السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 May 2024

கூட்டு துஆவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தீர்ப்பும் ஓர் ஆய்வு! 01

 

கூட்டு துஆவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தீர்ப்பும் ஓர் ஆய்வு!

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கடந்த 4-2- 2001ல் "கூட்டு துவா பற்றி" ஒரு ஃபத்வா வெளியிட்டது! அதில், அப்போது இருந்த பொதுச்செயலாளர் மௌலவி எம் ஜே எம் ரியால் அவர்களும், ஃபத்துவா குழு செயலாளர் மௌலவி எம் எஸ் நூறுல்ஹம்சா அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்,
மேற்படி பத்துவாவை 2006ல்இருந்த அகில இலங்கை அ.இ.ஜ.உ. சபையின் பொதுச் செயலாளர் மௌலவி எச் அப்துல் நாசர் 2005 12- 9 ஆம் தேதி உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்போது அதே பத்துவாவை மருதமுனையைச் சேர்ந்த மௌலவி முபாரக் மதனி என்பவர் கையில் எடுத்து முகநூலில் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த பத்துவாவின் இலட்சணத்தை விலாவாரியாக அலசி ஆராய்ந்து 2007 பிப்ரவரி புஷ்ரா மாத இதழில் தொடர் கட்டுரையாக நாம் வெளியிட்டு வந்தோம்.
அதனை மக்கள் மீண்டும் படித்து பயன்பெற வேண்டும் என்பதற்காகவும், முபாரக் மதனியின் அவலட்சணத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் தருகிறேன்;
உண்மையை விளங்கி நல்வழி நடக்க அல்லாஹுத்தஆலா அருள் புரிவானாக!ஆமீன்!
மேற்படி ஃபத்வாவில் உள்ள சாரம் வருமாறு!
1- தொழுகைக்குப் பின் நபியவர்கள் ஓதி வந்தவைகளை மாத்திரமே சஹாபாக்கள் ஓதி வந்துள்ளனர்.
2-நபியவர்கள் ஓதிய துவாக்களையே ஒவ்வொரு முஸ்லிம்களும் ஓத வேண்டும்.
3-குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்த துஆக்களை ஓதுவதில் இமாம்கள் அனைவரும் ஒற்றுமை!.
4-தொழுகைக்குப் பின் கூட்டு துவா ஓதுவதற்கு சஹாபாக்கள் தாபியீன்கள் காலத்தில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை!
5-தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதுவதை வலியுறுத்துவது கூடாத செயல்!
7-நபியவர்கள் காட்டித் தராத செயலில் ஈடுபடுவது பாவமான காரியம் ஆகும்!
இவைதான் ஃபத்வா!
அகில இலங்கை ஜம்யத்தில் உலமா சபை இந்த நாட்டில் நீண்ட வரலாற்றை கூறும் ஓர் உயர் சபையாகும். இச்சபையில் இந்த நாட்டின் தலைசிறந்த உலமாக்கள் உயர் பதவிகளில் பலர் இருந்துள்ளனர் இவர்களில் எவருடைய மூளையிலும் அகப்படாத ஃபத்துவா மௌலவி ரியால், மௌலவி நூருல் ஹம்சா ஆகிய இருவருக்கும் வெளிச்சமாகி இருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல!
தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதக்கூடாது என்ற வாதம் புதிதான ஒன்றல்ல! நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்ற ஒரு விடயம் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் பறகதெனிய தாருத் தவ்ஹீத் அமைப்பின் நிறுவனர் அப்துல் ஹமீத் பக்கிரி அவர்கள் "தொழுகைக்குப் பின் கூட்டு துவா ஓதுவது கூடாது!" என்று வாதித்தார்,
அவரின் இக்கூற்றை இதே அ.இ.ஜ.உ.சபையில் அங்கம் வகித்த நாட்டில் உள்ள சுன்னத்துல் ஜமாஅத் உலமாக்கள் அனைவரும் எதிர்த்தனர்,
அகில இலங்கை ஜ.உலமா சபை 1924 இல் ஆரம்பிக்க பட்ட காலத்திலிருந்து கண்ணியத்துக்குரிய அப்துல் சமத் ஆலிம் வரையில் உயர் பதவியில் இருந்த அனைவருமே கூட்டு துவாவை வலியுறுத்தி ஓதி வந்ததோடு அப்துல் ஹமீத் பக்ரியின் வாதத்தையும் எதிர்த்தே வந்துள்ளனர்;
அப்துல் ஹமீத் பக்ரிக்கும் இந்த நாட்டில் உள்ள தலைசிறந்த உலமாக்களுக்குமிடையில் 1951 ஆம் ஆண்டு கல்முனையில் மாபெரும் விவாத மாநாடு நடந்தது! விவாத மாநாட்டில் , கூட்டு துஆ ஓதுவது கூடுமா? கூடாதா? என்பதும் ஒரு தலைப்பாகும்;
கூடாது என்ற தலைப்பில் தர்வேஸ் அப்துல் ஹமீத் பக்ரியும், கூடும் என்ற தலைப்பில் சுன்னத் வல் ஜமாத் உலமா சபையினரும் விவாதம் செய்தனர்.
பர்லான தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதுவது பித்அத் ஆகவே, அது தடுக்கப்பட வேண்டும் என்று பக்கிரி வாதித்தார், சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் அதை மறுத்து தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதுவது ஆகும் என்று தக்க ஆதாரத்துடன் வாதம் செய்தனர்.
மாநாட்டுக்கு தலைமை தாங்கிய மகரகம ஙபூரியா அரபுக் கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய பத்றுல் உலமா அலியார் மரைக்கார் ஹசரத் அவர்கள் தனது தீர்ப்பில்,
"பர்லான தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதுவது ஆகுமான செயல் என்றும், தர்வேஸ் அப்துல் ஹமீத் பக்ரியின் வழிகெட்ட வஹாபிச கொள்கை கண்டிக்கத்தக்கது என்றும் தீர்ப்பு வழங்கினார்கள்; இத்தீர்ப்பு நாடுபூராகவும் பகிரப்பட்டது அப்போது இருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல்உலமா சபை இதை அங்கீகரித்ததே தவிர, மறுப்பு வெளியிடவில்லை!
இதுவரை இந்த ஃபத்துவாவுக்கு எதிராக எந்த ஒரு மறுப்பும் எப்பகுதியில் இருந்தும் வரவே இல்லைஎன்பது கவனிக்கத்தக்கது.
இலங்கையில் மூத்த பழைய உலமாக்கள் அனைவரும் மரணித்து விட்டனர், இப்போது அகில இலங்கை உலமா சபையை அப்துல் ஹமீத் பக்ரீ என்ற தர்வேஸ் வஹாபி ஹாஜியாரின் கொள்கை சார்ந்தவர்கள் தத்தெடுத்துள்ளனர், தட்டிக் கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் காலாவதியாகிப் போன தர்வேஷியின் கொள்கைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க அகில இலங்கை ஜமயத்துல் உலமாசபை முயற்சி செய்கிறது.
இதன் வெளிப்பாடுதான் ஃபர்லான தொழுகைக்குப் பின் கூட்டு துஆ கூடாது என்ற ஃபத்வாவும், வாதமுமாகும்.
இந்த ஃபத்வைவைக் கொடுத்தவர்களும், பிரச்சாரம் செய்கின்றவர்களும் வஹாபிஷ முகவர்கள் தவிர வேறு எவரும் இல்லை!
பத்துவாவில் கையெழுத்திட்ட மௌலவி ரியாலும், நூறு ஹம்சாவும் வஹாபிகளிடமிருந்து பணம்பெறும் முகவர்கள் ஆகும். மௌலவி நூருல் ஹம்ஸா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவர் மௌலவி அப்துல் ஸமத் ஹளறத் அவர்களின் மதரஸாவில் ஓதி கொடுத்தவர்; இவரின் வழிகெட்ட கொள்கையை அறிந்து மதரசாவில் இருந்து அவரை அப்துஸ்ஸமத் ஹளறத் அவர்கள் விரட்டி விட்டார்கள் என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது
உலமா சபை வெளியிட்ட பத்துவாவை பார்க்கும் போது இதை எழுதியவர்கள் ஷரிஅத்தின் சட்டங்களை சரிவரப் புரியாதவர்கள் என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது!
ஒரு, பத்வா எப்படி எழுதப்பட வேண்டும், அது எப்படி நிறுவப்பட வேண்டும்; ஷரீஅத்தின் சட்டங்கள் எப்படி அணுகப்பட வேண்டும் என்ற அறிவு கூட இவர்களிடம் காணப்படவில்லை!
பழம்பெரும் வரலாற்றை கூறும் பொறுப்பு வாய்ந்த ஓர் உயர் சபையின் ஃபத்வாவில் ஓர் ஆதாரமோ மேற்கோளோ காட்டப்படவில்லை; ஒரு சாதாரணமான பாமரன் கிறுக்குவது போன்று இம்மேதைகளின் பத்துவாவும் அமைந்துள்ளது! இதுதான் ஃபத்வா எழுதுவதில் இன்றைய உலமா சபையின் இலட்சணம்?
எந்தவிதமான ஆதாரத்தையோ, தர்க்க நியாயத்தையோ; அறிஞர்கள் மேற்கோளையோ; தீர்ப்புக்களையோ முன் வைக்காது கிறுக்குதெல்லாம் ஃபத்வாவாக ஆகுமா?
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முத்திரையுடன் எதை கிறுக்கினாலும் கண்மூடித்தனமாக மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இவர்கள் தீர்மானம் போலும்!
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தீர்ப்பின் அவலட்சணங்களை விரிவாக அடுத்தடுத்து வரும் தொடர்களில் ஆராய்வோம் இன்ஷா அல்லாஹ்!




கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.