السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 14 May 2024

களுத்துறை பழித்துறை ஆகிவிட்டது

 


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்



அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள் இலங்கை முஸ்லிம்களிடையே ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணுவதற்காக நாடு நகரங்களெல்லாம் சுற்றித் திரிந்தபொழுது பல துன்பங்களையும் இன்பங்களையும் நுகர்ந்தனர்.

அவர்கள் சுளுத்துறை ஜூம்ஆ பள்ளியில் இரண்டு நாட்கள் தங்கி மக்களுக்கு அறிவுரை நல்கிய போதினும் அவர்களை ஏறிட்டுப் பார்ப்பார் எவருமில்லை. உண்பதற்கு யாதொரு சிற்றுண்டி விடுதியும் அங்கில்லை. அவர்களுக்கோ கடுமையான பசி ஏற்பட்டது. எனவே அவ்வூரை விட்டுப் புறப்பட எண்ணிய அவர்கள், அந்தப் பள்ளியின் சுவரில்

"ஸம்மீ கதீபன் களுத்துறை
அல் ஆன ஸார பழித்துறை"

(பண்டுதொட்டு களுத்துறை என்னும் பெயர் வழங்கப்பட்டு வந்த இந்த ஊர் கொலைகார ஊராக அல்லவா இருக்கிறது) என்று எழுதி விட்டுப் புறப்பட்டனர்.

சற்று நேரத்தில் அவர்கள் எழுதியதைப் போல அங்குக் கொலை ஒன்று நிகழ்ந்தது. ஒரு செல்வச் சிறுமியை ஒருவர் கொன்று அச்சிறுமி அணிந்திருந்த நகைகளைக் கவர்ந்து கொண்டு அதன் வெற்றுடலை ஆற்றங்கரையில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

பள்ளிவாயலில் பணி செய்து வந்த முஅஸ்ஸின், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் மீதே அப்பழியைச் சுமத்தினார். அவரே இரண்டு நாட்களாகப் பள்ளியில் தங்கியிருந்துவிட்டுப் புறப்படு முன் பள்ளிவாயில் சுவரில் ஏதோ எழுதிவிட்டுச் சென்றார். அவரே அச் சிறுமியைக் கொன்றிருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார்.

உடனே மாப்பிள்ளை லெப்பை ஆலிமைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து பள்ளிவாயிலில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்தார்கள் அவ்வூர் மக்கள்.

தாம் பள்ளிவாயில் சுவரில் "சுளுத்துறை பழித்துறை ஆகிவிட்டது" எழுதியது உண்மைதான் என்றும் ஆனால் தமக்கும் அக்கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் கூறினார்கள் அவர்களின் பேச்சு மக்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. அவர்களை மக்கள் ஐயக்கண்களுடனேயே நோக்கினர்.

அப்பொழுது திடீரெனச் அவ்வூர் சிலர் அங்கு வந்து அன்று காலை முஅஸ்ஸின் பதற்றத்துடன் ஆற்றங்கரையிலிருந்து வெளி வந்ததைத் தாங்கள் பார்த்ததாகவும் எனவே அவர்மீது தங்களுக்கு ஐயம் ஏற்படுவதாகவும் கூறினார்கள்.

உடனே அவருடைய பெட்டி திறந்து சோதிக்கப்பட்ட பொழுது அதிலே அச்சிறுமி அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தும் காணப்பட்டன.

அப்பொழுது மக்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் மாண்பினை உணர்ந்து அவர்களிடம் தம் தவற்றிற்காக மன்னிப்புக்கோரி, அவர்களை நல்ல முறையில் உபசரித்து அனுப்பி வைத்தார்கள்.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் மாத்தரைப் பள்ளியில் சொற்பொழிவாற்றி தாம் கைப்பட எழுதிய 'ஃபத்ஹிஸ் ஸலாம்' என்ற நூல்களின் சில பிரதிகளை அங்கு விற்பனை செய்துவிட்டு திக்வெல்லாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது,

தீன் லெப்பை என்பவர், "என்ன பிரமாதமாக எழுதி விட்டார்? நானும் என்னுடைய கையாலேயே (கவனிக்கவும் #கையாலேயே ) எத்தனையோ நூல்களை இதைவிட அழகாக எழுதி பிரதி எடுத்துள்ளேனே" என்று கூறி இழித்துரைத்தார்.

இவ்வாறு கூறிவிட்டுக் குளிக்கச் சென்ற அவரை முதலை இழுத்துச் சென்று கொன்று விட்டது. பின்னர் அவரின் உடல் கரையில் ஒதுங்கிய பொழுது அதில் வலது #கையைக் காணோம்.

உடலை எடுத்து முறைப்படி அடக்கம் செய்துவிட்டு அந்த முதலையைப் பிடித்து மக்கள் கொன்ற பொழுது அதன் வயிற்றில் தீன் லெப்பையின் #வலதுகை இருப்பதைக் கண்டு அதனை என்ன செய்வதென அறியாது திணறினர்.

அப்பொழுது ஒருவர் தாம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களிடம் வாங்கிய 'ஃபத்ஹிஸ் ஸலாம்' என்ற நூலைக் கொண்டு வர அதில் இத்தகு சூழ்நிலையில் எவ்வாறு செயலாற்றுவது என்று பொறிக்கப்பட்டிருந்தது.

உடனே அவர்கள் கையை எடுத்து முழு உடலையும் அடக்கம் செய்வதற்கான, அத்தனை சடங்குகளையும் செய்து அதனை அடக்கம் செய்தனர்.

இதன்பின்னர் அவ்வூர் மக்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் மாண்பினை உணர்ந்து அவர்களின் கரம் பிடித்து தீட்சை பெற்று அவர்களின் ஆன்மீக மாணவர்களாயினர்.


nadheem