السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 May 2024

கூட்டு துஆவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தீர்ப்பும் ஓர் ஆய்வு! 2

 

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கூட்டு துஆ பற்றிய பத்வாவில் பின்வரும் விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 1- நபியவர்கள் ஓதாத அல்லது, ஓதிக் காட்டாதவைகளை ஓதக்கூடாது. 2- நபியவர்கள் காட்டித்தராத செயலில் ஈடுபடுவது பாவமான காரியமாகும். கூட்டுத் துஆ நபியவர்கள் காலத்திலோ, ஸஹாபாக்கள் அல்லது, தாபியீன்கள் காலத்திலோ இருக்கவில்லை. ஆகவே, தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதுவது கூடாது.!  கூட்டு துஆ என்பதற்கு இவர்கள் முன்வைத்த பிரதான காரணம் இதுதான் இக்காரணம் நியாயமானதா? இக்காரணத்தை ஷரியத் அங்கீகரிக்கின்றதா? என்பதை ஆராய்வோம். முதலில் அகில இலங்கை ஜம்மியத்தில் உலமா சபையின் பத்வாவில் குறிப்பிடப்பட்டுள்ள நியாயங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்வோம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கூட்டு துஆ பற்றிய பத்வாவில் பின்வரும் விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
1- நபியவர்கள் ஓதாத அல்லது, ஓதிக் காட்டாதவைகளை ஓதக்கூடாது.
2- நபியவர்கள் காட்டித்தராத செயலில் ஈடுபடுவது பாவமான காரியமாகும்.
கூட்டுத் துஆ நபியவர்கள் காலத்திலோ, ஸஹாபாக்கள் அல்லது, தாபியீன்கள் காலத்திலோ இருக்கவில்லை. ஆகவே, தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதுவது கூடாது.!
கூட்டு துஆ என்பதற்கு இவர்கள் முன்வைத்த பிரதான காரணம் இதுதான் இக்காரணம் நியாயமானதா? இக்காரணத்தை ஷரியத் அங்கீகரிக்கின்றதா? என்பதை ஆராய்வோம்.
முதலில் அகில இலங்கை ஜம்மியத்தில் உலமா சபையின் பத்வாவில் குறிப்பிடப்பட்டுள்ள நியாயங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்வோம்.
1- நபியவர்கள் ஓதாத அல்லது ஓதி காட்டித் தராதவைகளை ஓதக்கூடாது.
இதற்குப் பதில் காணும் முன், இஸ்லாத்தின் அடிப்படை பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்? என்பதை கவனியுங்கள்!.
"ஏதாவது ஒன்றை உங்களுக்கு விலக்கி இருந்தால், தவிர்த்து கொள்ளுங்கள்.! ஏதாவது ஒன்றை உங்களுக்கு ஏவி இருந்தால் அதில் நீங்கள் முடிந்த அளவு எடுத்து நடவுங்கள்"
ஆதாரம்: புகாரி ஷரீப்,
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
2- அல்லாஹ் அவன் வேதத்தில் எதை ஹலால் ஆக்கினானோ அதுதான் ஹலால்!, அவன் ஹராமாக ஆக்கியது தான் ஹராம்! (ஹராம் ஹலால் என்று கூறாது) மௌனம் சாதித்தவை மன்னிப்புக்குரியதாகும்.
பஸ்ஸார், தப்றானி.
அறிவிப்பாளர்: அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு
3- அல்லாஹ் சில பர்ளுகளை பர்ளாக்கியுள்ளான், அதனை பழுதாக்கி விட வேண்டாம். இன்னும் சில எல்லைகளை ஏற்படுத்தியுள்ளான். அதனை தாண்ட வேண்டாம். இன்னும் சில விடயங்களை ஹராமாக ஆக்கியுள்ளான். அதைக் கடக்க வேண்டாம். சில விடயங்களை தொட்டும் மறதி இல்லாமல் உங்களில் ரஹ்மத் ஆகவே அமைதிப்படுத்தி உள்ளான் அது பற்றி ஆராய வேண்டாம்.
தாறக்குத்னி
அறிவிப்பாளர்: அபூதஃலபா ரலியல்லாஹு அன்ஹு
ரஸுல் உங்களுக்கு கொண்டு வந்ததை எடுத்து நடவுங்கள் உங்களுக்கு விலக்கியவைகளில் இருந்து தவிர்ந்து இருங்கள்.
அல்குர்ஆன் 59-7
ஷரீஅத் சட்டம் என்பது 1- வாஜிப்/ பர்ளு 2-ஹராம் 3-சுன்னத் 4-மக்றூஹ்
5-முபாஹ் ஆகிய ஐந்துக்குள்ளும் அடங்கும்.
இவற்றில் வாஜிப், ஹராம் என்பவை திட்டவட்டமான ஆதாரங்களுடன் நிறுவப்படும். இவற்றிற்கு திருக்குர்ஆனிலிருந்தும், ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்தும் ஆதாரம் காட்டப்பட வேண்டும்.
சுன்னத்தான, மக்ரூஹான விடயங்களுக்கும் ஆதாரம் காட்டப்பட வேண்டும். ஆனால் இவற்றிற்கு வாஜிப், ஹராம் போன்று உறுதியான ஆதாரம் அவசியம் இல்லை. பலவீனமான ஹதீதுகள் மூலமும் இவை தீர்மானிக்கப்படலாம்.
ஷரீயத்தில் கட்டளையோ, தடையோ இல்லாதவைகள் முபாஹ் ஆகும். என்ற விதிக்குள் அடங்கும்.
தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதுதல் கூடாது என்றால், அல்லது நபியவர்கள் காட்டித் தராதவைகளை செய்வது பாவம் என்றால் அது ஒன்றில் ஹராமாக இருக்க வேண்டும், அல்லது மக்றூஹாக இருக்க வேண்டும். இவை இரண்டிற்கும் ஆதாரம் காட்டப்படல் வேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வாவில் இவை விளக்கப்படவில்லை.
ஒரு விடயத்தில் கட்டளையோ, தடையோ இல்லையாயின், அவற்றைச் செய்வதில் அனுமதி உண்டு என்பதுதான் ஷரீயத் கூறும் தீர்ப்பாகும்.
ஒரு நன்மை தரும் காரியத்தை எப்பொழுதும் செய்வதற்கு அனுமதி உண்டு!. அதற்காக ஒரு நன்மையான காரியத்தைச் செய்வதற்குரிய ஆதாரத்தை ஒவ்வொரு முறையும் தேட வேண்டும். என்பது விதி அல்ல;. இது சாத்தியமான காரியமும் அல்ல. ஸஹாபாக்கள் இப்படித்தான் விளக்கி இருந்தார்கள்.
ஆகவே தான் நபி அவர்கள் உயிரோடு வாழும்போதே நபியவர்களிடம் கேட்காமலேயே புதிய புதிய வணக்கங்களையும், துஆக்களையும்; அவ்றாது, தஸ்பீஹ் களையும் ஓதியும், செய்தும் வந்தனர். நபி அவர்கள் இதனை தடுக்கவில்லை.
எடுத்துக்காட்டுக்கு சிலவற்றை தருகின்றேன் படியுங்கள்!.
1- ஹளறத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு வுழு செய்த பின், இரண்டு ரக்காத் நபில் தொழுவார்கள். அவ்வாறு தொழுமாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. தவிர, நபி அவர்களிடம் அனுமதி பெற்று பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழவும் இல்லை. இச்செயல் நபி அவர்களுக்கு தெரிந்த பின் சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்! என்று சோபனம் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
2- ஹளரத் ஹுபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை குறைஷிகள் கொல்வதற்கு முற்பட்டபோது இரண்டு றகாஅத் நபில் தொழுதார்கள். இவ்வழக்கம் நடைமுறையில் அப்போது இருக்கவில்லை. நபியவர்கள் இதனை அறிந்ததும் பின்னர் அதனை சுன்னத் தாக்கினார்கள்.
ஆதாரம்: புகாரி ஷரீப்.
3- ஒரு ஸஹாபி தொழுகையில் "ஷமியல்லாஹு லிமன் ஹமிதா" என்று இமாம் கூறியதன் பின் "ரப்பனா வலகல்ஹம்து" என்று ஓதினார்கள். இதனை நபியவர்கள் மறுக்கவில்லை, மாறாக பாராட்டினார்கள்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
4- ஒரு ஸஹாபி தொழுவதற்காக பள்ளிவாசல் வந்தார். ஜமாத் ஆரம்பம் ஆகிவிட்டது. வரிசையில் வந்து சேர்ந்ததும் அவராகவே "அல்லாஹு அக்பர், கபீறா வல்ஹம்துலில்லாஹி கதிறா, வஸுப்ஹானல்லாஹி புக் ரத்தன் வஅஸிலா" என்று மொழிந்தார்கள். தொழுகை முடிந்த பின், இந்த துஆவினால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டுள்ளன என்று நற்செய்தி கூறினார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
ஆதாரம் முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக், நஸஈ.
5- ஒரு ஸஹாபி தொழுகையில் "அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க பிஅன்னி அஸ்ஹது அன்னக அன்தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்த அல்அஹதுஸ்ஸமது லம் யலிது வலம்யூலத்" என்று அவராகவே ஓதினார். இதை செவியுற்ற செம்மல் நபியவர்கள் அவர் "இஸ்முல் அஃழத்தை கொண்டு திட்டமாக அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டுள்ளார்" என்று கூறி அவர் செயலை அங்கீகரித்தார்கள்.
நஸஈ, அபூ தாவூத், அஹ்மத்,
இப்னு ஹிப்பான்
6- ஒரு ஸஹாபி தொழுகையில் அத்தகையாத்தில் மேலதிகமாக "அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க பிஅன்ன லகல்ஹம்து லாயிலாஹ இல்லா அன்த பதீஉஸ்ஸமாவாத்தி வல் அர்ழீ யாதல் ஜலாலி வல் இக்றாம், யாஹய்யு யாக்கைய்யூம்"
என்று ஓதினார்கள் இதனை செவிமடுத்த நபியவர்கள் எதைக் கொண்டு கேட்டால் துஆ கபூலாஹுமோ, எதைக் கொண்டு கேட்டால் கிடைக்குமோ அந்த இஸ்முல் அஃழத்தைக் கொண்டே அல்லாஹ்விடம் அவர் துஆ கேட்டுள்ளார் என்று கூறிப் பாராட்டினார்கள்.
அபூதாவூத், நஸஈ, ஹாக்கிம், இப்னு ஹிப்பான்
7- றிபாஆ பின்றாபிஃ என்ற ஸஹாபிக்கு தொழுகையில் தும்மல் ஏற்பட்டது. அப்போது அவர் "அல்ஹம்துலில்லாஹி கதீறன் தைய்யிபன் முபாறக்கன் அலைஹி கமா யுஹிப்பு றப்புனா வயர்ழா" என்று கூறினார். இந்த துஆவை எடுத்து செல்வதில் 30 க்கு மேற்பட்ட மலக்குகள் போட்டா போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: திர்மதி
இவ்வாறு கூறுமாறு நபி அவர்கள் கூறவில்லை.
8- ஒரு ஸஹாபி வேகமாக வந்து தொழுகையில் இணைந்து கொண்டார். அதனால் அவருக்கு மூச்சிறைத்தது. அப்போது அவர் "அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கதீறன் தைய்யிபன் முபாறக்கன் பீஹி" என்று கூறினார்கள். தொழுகை முடிந்ததும், இந்த துஆவை ஓதியவர் யார்? என்று சபையில் உள்ளவர்களிடம் நபியவர்கள் கேட்டார்கள். அச்சத்தால் அனைவரும் அமைதியாக இருந்தனர். மீண்டும் கேட்டார்கள் சபை மௌனமாக இருந்தது. அவர் கூறியதில் தப்பு கிடையாது என்ற போது,
ஒரு ஸஹாபி நான் வேகமாக வந்தேன் எனக்கு மூச்சிறைத்தது அப்போது அதனை ஓதினேன் என்றதும், பன்னிரண்டு மலக்குகள் அதனை எடுத்துச் செல்வதில் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர் என்று கூறி அதனை அங்கீகரித்தார்கள் .
ஆதாரம்: முஸ்லிம்
9- அன்சாரி சஹாபி ஒருவர் "குபா மஸ்ஜிதில்" இமாமாக தொழுவித்து வந்தார். இவர் சூரத்துல் பாத்திஹாவுக்குப் பின் சூரத்துல் இக்லாஸையும் மற்றும் ஒரு சூரத்தையும் தினமும் ஒவ்வொரு ரக்காத்திலும் ஓதி வந்தார். ஸஹாபாக்கள் இதனை ஆட்சேபித்தனர்.
ஒரு சூராவில் திருப்தி காணாமல் ஏன் இரு சூராக்களை ஓதுகிறீர்கள். ஏதாவது ஒன்றை ஓதுங்கள் என்ற போது அவர் மறுத்துவிட்டார்.
நான் இப்படித்தான் ஓதுவேன் விரும்பினால் இமாமத் செய்கின்றேன், விருப்பம் இல்லாவிட்டால் விட்டு விடுகிறேன் என்றார். அவரை விட்டு விடுவதற்கு மற்றவர்களுக்கு மனமில்லை. காரணம், அவர்களுள் அவர்தான் மேன்மையானவர். அவர் அல்லாதவர் இமாமத் செய்வதை அவர்கள் விரும்பவில்லை. விவகாரம் வேந்தர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் சபைக்குச் சென்றது.
உங்கள் தோழர்கள் கூறுகின்ற படி செயல்படுவதற்கு உம்மை தடுக்கின்ற காரியம் என்ன? சூரத்துல் இக்லாஸை ஒவ்வொரு ரக்அத்திலும் விடாப்பிடியாக ஓதுவது ஏன்? என்று நபி அவர்கள் கேட்ட போது
"அந்த சூரத்தை நான் விரும்புகின்றேன்" என்று அவர் மறுமொழி பகர்ந்தார். அப்போது நபி அவர்கள் "அதனை நீ நேசிக்கின்ற உமது விருப்பமே உம்மை சொர்க்கத்திற்கு நுழைத்து விடும்" என்று கூறி அவரை அங்கீகரித்தார்கள்.
ஆதாரம்: புகாரி ஷரீப்.
நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு வாழும்போதே நபிகளார் சொல்லிக் கொடுக்காத துஆக்களை தொழுகையிலேயே ஸஹாபாக்கள் ஓதியுள்ளார்கள் என்பதும், அதனை நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று மிகத் தெளிவாக ஸஹீஹான ஹதீதுப் பெரு நூற்களில் பதிவாகி இருக்கிறது.
நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ அலாஆலிஹி வஸல்லம் சொல்லித் தராத துவாக்களை ஓதுவது பாவம் என்றும், ஸஹாபாக்கள் ஓதவே இல்லை என்றும் கூறுவதற்கு அ.இ.ஜ.உ. சபை பொதுச் செயலாளருக்கும், பத்வா குழு செயலாளர்களுக்கும் எவ்வளவு துணிச்சல் வேண்டும்? மார்க்கத்தில் இல்லாத ஒன்றை கூறுவதற்கு அஞ்ச வேண்டாமா? வெட்கப்பட வேண்டாமா?
அடுத்து நபியவர்கள் வபாத்தான பின், ஸஹாபாக்கள் எவ்வாறு நடந்துள்ளனர் என்பதற்கும் சில எடுத்துக்காட்டுகளை கீழே தருகின்றேன்.
1- ஒரு முறை ஹளரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுக்குப் பக்கத்தில் ஒருவர் தும்மினார். உடனே "அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாமு அலா றஸூலில்லாஹ் என்று கூறினார்கள். உடனே இப்னு உமர் ரழியல்லாஹ் அன்ஹுமா அவர்களும், நானும்" அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாமு அலா றஸூலில்லாஹ்" என்று தான் கூறுவேன். இவ்வாறு கூறுமாறு றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு கட்டளையிடவில்லை‌ "அல்ஹம்துலில்லாஹி அலா குல்லிஹால்" என்று கூறுமாறு தான் எங்களுக்கு கற்று தந்தனர். ஆயினும், தும்மிய வேளை றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத் கூறக் கூடாது என்று நபியவர்கள் தரப்பிலிருந்து தடை வரவில்லையே! அதனால், நாம் அவ்வாறு கூறுவதையே நல்லதென தேர்ந்துள்ளோம்.
திர்மிதீ, ஹாக்கிம்
ஆதார நூல்கள்: அதகாறுன் நவவி: பக் 231
அல்ஹாவி: பாகம் 1 பக் 293.
2- அத்தஹிய்யாத்தில் "அஸ்ஸலாமு அலைக்க அய்யுகன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி" என்பதற்குப் பின், "வபவறக்காத்துஹு" என்பதையும் "அஷ்அஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு" என்பதற்குப் பின் "வஹ்தஹு லாஷரிகலஹு" என்பதையும் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அதிகப்படுத்தினார்கள்.
ஆதாரம்:
அபூதாவூத்.
3- அமீறுல் முஃமினின் ஹளரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜும்மா தொழுதபின்,
"அல்லாஹும்ம இன்னி அஜப்து தஃ வதக, வசல்லைத்து பர்ழத்தக வன் தஷர்த்து கமா அமர்தனி பர்ஸுகுனி மின் பழ்லிக வஅன்த கைறுர் ராஸீக்கீன்" என்று ஓதுவார்கள்.
இவ்வாறு ஓதுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை.
4- அமீறுல் முஃமினின் ஹளரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜும்ஆவில் மேலதிகமாக ஓர் அதானை ஏற்படுத்தினார்கள், இதற்கு நபி வழியில் சான்று இல்லை.
5- அமீறுல் முஃமினின் ஹளரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதான் முடிந்ததும் மர்ஹபன், பில் காயிலி அத்லன், வபிஸ்ஸலாத்தி மர்ஹபன், வ அஹ்லா" என்று கூறுவார்கள்.
இதற்கு நபி வழியில் ஆதாரம் இல்லை.
6- அமீருல் முஃமினீன் ஹளரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துஆ கேட்கும் முன்,,
"அல்லாஹும்ம" அல்லது "ரப்பனா" என்று கூறாமல் "யா காப், ஹா, யா ஐன், ஸாத்இங்பிர்லி" என்று கூறுவார்கள்.
(பத்ஹுல் பாரி கிதாபுத்தப்ஸீர்)
இவ்வாறு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆவின் துவக்கத்தில் இருக்கவில்லை நபிவழியில் இப்படி நடைமுறை கிடையாது.
7- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தல்பியாவில்,
"லப்பைக் ஹக்கன் தஅப்புதன் வரிக்கா" என்று கூறுவார்கள்.
இது நபிவழியில் இல்லை.
8- அமீறுல் முஃமினின் ஹளரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பைத்துல் முகத்தஸில் நுழைத்த போது,
"லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்க"
என்று கூறினார்கள்.
ஹஜ், உம்றாவில் இஹ்றாமில் இருக்கும்போது ஓத வேண்டிய தல்வியாவை இங்கு ஓதினார்கள்.
இது நபி வழியில் இல்லை.
9- அப்துல்லா இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டால்,
"அல்லாஹும்ம ஈமானன் பிக வதஸ்தீகன் பிகிதாபிக வசுன்னத நபிய்யிக" என்று கூறி விட்டு நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத் கூறுவர்கள்‌
இந்த துஆவை ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடும்போது ஓதுவது சுன்னத் என்று இமாம்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இது நபி வழியில் அப்படியே வந்ததல்ல.
10- வுழூ செய்யும் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் கூறிய பின், ஷஹாதத் கலிமாவை மொழிவது சுன்னத் என்று எமது அஸ்ஹாபுகளில் சிலர் குறிப்பிட்டுள்ளனர் என்று குறிப்பிடும் இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இவ்வாறு கூறுவதில் குற்றமில்லை என்றும் ஸுன்னத்தில் (நபிவழியில்) இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்காறுன் நவவி பக்- 23
11- வுழூவில் ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும் போது துஆக்கள் ஓத வேண்டும் என்று நபி அவர்களை தொட்டும் எவ்வித ஆதாரமும் காண முடியவில்லை. இருப்பினும், ஸலபுஸ் ஸாலிஹீன்களை தொட்டும் வந்துள்ள துஆக்களை ஓதுவது சுன்னத் என்று திட்டவட்டமாக அறிஞர் (புகாஹாக்)கள் கூறியுள்ளனர்.
அத்காறுன் நவவி பக்-24
12-பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் "தஹ்யத்துல் மஸ்ஜித்" தொழ முடியாவிட்டால் "ஸுப்ஹானல்லாஹ் வல்ஹம்துலில்லாஹ் வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர்" என்று நான்கு முறை ஓதுவது சுன்னத் ஆகும்.
இதனை சில ஸலபுகள் கூறியுள்ளனர். இதில் எது வித குற்றமும் கிடையாது
அத் காறுன் நவவி பக்கம்-27
இப்படியான எடுத்துக்காட்டுகள் மூலம் நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைத் தான் ஓத வேண்டும் என்று ஸஹாபாக்களோ, சட்ட அறிஞர்களோ கூறவில்லை, ஷரீயத்தின் சட்டமுறைமையும் அவ்வாறு வலியுறுத்தவும் இல்லை. எனவே,
தொழுகைக்கு பின் கூட்டு துஆ ஓதக்கூடாது என்பதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முன் வைத்த பத்வாவில் "நபியவர்கள் ஓதியதை அல்லது ஓதி காட்டியவைகளை மாத்திரமே ஸஹாபாக்கள் ஓதினர். என்பதும், நபி அவர்கள் ஓதாதவைகளை ஓதுவது பாவமானது என்பதும், ஷரீஅத் கூறாததும் சட்ட அறிஞர்களின் ஒப்புதல் அற்றதும் என்பது தெட்டத் தெளிவாகிவிட்டது.
ஷரீயத்தில் இல்லாத ஒன்றை, சட்ட அறிஞர்கள் கூறாத ஒன்றை சட்டமாக தீர்ப்பாக வெளியிட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வா குழு ஷரீஅத் பற்றிய அறிவில் எந்த அளவு வங்குரோத்து நிலையிலுள்ளனர் என்பதையும், சாக்கடை கருத்துக்களை மார்க்கமாக மக்களுக்கு காட்டுவதில் எந்த அளவு முனைப்பாக செயல்படுகின்றனர் என்பதையும்; வழிகெட்ட வாசிகளின் சாக்கடை கொள்கைகளை அரங்கேற்றுவதில் எந்தளவு முனைப்புக் காட்டுகின்றார்கள் என்பதையும் இவர்கள் தீர்ப்பு வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
அடுத்த தொடர்களில் நபி அவர்கள் சொல்லாத, காட்டித் தராத வணக்க முறைகளை ஸஹாபாக்கள், தாபியீன்கள் எவ்வாறு புதிதாக செய்து வந்தனர் என்பதை பற்றி ஆராய்வோம்.
- தொடரும்-

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.