السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 14 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.தொடர் 5

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.             தொடர் :- {5}

 கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,

மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி

கபனிடல்:
-------
கபனில் மூன்று வெள்ளைத் துணி சுற்றுக்கள் வாஜிபாகும், இதுதான் ஆணுக்கு சிறந்தது; பெண்ணுக்கு சாறன், பின் முக்காடு பின் கமீஸ், அடுத்து இரண்டு சுற்றுக்கள் சிறப்பாகும்; மைய்யித்திற்கான சுத்தம்; குளிப்பு; தயம்மம்; உள்ளிட்டவைக்குப் பின், கபன் அணியவேண்டும்.
கபன் துணி புதிதாக இல்லாமல் கழுவிய பாவித்த வெள்ளைத் துணியாக இருப்பது சுன்னத்தாகும்,
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
البسوا من ثيابكم البياض فانها خير ثيابكم وكفنوا فيها موتاكم .
வெள்ளைத்துணியை அணியுங்கள், அதுதான் உங்களுக்கு சிறந்த ஆடையாகும்; உங்களுடைய மரணித்தவர்களுக்கும் அதிலேயே கபனிடுங்கள்.
உயிரோடு வாழும் காலத்தில் பாவிப்பதற்கு ஹலாலானதும் ஆகுமானதுமான பழைய துணியால் கபன் செய்தல் வேண்டும்; இதுவல்லாத பாவித்த துணிகளால் கபன் செய்வது மக்றூஹாகும்; பெண்கள், பருவமடையாத சிறுவர்களுக்கு உயிருள்ள காலத்தில் பட்டாடை அணிவது ஹலாலாக இருப்பதால் இவர்களுக்கு பட்டால் கபன் செய்வது மக்றூஹோடு சேர்த்து ஹலாலாகும்; கபனில் கடப்புச்செய்வதும், அவசியத்திற்கு அப்பால் அதிகமாக செலவு செய்வதும் மக்றூஃ ஆகும்;
لا تغالوا في الكفن فانه يسلب سريعا ،
கபனில் கடப்புச் செய்ய வேண்டாம், நிச்சயமாக அது விரைவாக உரியப்படும்; அதாவது மறைந்து போய்விடும்.
பெண்ணுக்கும், சிறுவர்களுக்கும் தங்க, வெள்ளிஆபரணம் அணிவது ஆகுமாக இருப்பதால்,
வாரிசுகள் அனைவரும் விரும்பினால், நகையணிவித்து அவற்றோடு நல்லடக்கமும் செய்யலாம்; இதை பணவிரயம் ஹறாம்; ஆகாதது என்று கூறமுடியாது; நோக்கமில்லாமல் பணவிரயம் செய்வதுதான் ஹறாமாகும்;, மைய்யித்தைக் கண்ணியப்படுத்தும் நோக்கம் இங்கிருப்பதால் மக்றூஹோடு ஆகுமாகும்; (பாஜூரி, ஷறஹ் இப்னு காஸிம்: பாகம்1 பக்கம்322)
கபனின் அளவு:
---------------
ஆண், பெண்; பருவமடைந்தவர், பருவமடையாதவர்; உள்ளிட்ட இவர்களனைவரின் மைய்யித்திற்கும் மூன்று சுற்றுள்ள கபன் வாஜிபாகும்; ஒவ்வொரு சுற்றின் அளவு மைய்யித்தின் உடலை முழுமையாக மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்; ஆணுக்கு இம்மூன்று சுற்றுக்களால் கபனிடுவது வாஜிபாகும்; இதுதான் சிறப்பும் கூட; இதைவிட அதிகப்படுத்துவதில் மக்றூஃ கிடையாது ஏற்றத்திற்கு மாற்றமாகும்;
மேலதிகமாக சேர்ப்பதில் சிறந்த விதமாவது மூன்று சுற்றில் ஒன்றை சற்று கட்டையாக்கி சாறன், கமீஸ், இன்னும் தலைப்பாகையை அதிகப்படுத்தலாம்; மொத்தம் ஐந்து ஆடைகளாகிவிடும்; ஆயினும் ஆணுக்குச்சிறப்பு அதே மூன்று சுற்றுக்களாகும்; மைய்யித் இஹ்றாமுடைய நிலையிலிருந்தால், கமீஸ், தலைப்பாகை உள்ளிட்டவையைச் மேலதிகமாக சேர்க்கக்கூடாது;
பெண்ணுக்கு மூன்று சுற்றுக்களுக்குரிய கபன் வாஜிபாகும், ஆயினும் ஐந்து துணிகளிலான கபன் சிறப்பாகும்; சாறன், பின், முக்காடு, பின் கமீஸ் பின் இரு சுற்றுக்களாகும்; சாறன் என்பது தொப்புளுக்கும், முட்டுக்காலுக்கும் இடைப்பட்டதை மறைக்கக்கூடியதை இடுப்பில் கட்டுவதற்குக் கூறப்படும்; முக்காடு என்பது; பெண்ணின் முடியை மறைக்கக்கூடியதாகும்;
மைய்யித்தின் பணத்திலிருந்து கபன் செய்வதாயின், ஆணுக்கு வாஜிபும், சிறப்பும் மூன்று சுற்றுக்களாகும்; இன்னும் பெண்ணுக்கு மூன்று சுற்றுக்கள் சிறப்பு மொத்தம் ஐந்து துணிகளாகும்; மைய்யித்தின் பணத்தில் கபன் செய்யாமல் அவரைப்பராமரிக்கும் பொறுப்புள்ளவரின் செலவாக இருந்தால், அல்லது, பைத்துல் மாலிலிருந்து கபன் செய்யப்பட்டால், அல்லது இவ்வாறானவற்றுக்கு வக்பு செய்யப்பட்டதிலிருந்தால் அல்லது ஊர்மக்களின் செலவிலிருந்தால்; கடன்காறன் அவ்றத்தை மட்டும் மறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினாலும் கூட ஒருதுணியால் கபன் செய்ய வேண்டியது வாஜிபாகும்; கடன்காறனின் பொருத்தத்தோடு மூன்று துணிகளால் கபன் செய்யமுடிம்.
அவ்றத்தை மறைக்கும் கபன் அல்லாஹ்வுக்கு மட்டுமான உரிமையாகும், அவ்றத்தை மறைப்பது தாண்டி உடல் முழுவதற்குமான கபன் மைய்யித்தின் உரிமையாகும்; மேலும் அதில் அல்லாஹ்வின் உரிமையும் சேர்ந்திருக்கின்றது; இரண்டாவதும் மூன்றாவதுமான கபன் மைய்யித்திற்கு மட்டுமான உரிமையாகும்.
நறுமணம்:
---------
மைய்யித்திலும், கபனிலும் கற்பூரம், அத்தர்; சந்தணம் மற்றும் பாவிப்பதற்கு ஆகுமான வாசம் உள்ளிட்டவையை பாவிப்பது சுன்னத்தாகும், ஒரு நிபந்தனை! மைய்யித் இஹ்றாம் அணிந்தவராக இருக்கக்கூடாது; மூட்டுக்களிலும்; வெட்கத்தலங்களிலும் வாசம் கலந்த பஞ்சுகளை வைக்க வேண்டும்; இரு துவாரங்களையும் சேர்த்து துணியால் கச்சை கட்ட வேண்டும்;
உடலிலுள்ள துவாரங்களான விழிகள், மூக்கு; இரு காதுகள் உள்ளிட்டவையில் பஞ்சுகளை வைத்து அதில் வாசமிடவேண்டும் ஸஜதாச்செய்யுமிடம்; நெற்றி, கன்னங்கள்; விரல்களுக்கிடையில்; மூட்டு; கம்முகட்டுகளுக்கிடையில்; இன்னும் காலின் விரல்களுக்கிடையிலும் பாதத்திலும் பஞ்சுவைத்து அதில் அத்தர் சேர்க்க வேண்டும்.
கபன் செய்யும் முறை:
------------------
சுன்னத்தான விடயம் யாதெனில், முதன் முதலில் மூடக்கூடிய துணியை கபன் செய்யும் இடத்திற்குக்கீழ் வைப்பது நல்லது, இன்னும், மிச்சமுள்ள மூடக்கூடிய துணிகளை அதற்கு மேல் விரிக்க வேண்டும்; இன்னும், இவையனைத்துக்குமேல், மைய்யித்தை மல்லாக்க வைக்க வேண்டும்; இரு கைகளையும் நெஞ்சுக்குக் கீழ் இடது கைக்கு மேல் வலது கையை வைக்க வேண்டும்; அல்லது இரு கைகளின் புயங்களிலே விட்டுவிடவேண்டும்; இன்னும் பஞ்சை வைத்து அதில் மணம் போடவேண்டும்;
ஆணுக்கு முதலில் கைலி (சாறன்) பின், கமீஸ் அணியவேண்டும்; இன்னும் தலைப்பாகை அணியவேண்டும்; பின்னர் இரண்டு மூடக்கூடியதுணியால் மூடவேண்டும்; பெண்ணுக்கு முதலில் சாறன், பின் கமீஸ்,பின் முக்காடு பின்னர் மூடக்கூடிய இரு துணிகளால் சுற்ற வேண்டும்; மூடக்கூடிய துணியில் வலது பாகத்தை முதலில் மடிக்கவேண்டும்; பின்னர் இடது பாகத்தை அதற்கு மேலால் சுற்ற வேண்டும்; இவ்வாறு இரண்டாவது துணியையும் செய்ய வேண்டும்;
மைய்யித்தை எடுத்துச் செல்லும் போது ஆடாமல் அசையாமலிருப்பதற்காக துணியின் நீளமான பகுதியை தலைக்கு மேலாலும், இடுப்பிலும்; கால்பகுதியிலும் கட்ட வேண்டும்; இஹ்றாம் கட்டிய மைய்யித்தை இவ்வாறு கட்டாமல் பெண்ணின் முகமும் ஆணின் தலையும் திறந்திருக்க வேண்டும்;
கப்றுக்குள் மைய்யித்தை வைத்ததும் இடுப்பின் கட்டைத்தவிர்த்து ஏனைய
கட்டுக்களை அவிழ்க்க வேண்டும்;
கபனில் திருக்குர்ஆன் வசனங்களையோ அல்லது பறக்கத் பொருந்திய திருநாமங்களையோ மைய்யித்தின் ஊனம் படாதிருக்க கண்ணுக்குத் தெரியும் படியாக எழுதக்கூடாது! பன்னீரால் எழுதுவது ஆகும்;
இவ்வாறு அஹது நாமா போன்றதையும், அல்லாஹ்வுக்கு இரக்கம் வரக்கூடியதும், மன்னிப்பை ஏற்படுத்தக்கூடியதுமான கவிதைகளை எழுதி ஊனம்படாதவாறு வைப்பது அவசியம்; இவ்வாறுதான் பைஅத் எடுத்த தரீக்காவின் ஸில்ஸிலாவையும் ஊனம் படாத விதத்தில் வைக்கலாம்; இந்த நடைமுறை மக்களிடம் காணப்படுகின்றது!
(இதுபற்றிய விரிவான விளக்கம் தனி நூலாக நமது ஜாஅல்ஹக் அசத்தியம் அழிந்தது!, என்ற நூலில் பார்க்கலாம்.)
தொடரும்