அமீறுள் முஃமினீன் உமர் பாறூக் ரலியல்லாஹு அன்ஹு இஷா தொழுகையை ஜமாத்தாக தொழுவித்தபின் இல்லம் ஏகி பஜர் வரை தொழுவார்கள்.
ஆதாரம்: பிதாயா வன்நிஹாயா
பாகம்-01 பக் 33
04-ஹளரத் அப்துல்லா இபுனு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரவு பூராகவும் தொழுவார்கள் ஸஹர் நேரம் ஆனதிலிருந்து சுபுஹு வரையில் துஆக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆதாரம்- ஹில்யத்துல் அவ்லியா
பாகம் 01 பக் 303
05- ஹளரத் தமீமுத்தாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ரக்காத்தில் திருக்குர்ஆனை ஓதி முடிப்பார்கள்.
ஆதாரம்: அபூதாவூத் பத்ஹுல் முபீன் ஷரஹில் அர்பஈன்
பக்-108
06- ஹளரத் உமையர் இப்னு ஹானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தினமும் ஆயிரம் ரக்கா தொழுவார்கள் ஒரு லட்சம் விடுத்தம் தஸ்பீஹ் செய்வார்கள்.
ஆதாரம்: திர்மிதி பாடம் அப்வாபித் துஆ
07- ஹளரத் உவைசுல்கர்னி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரவானால் இந்த இரவு ருக்குஉக்ரியது என்று கூறி, விடியும் வரை ருக்குவில் இருப்பார்கள்; மறுநாள் இரவானால், இது சுஜூது கூறியது என்று கூறி விடியும் வரை சுஜூது செய்வார்கள்.
ஆதாரம்: ஹில்யத்துல் அவ்லியா
பாகம் 02 பக் 88
08- ஹளரத் ஆமிர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தினமும் ஆயிரம் ரக்காஅத் தொழுவது என்று தன் மீது கடமையாக்கி கொண்டுள்ளார்.
ஆதாரம்: ஹில்யத்துல் அவ்லியா
பாகம் 02 பக் 88
09- ஹளரத் அல் அஸ்வத் இப்னு யஸீது நக்ஹயீல் கூபிய்யி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தினமும் 700 ரக்அத் தொழுவார்கள்.
ஆதாரம்: அல் இபர்- இமாம் தகபி
பாகம் 01 பக் 86
மிஸ்காதுல் ‌ஜினான் - இமாம் யாபிஈ
பாகம் 01 பக் 156
நபியவர்கள் காட்டித்தராத ஷரியத்தில் கடமை இல்லாத வணக்க வழிபாடுகளை செய்வதோ புதிதாகவோ வணக்க வழிபாடுகளை உருவாக்குவதோ ஷரிஅத்திக்கு முரண் என்றால், மேற்கண்ட ஸஹாபாக்கள், தாபியீன்கள் செய்தது எல்லாம் ஷரீரத்துக்கு முரணான விடயங்களைச் செய்தார்கள் என்று யாராவது கூற முடியுமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்!.
நபியவர்கள் காட்டித் தராத செயலில் ஈடுபடுவது பாவமான காரியம் என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தீர்ப்பு கொடுக்கின்றது என்றால், அந்த பத்வாவின் இலட்சணத்தை பற்றி என்னவென்று கூறுவது?
ஸஹாபாக்களில் சிலர் கடும் தவம் செய்தனர் காலமெல்லாம் நோன்பு நோற்றனர் இரவு முழுவதும் தூங்காது தொழுதனர் இவையெல்லாம் நபி அவர்களிடம் அனுமதி பெற்று செய்யவில்லை இவர்களின் இச்செயல் அவர்களின் ஆரோக்கியத்தை அல்லது குடும்ப வாழ்வை சீர்குலைக்குமாக இருப்பின், அதனைத்தான் தடுத்துள்ளார்கள்.
எடுத்துக்காட்டாக,
அன்னை ஆயிஷாசீத்தீகா ரலியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள்.
ஒரு தினம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள், அப்போது நான் ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தேன்; யார் இவர் என்று நபி அவர்கள் வினவினார்கள்? தூங்காமல் தொழுகின்ற பெண் என்று கூறினேன்.
உங்களால் முடியுமான அளவு அமல் செய்யுங்கள்! அல்லாஹ் மீது ஆணையாக! நீங்கள் சோர்ந்து போகும் வரை அல்லாஹ்வும் சோர்வதில்லை அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான மார்க்கம். தொடர்ச்சியாக செய்யும் அமலாகும். என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் பாகம் 06
பக் 74
ஹளரத் அப்துல்லா இப்னு அம்றுப்னுல் ஆஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
நான் காலமெல்லாம் நோன்பு நோற்றேன், ஒவ்வொரு இரவுமுழுவதும் திருக்குர்ஆனை ஓதுவேன்; இச்செய்தி நபி அவர்களுக்கு ஏத்தி வைக்கப்பட்டதும் என்னை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பி வைத்தார்கள் நான் அவர்களிடம் சென்றேன் நீர் காலமெல்லாம் நோன்பு நோற்பதாகவும், ஒவ்வொரு இரவும் திருக்குர்ஆனை ஓதுவதாகவும் எனக்கு கூறப்பட்டுள்ளது என்றார்கள் உண்மைதான் நபி அவர்களே! நான் அதன் மூலம் நன்மையை தான் நாடினேன் என்றேன்;
நீர் ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் நோன்பு வைப்பீராக என்றார்கள்..
10- ஹளரத் அலீ இப்னு ஹுசைன் இப்னு அலி இப்னு அபீதாலிப் ஆகிய இமாம் சைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு மரணிக்கும் வரை ஆயிரம் றகாஅத் தொழுவார்கள், வணக்க வழிபாடுகள் மூலம் வாழ்க்கையை அலங்கரித்த காரணத்தினால் தான் சைனுல் ஆபிதீன் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார்கள்.
ஆதாரம்: அல் இபர் இமாம் தகபி
பாகம் 01 பக் 111
11- ஹளரத் ஸுலைமானுத்தைமிய்யு ரலியல்லாஹு அன்ஹு பசாராவில் உள்ள பெரிய பள்ளிவாசலான ஜாமியாவில் 40 வருடங்கள் இமாமத் செய்துள்ளார்கள் இக்காலங்களில் இஷா தொழுகையும் சுபுஹுத் தொழுகையும் ஒரே வுழுவில் தொழுவார்கள்.
12- அலி இப்னு அப்துல்லா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு தினமும் 1000 ரக்காத் தொழுவார்கள் அதிகமாக தொழுத காரணத்தினால் "சஜ்ஜாத்" என்று மக்களாள் அழைக்கப்பட்டார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்
ஆதாரம்: தஹ்தீபுத் தஹ்தீப்
பாகம் 01 பக் 358
13- இமாமுல் அஃழம் அபூ ஹனிபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி இரவில் அதிகமாக தொழுவார்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் இஷாவுக்கு எடுத்த வுழுவுடன் சுபுஹு தொழுவார்கள் இரவில் தூங்க மாட்டார்கள் அதிகமாக தொழுத காரணத்தினால் "அல் வதத்" என்று அழைக்கப்பட்டார்கள்.
ஆதாரம்: தஹ்தீபுல் அஸ்மாஈ வல்லுகாத்
இமாம் நவவி, பாகம் 02 பக் 220
இவ்வாறு வணக்கங்களால் இரவையும் பகலையும் உயிர்பித்தவர்களின் வரலாறுகள் நீண்டு கிடக்கின்றன. இவர்கள் ஸஹாபாக்கள், தாபியீன்கள் மத்தியில் மிகச் சிறப்பு பெற்றவர்கள், அறிவிலும், அமலிலும்; பேணுதலிலும் பெயர் பெற்றவர்கள்; மார்க்கத்தை நன்கு விளங்கிய இவர்கள் ஷரிஅத்தில் கடமையில்லாத தொழுகைகளை இவர்களாகவே தொழுதார்கள்.
ஐந்து வேளை ஃபர்லான தொழுகையும், அதனுடன் இணைந்த முஅக்கதாவான முஅக்கதா அல்லாத தொழுகையுடன் இஷ்றாக், லுஹா; அவாபியின்; வித்ரு; தஹஜத்; தராவீஹ்; தஸ்பீஹ் தொழுகைகள் தவிரவேறு எதுவும் ஹதீஸில் குறிப்பிடப்படவில்லை ஆனால் இரவு பூராகவும் கால் வீங்கும் அளவு இவர்கள் தொழுதார்கள் என்றால் அவை அவர்களாகவே வலிந்து எடுத்துக்கொண்ட வணக்க வழிபாடுகள் ஆகும்.
உமது மனைவி மீதும் உம்மைச் சந்திக்க வருவோர் மீதும் உமது உடல் மீதும் உமக்கு பொறுப்புக்கள் உள்ளன! அதனால், நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பை (முறையை) நோபிராக அவர் மனிதர்களில் அதிக வணக்கவாளியாக விளங்கினார்கள்.
தாவூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பு எப்படியானது என்று நபி அவர்களிடம் வினவினேன். அதற்கு ஒரு நாள் நோன்பு நோற்பார் மறுநாள் விடுவார் அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பார் என்று விடை பகந்தார்கள் மீண்டும் பகர்ந்தார்கள்.
திருக்குர்ஆனை ஒரு மாதத்தில் பூரணப்படுத்தும் என்றதும் அதைவிட குறுகிய காலத்தில் ஓத எனக்கு சக்தி உண்டு என்றேன் அப்படியாயின் 20 நாட்களுக்கு ஒரு முறை ஓதி முடியும் என்றார்கள் அதை விடவும் சக்தி எனக்கு உண்டு அல்லாஹ்வின் தூதர் அவர்களே என்றேன் அதற்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை தமாம் செய்யும் என்று கூறிவிட்டு இதைவிட அதிகப்படுத்த வேண்டாம் என்ற பின்,
நிச்சயமாக உமது மனைவியின் கடமை உன் மீது உண்டு உன்னை சந்திக்க வருபவர்களின் கடமையும் உன் மீது உண்டு உமது தேகத்தின் மீதுள்ள கடமை உன் மீது உண்டு. என்றும் கூறியதாக ஹளறத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் பாகம் 08 பக்கம் 42
ஒரு தினம் ஹளரத் சல்மானுள் பாரிஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹளரத் அபூதர்தார் ரலியல்லாஹு அவர்களின் இல்லம் சென்றார்கள். அப்போது ஹளரத் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹுவின் மனைவி பழைய ஆடையை அணிந்திருப்பதை கண்டு உங்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டார்கள்? அதற்கு அம்மாது,
உமது சகோதரர் அபூதர்தாவுக்கு (மதீனாவுக்கு நபியவர்கள் சென்றதும் முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள் இந்த வகையில் ஹளரத் அபூதர்தாவும், ஹளரத் சல்மான் பாரிஸி ரலியல்லாஹூ அன்ஹுமா சகோதரர்களாகும்.) பெண்களில் நாட்டமில்லை, அவர் பகல் பூராகவும் நோன்பு நோற்கின்றார் இரவு முழுவதும் தொழுகின்றார் என்று தனது மணக்குறையை எடுத்துக் கூறியதும்,
ஹளரத் அபூதர் தா ரலியல்லாஹு அன்ஹுவை நோக்கி உமது குடும்பத்தின் கடமையும் உன் மீது உண்டு நீர் தொழு, தூங்கு, நோன்பு பிடி, நோன்பை விட்டுப் பிடி என்று கூறினார்கள்.
இச்செய்தி நபி அவர்களை எட்டியதும் நபியவர்கள் கூறினார்கள்.
சல்மானுக்கு ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது
மற்றொரு அறிவிப்பில்,
ஹளரத் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹுவின் மனைவி தரம் குறைந்த ஆடை அணிந்து சோகத்துடன் இருப்பதை ஹளரத் சல்மான் பாரிஸி ரலியல்லாஹு அன்ஹு அவதானித்த போது காரணம் வினவினார்கள் அதற்கு அம்மாது,
உமது சகோதரருக்கு உலகத்தின் தேவைகள் எதுவும் கிடையாது இரவில் விழித்து தொழுகிறார் பகலில் நோன்பு நோற்கின்றார் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே ஹளரத் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு வந்தார்.
ஹளரத் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு அவரை வரவேற்ற பின் உணவை அவர் முன் வைத்து உண்பிராக! நான் நோன்பாளி என்று ஹளறத் அபுதர் தா ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் அதற்கு சல்மானுல் பாரிஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
நீர் சாப்பிட வேண்டும் என்று உம்மீது நான் சத்தியம் செய்கின்றேன். நீர் சாப்பிடும் வரை நானும் சாப்பிட மாட்டேன் என்று கூறியதும், கூடவே சாப்பிட்டார்.
அன்றிரவு சல்மான் பாரிஸி அவர்கள் அவருடனே தங்கினார்கள் இரவானதும் தொழுவதற்கு தயாரானார்கள் ஹளரத் அபூதர்தா அவர்கள்; சல்மான் பாரிஸி அவர்கள் அவரை தடுத்தார்கள்;
பின் கூறினார்கள்.
அபூதர்தா! உமக்கு உன் ரப்பின் மீதும் கடமைகள் உண்டு! இன்னும் உன் மீதும், உமது குடும்பத்தின் மீதும் கடமையுண்டு! இன்னும் உமது உடல் மீதும் உமக்கு கடமையுண்டு! ஒவ்வொரு கடமையுடையவர்களின் கடமைகளையும் நிறைவேற்று!
நோன்பைப் பிடி! நோன்பை திற! விட்டுவிட்டுப் பிடி! இரவில் தொழு! அது போல் உறங்கு! உனது மனைவியோடு சேர்! என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி ஷரீப், அபுதாவூத், முஸ்லீம்.
ஒரு தினம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்து மக்களுக்கு உபதேசம் செய்தார்கள் உரையில். அவர்களை அதிகமாக (மறுமையைப் பற்றி) அச்சப்படுத்தவில்லை பின் எழுந்து சென்று விட்டார்கள்.
அப்போது அங்கு 10 நபிமணி தோழர்கள் இருந்தார்கள் அவர்களுள் ஹளரத் அலி, ஹளரத் உத்மான் இப்னு மழ்னூன் ஆகியோரும் இருந்தனர், இவர்கள் தங்களுக்கு தாங்களே சில விடயங்களை ஹராமாக ஆக்கிக் கொண்டுள்ளனர்;
எனவே, நாமும் மாமிசம் மாமிசம், குழம்பு உண்பதையும் ஹராமாக்கி தவிர்த்துக் கொள்வோம் என்று கூறிக் கொண்டனர் இதன்படி,
அவர்களில் சிலர் தூக்கத்தை ஹராம் ஆக்கினர் இன்னும் சிலர் பெண்களோடு உறவு கொள்வதை ஹராம் ஆக்கினர் உதுமான் இப்னு மழ்னூலன் பெண்களோடு உறவு கொள்வதை தவிர்த்துக் கொண்டார் இதன்பின் இவர் இவரது மனைவியிடத்தில் நெருங்குவதில்லை
இக்கால பகுதியில் உத்மான் இப்னு மழ்னூன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா சித்திக்கா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சமூகம் வந்தார்கள்.
அவர்களின் கோலத்தைக் கண்ட அன்னையவர்கள் உமது நிறம் கோலம் மாறி நீர் முடியும் சீவாமல் மணமும் பூசாமல் இருப்பதற்கு உமக்கு நேர்ந்தது என்ன?
என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மாது கூறினார்.
எனது கணவர் என்னோடு உறவு வைப்பதில்லை. இன்ன இன்ன நாட்களிலிருந்து எனது கீழ் ஆடையை உயர்த்தியதில்லை. அப்படியிருக்க , நான் எப்படி முடிவாரி மணம் பூசுவேன்? என்றார்;
அவர் பேச்சைக் கேட்டதும் அன்னை ஆயிஷா அவர்களும் அவர்களுடன் கூட இருந்தவர்களும் கொல்லென சிரித்தனர்.
இதுவேளை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உள்ளே நுழைந்தார்கள் அப்போது அவர்கள் சிரித்துக் கொண்டே இருந்தனர் நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று நபி அவர்கள் வினவினார்கள்
அல்லாஹ்வின் திருத்தூதரே இதோ ஹவ்லா இருக்கின்றார். அவரின் மாறுதலான நிலை பற்றி கேட்டோம் அதற்கு இன்னின்ன காலமாக அவர் கணவர் அவர் கீழ் ஆடையை உயர்த்தியதில்லையாம் என்று கூறுகிறார். (அது கேட்ட நாங்கள் சிரித்தோம் என்று கூட்டாக அனைவரும் கூறினார்கள்.)
உடனே உஸ்மான் அவர்களை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார்கள் அவர் வந்தார் அவரைப் பார்த்து உதுமானே! உமக்கு என்ன நேர்ந்தது? என்று நபி அவர்கள் கேட்டதற்கு உதுமான் றழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
நான் வணக்க வழிபாட்டில் ஈடுபடுவதற்காக பெண்களோடு உறவு வைப்பதை தவிர்த்துள்ளேன். என்று தன் கதையை விவரித்தார்.
உதுமான் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் விதை அடிப்பதற்கும் விரும்பினார் உடனே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நீர் உமது மனைவியுடன் உடன் சென்று மனைவியோடு உடல் உறவு கொள்ள வேண்டும் என்று உன் மீது சத்தியம் செய்கின்றேன்.
அல்லாஹ்வின் திருத்தூதரே! நான் நோன்பு வைத்துள்ளேன் என்று உஸ்மான் அவர்கள் கூறியதற்கு நீர் நோன்பை முறித்துக் கொள்! என்றார்கள் அவர் முறித்தார், மனைவியோடு சேர்ந்தார்.
மறுநாள், ஹவ்லா அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தலைவார்ந்து மணம் பூசி சுருமா இட்டு அழகாக வந்தார், அவரை கண்டதும் அன்னை ஆயிஷா அவர்கள் புன்முறுவல் பூர்த்துத்துவிட்டு உமக்கு என்ன நடந்தது என்று விசாரித்தார்கள்?
அதற்கு என் கணவர் என்னிடம் வந்தார் என்றார்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
பெண்களையும், உணவையும் தூக்கத்தையும் ஹராமாக ஆக்கிக் கொண்ட ஒரு கூட்டத்திற்கு என்ன நடந்தது? அறிக! நான் உறங்குகின்றேன், இரவில் தொழுகின்றேன்; நோன்பு நோற்கின்றேன்; நோன்பை விடுகின்றேன்; பெண்களை திருமணம் செய்கின்றேன் எனவே,
"எவர் தனது சுன்னத்தை வெறுத்தாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல! என்று கூறினார்கள்.
உடனே பின்வரும் திருவசனம் இறங்கியது.
"அல்லாஹ் உங்களுக்கு ஹலால் ஆக்கியதில் மணமானதை நீங்கள் ஹராமாக ஆக்க வேண்டாம்"
அல்குர்ஆன் (4:87)
ஆதாரம்: தப்ஸீர் இப்னு ஜரீர் பாகம் 03 பக் 07
மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் நபியவர்கள் உயிருடன் வாழும் போதே ஸஹாபாக்கள் புதிய புதிய அமல்களை கடைபிடித்து வந்துள்ளனர், ஆனால், இவர்களின் அமல்கள் எல்லை தாண்டி தனது ஆரோக்கியத்திற்கும், மற்றவர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும் அமையும் போது தடுக்கப்பட்டனர்.
இவ்விரு காரணங்களும் காண படாவிட்டால், அவர்கள் புதிதாக உருவாக்கிய இபாதத்துக்கள் ஆகுமாகும்.
எனவே,
புதிய புதிய அமல்கள் செய்வதற்கும், நன்மையான காரியங்களை செய்வதற்கும் ஆதாரம் அவசியம் என்றும், ஆதாரமில்லாத நற்செயல்கள் செய்யக்கூடாது என்று கூறுவதும்; நபியவர்கள் செய்ததைத் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறுவதும்; ஷரீஅத்தைப் புரிந்து கொள்ளாத மூடர்களின் கூற்றாகும்.
நபியவர்கள் ஓதாத, செய்யாதவைகளை ஸஹாபாக்களோ, தாபியீன்களோ ஓதவும் இல்லை; செய்யவும் இல்லை என்று அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை கூட்டு துஆ பற்றிய அவர்களின் தீர்ப்பில் கூறியிருப்பது எவ்வளவு தவறானதும்,மக்களை வழிகெடுக்கு அவர்கள் கையாண்ட இழிசெயல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்!
மதரசாவில் ஓதுகின்ற சாதாரணமானவனுக்கு கூட தெரிந்திருக்க வேண்டிய பல விடயங்கள் பொறுப்பு வாய்ந்த ஒரு சபையின் செயலாளருக்கும், ஃபதுவாக் குழுவுக்கும் தெரியாமல் போய்விட்டதே! சாதாரண விடயங்களை கூட புரிந்து கொள்ள முடியாதவர்கள் தீர்ப்பு கூற முற்பட்டால், சமுதாயம் எப்படி நேரிய பாதையில் செல்ல முடியும்?.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் போக்கிரித்தனமான ஃபத்வாவின் அடுத்த கட்ட ஆய்வை வரும் தொடரில் எதிர்பாருங்கள்!
இன்ஷா அல்லாஹ்!



கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.