السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 14 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.தொடர் 2

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும். தொடர் :- {2}

 கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,

மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.
குளிப்பாட்டல்
-----------------
முஸ்லிம் மையித்தைக் குளிப்பாட்டுவது வாஜிபாகும், மௌத்தின் காரணமாக மைய்யித்தின் உடல் அசுத்தமாகிவிட்டது என்பதற்காக அல்லாமல் மைய்யித்தின் உடலை சுத்தப்படுத்துவதற்காக குளிப்பாட்டப்படுகின்றது; மேலும், மனித உடலின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு மைய்யித்தைக் குளிப்பாட்டுவதை வாஜிபாக்கப்பட்டுள்ளது; குளிப்பில் மிகக் குறைந்த அளவு மைய்யித்தின் உடல் முழுவதுமாக நீரை செலுத்துவதாகும்; முழுமையான குளிப்பு என்பது, முதலில் நஜீஸை நீக்கவேண்டும்; பின்னர் வுழுச்செய்ய வேண்டும் இன்னும், குளிப்பாட்ட வேண்டும்.
நஜீஸை அகற்றல்:
--------------------
மைய்யித்தை குளிப்பாட்டும் இடத்திற்குக் கொண்டு வந்த பின், வயிற்றினுள் இருக்கும் நஜீஸை அகற்றுவதற்காக மைய்யித்தின் கழுத்திற்குக் கீழ்பகுதியை இடது கையாலும் தலையை விரல்களாலும் தாங்கியவாறு மைய்யித்தை சற்று குனிய வைத்து இடது கையால் மைய்யித்தின் வயிற்றிலுள்ள மலம், ஜலம் வெளியேறுவதற்காக இலேசாக பல முறை உருவ வேண்டும்; பின்னர் மைய்யித்தை படுக்க வைத்து இடது கையில் துணியைச் சுற்றி இலேசாக இரு வெட்கத்தலங்களையும் கழுவ வேண்டும்;
பின்னர், துணியைக்களட்டி விட்டு இடது கையை சுத்தம் செய்து விட்டு மற்றுமொரு துணியைச்சுற்றி கலிமா விரலால் மைய்யித்தின் பல்லையும், துணியையும் சுத்தம் செய்ய வேண்டும், இன்னும், மைய்யித்திற்கு வுழுச்செய்ய வேண்டும்; குளிப்பாட்டிய பின் மேலதிகமாக நஜீஸ் வெளியேறினால், அதனை தொழுவதற்கு முன் கழுவது வாஜிபாகும்; தொழுகைக்குப் பின் சுன்னத்தாகும்; நஜீஸ் வெளியேறுவது நிற்காவிட்டால், உயிரோடு இருக்கும் போது தொங்கு நீர் (ஸலஸல்பௌல்) போன்ற நிலையிலேயே குளிப்பும், தொழுகையும் நிறைவேறிவிடும்; ஆயினும் நஜீஸ் உள்ள இடத்தை துணியால் கட்டி முடிந்தவரை தொழுகையை விரைவுபடுத்த வேண்டும்; குளிப்பாட்டும் நீர் உடல் முழுவதும் போய்ச் சேர வேண்டியதால் வெளியிலுள்ள நஜீஸை அகற்றுவது ஷர்த்தாகும்.
வுழு:
------
உயிரோடு இருக்கும் போது குளிப்புக்கு முன் வுழுச்செய்வது சுன்னத்தாக இருப்பது போன்று மைய்யித்திற்கு வுழுச்செய்விப்பதும் சுன்னத்தாகும்;, ஆயினும் நிய்யத் வைப்பது வாஜிபாகும்; காரணம், வுழு என்பது வணக்கத்தோடு தொடர்பான கருமம்; வணக்கத்தோடு தொடர்பான கருமம் நிய்யத் இல்லாமல் நிறைவேற மாட்டாது; ஆகவே, "இந்த மைய்யித்திற்கான சுன்னத்தான வுழுவை நிய்யத் செய்கின்றேன்" என்று நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும்;
வுழுவின் உறுப்புக்களை மும்மூன்று விடுத்தம் கழுவ வேண்டும், வாய்கொப்பளிப்பதையும், நாசிக்கு நீர் செலுத்துவதையும் செய்ய வேண்டும்; மைய்யித்தின் முகத்தையும், மூக்கையும் சுத்தம் செய்யும் போது நீர் உட்செல்லாதிருப்பதற்காக முகத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்; ஆகவேதான் வாய் கொப்பளிப்பதிலும், நாசிக்கு நீர் செலுத்துவதிலும் கடப்புச் செய்வது மைய்யித்திற்கு சுன்னத்தாக்கப்படவில்லை; வுழுவுக்குப்பின் குளிப்பாட்ட வேண்டும்.
குளிப்பாட்டல்:
-----------------
மைய்யித்தைக் குளிப்பாட்டுவது வாஜிப், ஆனால் வுழுவுக்கு மாறாக குளிப்புக்கு நிய்யத் வைப்பது சுன்னத்தாகும்; மைய்யித் நீரில் மூழ்குவதால் பர்ளுக்கிபாயா நிறைவேறாது; காரணம் இச்செயல் முகல்லபின் செயலாக இல்லை; குளிப்பு வணக்கத்தோடு தொடர்பான செயலாகும்; முகல்லபின் செயலின்றி அது நிறைவேறாது;
இதற்கு மாறாக கபன்செய்வதும், நல்லடக்கம் செய்வதும் வணக்கத்தோடு தொடர்பான கருமமல்ல; ஆதலால் மனித செயலல்லாத செயலாலும் அவை பூரணமாகிவிடும்; எவராவது ஒருவர் தனது மைய்யித்தை தானே தனது கறாமத்தால் குளிப்பாட்டினால் போதுமாகும்; காரணம் அது முகல்லபின் செயலாகும்; மைய்யித்தின் இயலாமையால்தான் அடுத்தவரின் பொறுப்பில் அச்செயல் மீளுகிறது; மாபெரும் வலிமார்களான செய்யித் அஹ்மதுல் பதவி, அப்துல் லாஹில் மன்னானி றஹிமஹுமுல்லா உள்ளிட்டோர் தங்களுக்கு தாங்களே குளிப்பாட்டிக்கொண்டார்கள்; தமிழகத்தில் பீர் முஹம்மது அப்பா வலியுல்லாஹ் அவர்களும் தங்களுக்கு தாங்களே குளிப்பாட்டிக் கொண்டார்கள்; ஸெய்யிதத்துனா பாதிமத்துஸ்ஸஹறா றழியல்லாஹு அன்ஹா தங்களின் கஷ்பின் வெளிச்சத்தின் மூலம் தனது றூஹ் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து தங்களுக்கு தாங்களே குளிப்பாட்டி மணமும் பூசிக்கொண்டு கபனையும் அணிந்த பின், தன்னை குளிப்பாட்ட வேண்டாம் என்று கூறினார்கள்.
நிய்யத்:
---------
இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபிஈ றஹிமஹுமுல்லாஹ் உள்ளிட்டோரின் கூற்றுப்படி, குளிப்பாட்டுபவர் நிய்யத் வைக்க வேண்டும் என்பது வாஜிபில்லை, ஏனெனில் குளிப்பாட்டுவதன் நோக்கம் சுத்தம் செய்வதாகும்; சுத்தம் செய்வது நிய்யத் இன்றி நிறைவேறும்; இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ் குளிப்பின் நிய்யத் வாஜிப் என்கின்றார்கள்; ஏனெனில், குளிப்பாட்டுபவர் சுத்தத்தில் நிய்யத்தின் தரப்பில் பகரம் செய்கின்றார்; இன்னும், சுத்தம் என்பது ஸாலிஹான செயலாகும்; ஸாலிஹான எந்த செயலும் நிய்யத்தின்றி நிறைவேறாது என்பது இவர்களின் வாதமாகும்;
குளிப்பின் நிய்யத்:
----------------
نويت اداء الغسل من هذاالميت ، او نويت ايتباحة الصلاة الميت
இந்த மைய்யித்தைத் தொட்டும் குளிப்பை நிறைவேற்ற நிய்யத் செய்கின்றேன், அல்லது,
இந்த மைய்யித்தின் மீது தொழுகையை ஆகுமாக்கத்தேட நிய்யத் செய்கின்றேன்.
என்று நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும்.
தயம்மம்:
-----------
தண்ணீர் கிடைக்காவிட்டால், அல்லது குளிப்பாட்ட முடியாத அளவு மைய்யித் கரிந்து போனால் குளிப்புக்குப் பதிலாக தயம்மம் செய்ய வேண்டும், தயம்மமுக்கு நிய்யத் வாஜிபல்ல;, சுன்னத்தாகும்; தயம்மமுக்கு நிய்யத் வாஜிப் என்று கூறும் சிலர் பின்வரும் காரணத்தைக் கூறுகின்றனர்; தயம்மம் பலவீனமான சுத்தமாகும்; அதைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்;
ஆண் மைய்யித்தைக் குளிப்பாட்ட ஆணும், பெண் மைய்யித்தைக்குளிப்பாட்ட பெண்ணும் அல்லது மஹ்றமிய்யான ஆணும், பெண்ணும் இல்லாத சந்தர்பத்தில் மைய்யித்தைக் குளிப்பாட்டுவதற்குப் பதிலாக தயம்மம் செய்யவேண்டும்; அதுவும் திரையின் மூலமாகவே செய்ய வேண்டும்; இச்சையின் எல்லையைத்தொடாத சிறுவர் சிறுமிகளை இருவரும் குளிப்பாட்ட முடியும்.
குளிப்பாட்டுபவர்:
----------------------
ஆண் மைய்யித்தை ஆணும், பெண் மைய்யித்தை பெண்ணும் குளிப்பாட்டுவது ஏற்றமாகும், ஓர் ஆண் தனது மனைவியின் மைய்யித்தையும், ஒரு பெண் தனது கணவரின் மைய்யித்தையும் குளிப்பாட்ட முடியும், ஆனால் ஒரு நிபந்தனை தொடக்கூடாது! தொடுவதால் குளிப்பாட்டுபவரின் வுழு முறிந்து விடும்; மைய்யித்தின் இனம் சார்ந்த மனிதர்கள் இல்லாவிட்டில், அதாவது, மைய்யித் ஆண் அந்நிய பெண் இருக்கிறாள்; மைய்யித் பெண் அன்னிய ஆண் இருக்கின்றார் அதாவது மஹ்றமியான உறவினர்கள் இல்லை எனில் மைய்யித்தைக் குளிப்பாட்டாமல் திரை ஊடாக தயம்மம் செய்ய வேண்டும்; ஆயினும், மன்னிக்கப்படாதளவு நஜீஸ் உடலில் காணப்பட்டால் அதைக்கழுவி நீக்க வேண்டும்; குளிப்பாட்டுபவரின் சுத்தம் நிபந்தனையல்ல! ஜனாபத் மற்றும் ஹைழுடைய நிலையில் குளிப்பாட்டுவது மக்றூஃ அல்ல!
குளிப்பாட்டுபவரின் படித்தரங்கள்.
------------
ஆண் மைய்யித்தைக் குளிப்பாட்டுவதற்கு ஜனாஸாத் தொழுகைக்கு இமாமத் செய்வதற்குத் தகுதியானவர் ஏற்றமாகும், ஆண் மைய்யித்தை குளிப்பாட்டும் விடயத்தில் அன்னிய பெண்ணுக்கு முன்னால் ஆண்மூலம் குளிப்பாட்டுவது வாஜிபாகும்; மஹ்றமியான பெண்ணுக்கு முன்னால் ஆண் குளிப்பாட்டுவது சுன்னத்தாகும்; இவ்வாறு, பெண் மைய்யித்தைக் குளிப்பாட்டுவதில் அன்னிய ஆணுக்கு முன்னால் பெண் குளிப்பாட்டுவது வாஜிபாகும்; மஹ்றமான ஆணுக்கு முன்னால் பெண் குளிப்பாட்டுவது சுன்னத்தாகும்;
குளிப்பாட்டுவதிலும், தொழுவிப்பதிலும் ஏற்றமானவர்களின் படித்தரங்கள் வருமாறு,
முதன்முதலில் நஸபில் அஸபாக்களுக்கான உறவு வைத்துக்கொள்ளும் ஆண்களின் தர வருசை வருமாறு
முதலில் தந்தை , அடுத்து பாட்டன்; இவ்வாறு மேல்நோக்கிச் செல்லும்; பின், மகன் அடுத்து பேரன்; இவ்வாறு கீழ் நோக்கிச் செல்லும்; அடுத்து தாய், தந்தை வழி உடன் பிறந்த சகோதரன்; அடுத்து தந்தை அல்லது தாய் வழிச் சகோதரன்; பின், தாய் தந்தை வழி உடன் பிறந்த சகோதரனின் மகன் பின், தாய் அல்லது தந்தை வழிச் சகோதரனின் மகன்; பின் எதார்த்தமான சாச்சா பின் உறவுமுறை சாச்சா பின் எதார்த்தமான சாச்சாவின் மகன்; பின் உறவுமுறை சாச்சாவின் மகன் பின் உறவு முறையிலுள்ளவர்கள் இந்த ஒழுங்கில் இருப்பார்கள்;
இதற்குப்பின், இமாம், அல்லது இமாமின் பிரதிநிதி; இதற்குப்பின் குடல்வழி உறவுகள்; குடல்வழி உறவில் நெருக்கத்தினடிப்படையில் முன்னுருமை வழங்கப்படும்; முதலில் தாயின் தந்தை, பின் தாயின் சகோதரன்; பின் மகளின் மகன்; பின் தாய் மாமா பின் தாயின் சாச்சா குடல் வழி ஊறவுக்குப் பின் அன்னிய ஆண்களின் படித்தமாகும்; பின் மனைவி; பின் மஹ்றமியான பெண்கள்;
உறவுமுறையில் குளிப்பின் சட்டங்களை அதிகம் தெரிந்தவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; தொழுகையில் உறவோடு வயதிலுள்ளவரில் கண்ணியமானவரை முற்படுத்த வேண்டும்; வயதான மனிதரின் மனதில் இரக்கமிருக்கும்; இரக்கத்தினடிப்படையில் துஆ கபூலாகுவதற்கு நெருக்கமாகும்.
பெண் மைய்யித்தைக் குளிப்பாட்டுவதில் அவரின் நெருங்கிய உறவுமுறைப்பெண்ணுக்கு முதலிடமுண்டு, இவர்களிலும் மஹ்றமிய்யத்தான பெண்ணுக்கு முன்னுரிமை வழங்கப்படும்; மஹ்றமியத்தான பெண் என்பது மரணித்தவர் ஆணாக வைத்துக்கொண்டால், திருமணமுடிக்க ஹறாமானவர்கள்; எடுத்துக்காட்டு: மகள், தாய்; சகோதரி; சாச்சாவின் மகள் சகோதரி இதற்குள் வரமாட்டாள்;
இதற்குப்பின், அன்னிய பெண்களின் படித்தரங்களாகும், இவர்கள் அனைவருக்கும் பின்புதான் கணவனுக்குரிய தகுதி வருகின்றது, இதற்குப் பின் மஹ்றமான ஆண்களின் படித்தரமாகும்; இன்னும் சம படித்தரத்திலுள்ளவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் சீட்டுக்குலுக்கு தேர்வு செய்யப்படும்.
தொடரும்...