ஒரு பெண் ஹளரத் ஹஸனுல் பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் வந்து எனது இளம் பெண் மரணித்து விட்டாள். எனது மகளை கனவில் காண ஆசைப்படுகின்றேன். என் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவியாக ஓர் துஆவைக் கற்றுத்தருமாறு கேட்டாள். இமாமவர்கள் ஒரு துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். அன்றிரவே அப்பெண் அத் துஆவை ஓதியபடி தூங்கினாள்.
கனவில் மகளைக் கண்டாள். மகள் நரகத்தின் ஆடை அணிந்திருந்தாள். கையிலும், காலிலும் விலங்கிடப்பட்டிருந்தாள்.
அத்தாயானவள் மறுநாள் இமாமவர்களைச் சந்தித்து தனது மகளின் நிலையை விளக்கினாள். இமாமவர்களுக்கு இக்கனவு ஆழ்ந்த கவலையைக் கொடுத்தது.
சிறிது நேரம் கழிந்தபின் ஒரு பெண் சொர்க்கத்திலிருப்பதை இமாமவர்கள் கண்டார்கள். அவள் சிரசில் கிரீடம் அணிவிக்கப்பட்டிருந்தது. அப்பெண் இமாமவர்களிடம் அணுகி, என்னை நீங்கள் அறிவீர்களா? உங்களிடம் நரகில் இருப்பதாக கனவுகண்டு கூறிய பெண்ணின் மகள்தான் நான் என்றாள். உனது நிலையில் இப்படியான மாற்றம் எப்படி ஏற்பட்டது? என்று இமாமவர்கள் விசாரிக்க. அப்பெண் கூறினாள்.
ஒரு ஸாலிஹான மனிதர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பேரில் ஸலவாத் உரைத்தவராக இந்த மையவாடியைக் கடந்து சென்றார். அதன் பறக்கத்தினால் இம்மைய வாடியில் ஐநூறு கபுறுவாசிகளுக்கு நரக வேதனை நீக்கப்பட்டது என்று விளக்கம் பகர்ந்தாள்.
இது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். ஒரு மனிதர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பேரில் ஸலவாத் உரைத்த பறக்கத்தினால் இவ்வளவு பெரிய தொகையினருக்கும் விடுதலை கிடைக்குமாயின், ஐம்பது ஆண்டுகளாக ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பேரில் ஸலவாத் உரைப்பவரின் ஷபாஅத் மறுமையில் பயனளிக்காமல் போய் விடுமா?
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
(பாவம் புரிவதில்) அவர் (முனாபிகு)களைப் போன்று ஆக வேண்டாம் அவர்கள் (சட்டங்களைப் பேணுவதில்) அல்லாஹ்வை மறந்து (மாறு செய்து) விட்டனர்.
அல்குர்ஆன் - சூறா, ஹஷ்ர் : 19
அதாவது அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்தனர். அவனுக்கு எதிராகச் செயல்பட்டனர். உலக இச்சையில் தித்திப்பு கண்டனர். சதிகாரர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
முஃமீனுக்கும், முனாபிக்குக்குமுள்ள வேறுபாடு
முஃமீனுக்கும், முனாபிக்குக்குமுள்ள வித்தியாசம் யாது? என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடம் கேட்கப்பட்டதற்கு,
முஃமீனின் கவனம் தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும் சார்ந்திருக்கும். முனாபிக்கின் முழுக்கவனம் கால் நடைகள் போல் உண்டு குடித்து மகிழ்வதில் தங்கியிருக்கும். நயவஞ்சகனுக்கு தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும் ஈடுபாடு இருக்காது முஃமீன் அல்லாஹ்வின் பாதையில் தாராளமாக தர்மம் செய்வதிலும், பாவமன்னிப்புத் தேடுவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பான். நயவஞ்சகன் பேராசையிலும் பெரிய எண்ணத்திலும் மூழ்கிப் போய் கொண்டிருப்பான்.
முஃமீன் அல்லாஹ்வைத் தவிர, வேறு எவரிடத்திலும் ஆதரவு கொள்ள மாட்டான். நயவஞ்சகன் அல்லாஹ்வை விட்டு விட்டு படைப்புக்களிடம் கை நீட்டிக் கொண்டிருப்பான். முஃமீன் செல்வத்தை விட மார்க்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பான். நயவஞ்சகன் மார்க்கத்தை விட பணத்திற்கு முன்னுரிமை வழங்குவான்.
முஃமீன் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எவருக்கும் அஞ்ச மாட்டான். நயவஞ்சகன் அல்லாஹ்வைத் தவிர்ந்து ஏனையவர்களுக்கு அஞ்சுவான். முஃமீன் நன்மை செய்துகொண்டு அல்லாஹ்வின் சமுகத்தில் கண்ணீர் சிந்திய வண்ணமிருப்பான். நயவஞ்சகன் பாவங்களைச் செய்துகொண்டே சந்தோஷமாக இருப்பான். முஃமீன் செல்வத்தையும் தனிமையையும் தியானத்தையும் விரும்புவான். நயவஞ்சகன் கூட்டத்தோடு கும்மாளமடித்திருப்பதை விரும்புவான்.
முஃமீன் பயிரிடுவான் ஆனால் பலன் அழிந்திடுமோ என்ற அச்சத்திலிருப்பான். முனாபிக் பயிர் செய்வான். சிறந்த அறுவடையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். முஃமீன் மார்க்கத்தின் வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு நன்மையை ஏவி, தீமையை விலக்குவான்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
ஆணாயினும், பெண்ணாயினும், நயவஞ்சகர் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (யாவருமே) பாவமான காரியங்களை செய்யும் படி தூண்டுவார்கள். நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக் கொள்வார்கள். இவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந் நயவஞ்சகர்கள் தாம் (சதி செய்யும் கொடிய) பாவிகள்.
(அல்குர்ஆன் - 09 : 67)
நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) மற்ற நிராகரிப்போருக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமான கூலியாகும். அன்றி, அல்லாஹ் அவர்களைச் சபித்துமிருக்கின்றான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.
(அல்குர்ஆன் - 09 : 68)
நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்கள், அந்நிராகரிப்போர்கள் ஆகிய யாவரையும் நரகத்தில் ஒன்று சேர்த்து விடுவான்.
(அல்குர்ஆன் - 04 : 140)
முனாபிகுகள் குப்றில் மரணிப்பார்களாயின் நரகில் காபிர்களுடனே இருப்பார்கள். அல்லாஹுத்தஆலா முதலில் முனாபிக்குகளைப் பற்றிக் கூறியிருப்பது முனாபிக்குகள் காபிர்களை விட மிகத் தீயவர்கள். என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதனால் இருவரையும் ஒன்றாகவே நரகில் இணைந்திருப்பார்கள்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகின் அடித்தட்டிலிருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்ய எவரும் இருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் - 04 : 145)
அறபியில் முனாபிக் என்ற சொல் நாபகாஉல் யர்பூஃ என்ற சொல்லிருந்து வந்ததாகும். யர்பூஃ என்றால் காட்டு எலி என்று பொருள் எலியின் பொந்திற்கு இரு வழிகள் காணப்படும். ஒன்று உள் செல்வதற்கு, மற்றது வெளியேறுவதற்கு ஒன்றின் வழியாக வெளியே வரும் மற்றதின் ஊடாக ஓடி ஒளிந்து கொள்ளும். இவ்வாறுதான் முனாபிக்கும்.
தன்னை முஸ்லிம் என்று வெளியில் காட்டிக் கொள்கின்றான். பின் இஸ்லாத்திலிருந்து வெளியேறி குப்றில் தஞ்சம் கொள்கின்றான். இதனால்தான் முனாபிக்கிற்கு, முனாபிக் என்று பெயர் வழங்கப்படுகின்றது.
ஹதீ்ஸ் ஷரீபில் வருகின்றது,
முனாபிக் இரு ஆட்டு மந்தைக்கு மத்தியில் அகப்பட்டிருக்கும் ஓர் ஆட்டிடையனைப் போலாவான். சில நேரம் அப்பக்கம் செல்லும் மந்தையை நோக்கி ஓடுவான். வேறு சில நேரம் இப்பக்கமாகச் செல்லும் மந்தையின் பக்கம் செல்வான். இவ்வாறு இரண்டு பக்கம் ஓடிக் கொண்டேயிருப்பான்.
இவ்வாறுதான் முனாபிக்கும், முஸ்லிம் தரப்புப் பக்கம் முழுமையாக இருப்பதுமில்லை. காபிர் பக்கமாக முழுமையாக இருப்பதுமில்ல.
நரகத்தின் ஏழு வாசல்கள்
அல்லாஹுத்தஆலா நரகத்தைப் படைத்தான். அதற்கு ஏழு வாசல்களை அமைத்தான். அல்லாஹுத்தஆலா கூறுவது போன்று அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. (சூறா ஹஜ்று - 44)
அதன் வாசல் லஃனத் நிறைந்த இரும்பினால் இருக்கும். அதன் வெளிப் புறம் செம்பினாலிருக்கும் அதன் உட்பகுதி ஈயத்தால் இருக்கும்.
அதன் அடியில் வேதனை இருக்கும். அதன் மேல் அல்லாஹ்வின் சினமிருக்கும். அதன் தரைப் பகுதி ஈயம், செம்பு, கண்ணாடி, இரும்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அங்கு குடியிருப்வருக்கு மேலாலும், கீழாலும் வலது, இடது புறம் எங்கும் தீ மூட்டப்பட்டிருக்கும். இதற்கு மேல், கீழ் என்று பல தட்டுக்கள் இருக்கும். இவற்றில் அடித்தட்டு முனாபிக்குகளுக்காகும்.
ஹதீஸ் ஷரீபில் வந்துள்ளது,
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாமவர்களிடம் நரகத்தைப் பற்றியும் நரகத்தின் சூடு எப்படியிருக்கும் என்றும் கேட்டார்கள். அதற்கு ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் இவ்வாறு விடை பகர்ந்தார்கள்.
அல்லாஹுத்தஆலா நரகைப் படைத்து தலையாகும் வரை ஆயிரம் ஆண்டுகளாக தீ மூட்டினான். பின் வெள்ளை நிறமாகும் வரை ஆயிரம் ஆண்டுகள் தீ மூட்டினான். பின் ஆயிரம் ஆண்டுகள் தீ மூட்டினான். தீ கறுப்பாகி இருளாகிவிட்டது. உங்களை நபியாக அனுப்பிய நாயன் மீது ஆணையாக! நரக வாதிகளின் உடையில் ஓர் உடை பூமியில் உள்ளவர்களுக்கு வெளிப்படுமாயின் புவியில் வாழும் அனைவரும் அழிந்து விடுவார்கள். நரகவாதிகள் அருந்தும் நீரில் ஒரு வாளி நீர் பூமியில் உள்ள வெளியுடன் கலக்குமாயின் பூமியில் உள்ள அனைவருமே இறந்து விடுவர்.
எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்.
(அல்ஹாக்கா 36)
என்று அல்லாஹுத்தஆலா கூறும் நரகத்தின் சங்கிலியின் நீளம் எழுவானுக்கும், படுவானுக்குமிடையிலுள்ள தூரத்தைப் போன்றிருக்கும். அதனை உலகில் உள்ள எவ்வளவு பெரிய மலையில் வைத்தாலும் அது பொடியாகிவிடும். ஒரு நரகவாதியை நரகத்திலிருந்து வெளியேற்றி உலகில் இறக்கினால் அதன் துர்வாடையை சகிக்க முடியாமல் உலகில் உள்ள யாவருமே அழிந்து விடுவர்.
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாமிடம் நரகின் வாசல் நமது வாசல் போன்றாயிருக்கும்? என்று கேட்டார்கள். ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள். இல்லை, அது பல படித்தரங்களிலிருக்கும். ஒவ்வொரு வாசல்களுக்குமிடையில் எழுபது தொலை தூரமிருக்கும்.
ஒரு வாசலிலிருந்து மறு வாசல் எழுபது மடங்கு அதிக சூடு இருக்கும். இந்த வாசல்களில் வாழ்வோர் பற்றி ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கேட்டதற்கு, அடித்தட்டில் உள்ள வாசல்களுக்கு ஹாவியா என்று பெயர் அதில் தான் முனாபிக்குகள் தங்கியிருப்பர். நிச்சயமாக முனாபிகுகள் நரகத்தின் அடித்தட்டில் தங்கியிருப்பார்கள் என்று அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.
இரண்டாவது வாசலின் பெயர் ஜஹீம் அதில் முஷ்ரிக்கு (இணைவைப்பாளர்)கள் இருப்பார்கள். மூன்றாவது வாசலின் பெயர் ஸகர் அதில் ஸாபிகள் இருப்பார்கள். நான்காவது வாசல் லழா அதில் இப்லீஸூம் அவனைப் பின்பற்றிய மஜூஸி (நெருப்பு வணங்கி)களும் இருப்பர். ஐந்தாவது வாசலில் ஹுதமா அதில் யஹுதிகள் இருப்பார்கள். ஆறாவது வாசல் ஸஈர் அதில் நஸாறாக்கள் இருப்பார்கள்.
ஜிப்ரயீலே! ஏழாம் வாசல் பற்றி கூறாது விட்டுவிட்டீரே! அதில் தங்கியிருப்போர் யார் என்பதையும் சொல்லி விடுங்களேன்! என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கேட்டதற்கு,
அது பற்றிக் கேட்க வேண்டாம், என்று ஹளரத் ஜிப்ரயீல் சொன்னதற்கு ஜிப்ரயீலே! அதைப் பற்றியும் நீஙகள் கூற வேண்டும் என்று கேட்டதற்கு அதில் உங்கள் உம்மத்தில் பெரும் பாவம் செய்தும் தௌபாச் செய்யாமல் மரணித்தவர்கள் தங்கியிருப்பார்கள் என்று பதில் கூறினார்கள்.
அதனை (நரகத்தை)க் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது 19 - 71 என்ற திருவசனம் இறங்கியதும் இந்த உம்மத்தின் பேரில் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அதிகமாக அஞ்சினார்கள். உம்மத்தில் நிலையை எண்ணி அதிகமாக அழுதார்கள். இதனால்,
அல்லாஹ்வையும் அவனது கடுமையான பிடியையும் அவனது அடக்கியாளும் தன்மையையும் அறிந்த ஒருவர் கடுமையான அச்சத்திலிருப்பான் அதனை கண்முன் காண முன்பும் இந்த முஸீபத்துக்கள் ஏற்பட்டு இக்கொடிய நிலையைக் கண்முன்னே கண்டபின் இவரின் மானம் கிழிக்கப்பட்டு கடுகடுப்பான ஜப்பார் முன் நிறுத்தப்பட்டு நரகில் தள்ளி விடு அல்லாஹ் கட்டளை இடமுன் தனது நப்ஸின் குறைகளை எண்ணி கண்ணீர் வடித்தவனாகவே இருப்பான்.
மரணத்தின் பின் கவலைப்படல்
எத்தனையோ கிழவர்கள் நரகின் நடுவில் இருந்துகொண்டு எனது இளமைக் காலமே! என்றும் எத்தனையே வாலிபர்கள் எனது இளமைக் காலமே! என்று தனது இளமைக் காலத்தை வீணாக்கியதை எண்ணி அங்கலாய்த்துக் கொண்டிருப்பார்கள்.
தனது கடந்த காலங்களில் செய்த தீய செயல்களை எண்ணி வருந்தி ஓலமிடும் எத்தனையோ பெண்களை அங்கே காண முடியும். எங்களுக்கு ஏற்பட்ட அவமானமே! எங்கள் மானம் இழக்கப்பட்டுள்ளது என்று புலம்புவர். இவர்களின் முகங்களும், உடல்களும் கறுத்திருக்கும்.
அவர்களின் முதுகு உடைந்து காணப்படும். இவர்களுள் பெரியவர்களுக்கு கண்ணியமோ, சிறியவர்களுக்கு இரக்கமோ காட்டப்படாது. அவர்களி்ன் பெண்களின் மானம் மறைக்கப்படவும் மாட்டாது.
யா அல்லாஹ்! எம்மை நரகத்தையும் நரகத்தின் தண்டணைகளை விட்டும், நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல்களிலிருந்தும், காத்தருள் புரிவாயாக!
யா அல்லாஹ்! உனது கருனையால் நல்லவர்களுடன் எம்மை சொர்க்கத்தில் நுழைவிப்பாயாக! கண்ணியமிக்கவனே! மன்னிக்கக் கூடியவனே! யா அல்லாஹ்! எங்களது மானத்தை மறைப்பாயாக! அச்சத்திலிருந்து ஈடேற்றமாக்கி வைப்பாயாக! தவறுகளிலிருந்து எம்மை காப்பாயாக!
யா அல்லாஹ்! எங்களது நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பேரிலும் அவர்கள் தோழர்கள், குடும்பத்தோர்கள் பேரிலும் ஸலவாத், ஸலாம் கூறுவாயாக! ஆமீன்.