السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 14 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.தொடர் 6

 

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.             தொடர் :- {6}

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

தொழுகை:
-------------
ஜனாஸாத் தொழுகை ஹிஜ்ரத்தின் முதல்வருடத்தில் மதீனத்துல் முனவ்வறாவில் கடமையானது, ஹளறத் கதீஜா, உம்முல் முஃமினீன் ஹளறத் ஸவ்தா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் சாச்சாவின் மகனும் முதற்கணவருமான ஸக்றான் றழியல்லாஹு அன்ஹு உள்ளிட்டோரின் மரணம் ஹிஜ்ரத்திற்கு முன் மக்கத்துல் முகர்ரமாவில் நிகழ்ந்தன; ஆயினும் அவர்களுக்கு ஜனாஸாத் தொழுவிக்கப்படவில்லை;
ஹிஜ்ரத்திற்குப் பின் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனத்துல் முனவ்வறா வந்து சேர்ந்த போது பர்ராஉ இப்னு மஃறூப் றழியல்லாஹு அன்ஹு வபாத்தாகியிருந்தார்கள்; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்கள் சகிதம் அவர்களின் கப்றை அடைந்து ஜனாஸாத்தொழுவித்தார்கள்; மதீனத்துல் முனவ்வறாவில் தொழுத இத்தொழுகைதான் இஸ்லாமிய வரலாற்றில் தொழுத முதல் ஜனாஸாத் தொழுகையாகும்;
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது மூவாயிரம் முஸ்லிம்களும், ஏழாயிரம் மலக்குகளும் தொழுதார்கள்; கலீபா இல்லாத காரணத்தால் அனைவரும் தனியாகவே தொழுதனர்.
ஜனாஸாத்தொழுகை சரியாவதற்கான ஷர்த்துக்கள்:
----------------------------
ஏனைய தொழுகைகளுக்கு இருக்கும் அதே ஷர்த்துக்கள் ஜனாஸாத்தொழுகைக்கும் இருப்பதோடு வேறு சில கருமங்களும் நிபந்தினையிடப்பட்டுள்ளன,
1- மைய்யித்தின் சுத்தம்:
தொழுகைக்கு முன் குளிப்பாட்டுவது வாஜிபாகும், குளிப்பாட்ட முடியாது போனால் தயம்மம் செய்ய வேண்டும்; மைய்யத்திற்கு கத்னா செய்யாத நிலையில் தோலினுள் இருக்கும் நஜீஸை நீக்க முடியாது போனால் இமாம் றமலி றஹ்மதுல்லாஹி அலைஹி ஆவர்களின் கூற்றுப்படி, அதன் மீது தொழுவிக்க முடியாது; இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ்வின் கூற்றுப்படி குளிப்பாட்டிய பின் தயம்மம் செய்து தொழுவிக்க வேண்டும்; இந்த கூற்றைப்பின்பற்றி செயல்படுவதால், மைய்யித்தின் கண்ணியம் நிலைத்திருக்கும்; கபன் செய்த பின் மைய்யித்தின் மீது தொழுவிப்பது சுன்னத்தாகும்;
நல்லடக்கம் செய்வதற்கு முன் ஜனாஸாத்தொழுவது வாஜிபாகும், தொழுவிக்காமல் நல்லடக்கம் செய்யப்பட்டால், அதை வெளியேற்றத் தேவையிலை; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹளறத் பர்ராஉஇப்னு மஃறூப் றழியல்லாஹு அவர்களின் கப்றில் தொழுதது போன்று கப்றில் தொழவேண்டும்; பள்ளிவாசலில் மூன்று அல்லது அதைவிட அதிகமான ஸப்பில் தொழுவது சுன்னத்தாகும்;
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
ما من عبد مسلم يموت فيصلي عليه ثلاثة صفوف الا غفر له
எவராவது ஒரு முஸ்லிம் மரணித்து இன்னும் அவர்மீது மூன்று வரிசைகளில் தொழுவிக்கப்பட்டால், அவர் அவசியம் மன்னிப்படுவார்.
உள்பள்ளிவாசலில் தொழுவது ஷாபியி, ஹன்பலி மத்ஹபுகளில் ஆகுமானது, இன்னும், ஹனபி, மாலிகி மத்ஹபுகளில் மைய்யித்தின் நஜீஸால் பள்ளிவாசல் அசிங்கப்படும் என்ற அச்சத்தால் மக்றூஃ ஆகும்; மைய்யித்தின் நஜீஸ் வழிந்து கொண்டிருந்தால் நான்கு மத்ஹபிலும் மக்றூஹ் தஹ்ரீமாகும்;
மறைவான மைய்யித்தின் மீதும் ஜனாஸாத்தொழ முடியும், ஓரு ஊரிலுள்ளவரின் மரணச்செய்தி மற்ற ஊருக்குப் போய்ச்சேர்ந்தால், ஜும்ஆத்தொழுகைக்குப்பின், அல்லது, மக்களின் சபையில் தொழமுடியும்; ஒரே ஊரில் ஒரு பகுதியில் மரணித்தவருக்கு ஊரின் மறுபகுதியில் தொழுவிக்கமுடியும்; எனினும் வசதிக்காக ஒரே நகரில் பல்வேறு பள்ளிகளில் கூட ஜனாஸாத்தொழுகையை நிறைவேற்லாம்;
ஒரு மைய்யித்தின் உடம்பிலிருந்து சில பகுதிகள் கிடைத்தால், அதைக்குளிப்பாட்டி துணியால் மறைத்த பின் தொழுவித்து ஊரிலுள்ள மைய்யித்தைப் போன்று நல்லடக்கம் செய்யவேண்டும்; அடிப்படையில் ஙாயிப் ஜனாஸாவின் மீதுள்ள தொழுகையின் வடிவத்தை ஒத்திருக்கும்;.
ஜமாஅத்:
---------
ஜனாஸாத்தொழுகையை தனித்தும், ஜமாஅத்தாகவும் இரண்டு விதமாகவும் தொழ முடியும், ஆயினும், ஜமாஅத்தாகத் தொழுவது சுன்னத்தாகும்; ஒரு ஜமாஅத் தொழுது முடிந்த பின், மறுமொரு கூட்டம் வந்தால், இரண்டாவது, மூன்றாவது ஜமாஅத் தொழமுடியும்; இதே அமைப்பு கப்றிலும் நடைமுறைப்படுத்தலாம்;
கப்றடியிலும் ஜனாஸாத்தொழலாம் ஆனால் ஒரு நிபந்தனை; நல்லடக்கம் செய்தபின் தொழுவது வாஜிபாகும்; நல்லடக்கம் செய்த பின் மக்கள் ஒன்று கூடினால், மூன்று நாட்கள் வரை தொழலாம்; நபிமார்களின் கப்றில் ஜனாஸாத்தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது;
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبياءهم مساجد
யஹூதிகள், நஸாறாக்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும், அவர்கள் தங்களின் நபிமார்களின் கப்றுகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்டனர்.
இமாமத்:
--------
மைய்யித்தைத் தொழுவிப்பதில் தந்தை ஏற்றமானவராகும், இதற்குப்பின் பாட்டன் இவ்வாறு மேல்வரை செல்லும்; அடிப்படையானவர்களுக்குப் பின் கிளைகளுக்குரிய தகுதியாகும்;
இந்த வகையில், மகன், பின் பேரன்; இவ்வாறு கீழ் வரை செல்லும்; பின்னர் குடும்பத்தின் வாரிசுகளின் ஒழுங்கு வரிசைப்படியாகும்;
இதற்குப்பின், குடல் வழி வந்த உறவினர்களாகும்; தாயின் தந்தை (பாட்டன்,) பின், மாமா (தாயின் சகோதரர்) பின், மருமகன் (தாயின் மகளின் கணவன்) பின் தாயின் சாச்சாவுக்கான படித்தரமாகும்; ஒருவலி அன்னிய ஒருவரை இமாமாக்குவது, ஆகுமானது;
இமாம் அல்லது தனிநபர் தொழுகையில் ஆண் மைய்யித்தின் தலைக்கு முன்னாலும், பெண் மைய்யித்தில் இடுப்புக்கு நேராகவும் நிற்கவேண்டும், இவ்வாறு இமாம் ஷர்பீனி றஹ்மதுல்லாஹி அலைஹி அல் இக்னாஃ என்ற நூலில் எழுதுகின்றார்கள்; ஷைக் சுலைமான் புஜைறமி றஹ்மதுல்லாஹி அலைஹி துஹ்பதுல் ஹபீப் (இக்னாஃஇன் ஓரக்குறிப்பு) என்ற நூலில் இவ்வாறு தெளிவாக எழுதுகின்றார்கள்;
ஆண் மைய்யித்தின் தலை இமாமின் வலது பக்கமாகவும் இன்னும், மையித்தின் உடலின் பெரும் பகுதி இமாமின் இடது பக்கமாகவும் இருக்க வேண்டும்; ஆனாலும் நடைமுறையில் மாற்றமாகவே இருக்கின்றது; பெண்ணின் விடயத்தில் இவ்வாறு தெளிவு படுத்துகின்றார்கள்;
பெண் மைய்யித்தின் இடுப்புப் பக்கமாக இமாம் நிற்க வேண்டும், மைய்யித்தின் தலைப்பகுதி இமாமின் வலது பக்கமாக இருக்க வேண்டும்;
வரிசைகள்:
---------
ஜனாஸாத்தொழுகையில் குறைந்தளவு மூன்று வரிசைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும், தொழுவோர் அதிகரித்தால் வரிசைகளை அதிகப்படுத்திக் கொள்வது சுன்னத்தாகும்; ஆறு நபர்களின் எண்ணிக்கையில் மூன்று வரிசைகளை அமைக்கும் விதம் இவ்வாறு அமையும்; இமாமோடு சேர்த்து ஒருவர் நிற்பார்; பின்னால் இருவர் இன்னும் சற்று பின்னால் இருவர் நிற்பார்கள்; ஜனாஸாத்தொழுகையில் வரிசைகளின் எண்ணிக்கை விதியாகும்; ஆகவே, மொத்தவரிசைகளின் படித்தரத்தின் சிறப்பு சமமாகும்; தொழுகை ஆரம்பித்தபின் வந்து ஜமாஅத்தோடு சேர்பவர் அவர்விரும்பிய வரிசையில் சேர்ந்து கொள்ளமுடியும்;
கூட்டமானஜனாஸாக்கள்;
----------------------
பல எண்ணிக்கையுள்ள ஜனாஸாக்களின் வலிகாறர்களின் விருப்பத்திற்கு அமைய ஒருவர் தொழுவிக்க முடியும்,தொழுகையின் எதார்த்தத்தில் நோக்கமாக இருப்பது துஆவாகும், முடிந்தால் ஒவ்வொரு ஜனாசாவையும் தனித்தனியாக தொழுவிப்பது ஏற்றமாகும்; முதன் முதலில் வந்த ஜனாஸா இமாமுக்கு அருகிலிருக்கும்; பின்னால் வந்த ஜனாஸா ஆளைப்பொறுத்தவரை கண்ணியம் பொருந்தியவராக இருந்தாலும் சரியே! மூன்னுக்குவைக்கக் கூடாது!
பெண்ணின் ஜனாஸாவைவிட ஆணின் ஜனாஸாவை முற்படுத்த வேண்டும், ஜனாஸா தொழுகையில் மைய்யித், தொழுபவருக்கு முன்னால் கிப்லாவுக்கான திசையிலிருப்பதால் தான் ஜனாஸாத் தொழுகையில் றுகூஉ, ஸுஜூத் தவிர்க்கப்பட்டுள்ளன; றுகூவிலும், ஸுஜூதிலும் குனிய வேண்டியுள்ளது அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் மைய்யித்திற்கே றுகூஃ சுஜூத் செய்ததாகிவிடும்; ஆகவேதான் ஒப்பாவதைத் தவிர்ப்பதற்காக றுகூஉம், சுஜூதும் விலக்கப்பட்டுள்ளன.
பர்ளு கிபாயா:
-------
புத்தியுள்ள சிறுவன் தொழுவதால் பர்ளுகிபாயா விழுந்துவிடும், எதார்த்தத்தில் மைய்யித்திற்காக துஆக் கேட்பதுதான் நோக்கமாகும்; இன்னும் مميز பிரித்தறியும் சிறுவனின் துஆ ஒப்புக்கொள்வதில் நெருக்கமாக உள்ளது ;
நான்கு வகையான பர்ளு கிபாயாக்கள் சிறுவனின் தரப்பிலிருந்து பூரணமடைவதில்லை,
1- ஸலாமுக்கு பதில் கூறுவதில்,
2- ஜமாஅத்தைப் பூரணப்படுத்துவதில்;
3- ஹஜ், அல்லது
4-உம்றா மூலம் மக்கத்துல் முகர்ரமாவை பராமரிப்பதில்;
ஏனைய பர்ளு கிபாயாவான ஜனாஸாத் தொழுகை, ஜிஹாத்; நன்மையை ஏவுதல் உள்ளிட்ட இதுவல்லாதவை பருவமடைந்தவர்கள் இருக்கும் போது சிறுவர்களின் செயலால் கூட பூரணமடையும்; ஆணும், சிறுவனும் இருக்கத்தக்க பெண் ஜனாஸாத் தொழுவதால் பர்ளு கிபாயாவை நிறைவேற்றியதாக அமையாது; ஏனெனில்; பெண்ணை விட ஆண் பரிபூரணமாகும்; நிச்சயமாக ஆண் இல்லாத சமயத்தில் பெண்களால் இந்த பர்ளு முழுமையடையும்.
மைய்யித் முன்னால் இருக்கையில் தொழுகைக்காக நிற்கின்ற தொழும் நபர் மைய்யித்தை முந்தி நிற்கக்கூடாது, கப்று தொடர்பிலும் இதுதான் விதி!
முஸ்லிமானவரின் மைய்யித்தில்தான் தொழ வேண்டும், முஸ்லிமின் மைய்யித்தோடு காபிரின் மைய்யித்தும் கலந்திருந்தால், அனைவரையும் தொழுவிக்க வேண்டும்; துஆவில்,
اللهم اغفر للمسلم منهما
யாஅல்லாஹ்! இவ்விருவரில் முஸ்லிமான மைய்யித்தின் குற்றத்தை மன்னிப்பாயாக!, என்று கூறவேண்டும், துஆக்கேட்கும் போது நிய்யத்தில் தடுமாற்றம் மன்னிக்கப்படும்; ஆயினும்; முதல்கூறிய விதம் சிறப்பானது.
தொடரும்...