அல்லாஹுத்தஆலா நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹி அறிவித்தான்.
மூஸாவே! உமது நாவிலிருந்து வரும் உமது பேச்சுக்களைவிட, உமது உள்ளத்தில் நெழியும் எண்ணத்தைவிட, உமது உடலில் உள்ள உயிரைவிட, உமது விளியின் பார்வையை விட, உமது காதின் கேள்வியை விட, நான் உமக்கு நெருக்கமாக வேண்டும் என்று நீ விரும்பினால் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் பேரில் அதிகம் ஸலவாத் கூறுவீராக!
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
ஒவ்வொரு ஆத்மாவும் மறுமைக்காக என்ன செய்திருக்கின்றது என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனிதா! நன்கு விளங்கிக் கொள்! உன்னை தீய வழியில் அழைத்துச் செல்வது உனது நப்ஸ்தான்! இது ஷைத்தானை விடவும் உனக்கு பரம வைரி! உனது மனோ இச்சையின் மூலம்தான் ஷைத்தான் உன்னில் ஆதிக்கம் செலுத்துகின்றான். அதனால், உனது நப்ஸ் உனக்கு கற்பனையான விருப்பங்களையும், மதி மயக்கத்தையும், மோசடிகளையும் ஏற்படுத்துகின்றது.
இறை அச்சமில்லாதவனும் மதி மயக்கத்தில் சிக்கியவனுமே, நப்ஸுக்கு அடிமையாகி வழிப்படுகி்ன்றான். இந்த மனிதனின் வாதங்கள் பொய்யானதாகும். நீ மனதை திருப்திப்படுத்துவதற்காக அதன் ஆசைகளை நிறைவேற்ற முனைந்தால் அழிந்துவிடுவாய்! அதன் விசாரணைகளில் கவனக் குறைவாக இருந்தால் பாவத்தில் மூழ்கி விடுவாய்!
நப்ஸுக்கு மாறுசெய்யும் சக்தியை நீ இழந்து, அதன் விருப்பத்தை நிறைவேற்ற நீ துணிந்தால், நரகத்தின் விளிம்புக்கு இழுத்துச் செல்லப்படுவாய்! நன்மையின் பக்கம் உன்னை திருப்பும் எந்த ஒரு சக்தியும் நப்ஸுக்கு கிடையாது. நப்ஸுதான் அனைத்து சோதனைகளுக்கும் வேர்! அசிங்கத்தின் களஞ்சியம்! இப்லீஸின் கருவூலம்! தீமைகளின் உறைவிடம்! அதன் தீங்கின் ஆழத்தை நப்ஸைப் படைத்தவனைத் தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்,
அல்லாஹ்வை அஞ்சுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை உள்ளார்ந்து நன்கு அறிந்தவனாக உள்ளான்.
அல்குர்ஆன்
ஒரு அடியான் மறுமையின் (நலவை நாடி) தனது கடந்த கால வாழ்வை சிந்தித்துப் பார்ப்பானாயின், அவனது சிந்தனை அவனது இதயத்தை கழுவிவிடும்.
நபியவர்கள் நவின்றார்கள்,
ஒரு மணி நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விட மேலாகும். அதனால், கடந்த கால பாவங்களிலிருந்து மீண்டு பாவ மன்னிப்பு தேட வேண்டியது ஒரு புத்திசாலிக்கு அவசியமாகும்.
தான் நம்பி ஏற்று உறுதிப்படுத்திய விடயத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும். அது மறுமை வாழ்வி்ன் வெற்றிக்குக் காலாக அமையும். மேலதிக விருப்பத்தை தவிர்த்துக்கொள்! விரைவாகத் தௌபாச் செய்வதில் கவனத்தைத் திருப்பு! அதிகமதிகம் அல்லாஹ்வைத் திக்று செய்! ஹறாமானவற்றைத் தவிர்த்துக் கொள்! உன் நப்ஸின் நிலையில் பொறுமையைக் கடைப்பிடி!
மனோ இச்சைகளை பின்பற்றாதே! காரணம், நப்ஸ் என்பது விக்ரகம் போன்றது. நப்ஸுக்கு வழிப்படுபவன் விக்ரகத்தை வணங்குபவன் போலாவான். உளத்தூய்மையுடன் வணங்குபவன்தான் நப்ஸை அடக்கி ஆளும் தகுதியைப் பெறுவான்.
ஒரு நாள் மாபெரும் ஞானியும், துறவியுமான மாலிக் பின் தீனார் ரழியல்லாஹு அன்ஹு பஸறாவில் உள்ள ஒரு கடைத்தெருப்பக்கம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அத்திப்பழம் அவர் கண்ணில்பட்டது. அத்திப்பழம் திண்பதற்கு மனதில் ஆசை ஏற்பட்டது. கடைக்காரனிடம் நெருங்கி எனது செருப்பை எடுத்துக்கொண்டு அதற்குப் பதில் அத்திப்பழம் கொடு! என்று கேட்டார்கள்.
தேய்ந்துபோன செருப்பைப் பார்த்த கடைக்காரன் உங்கள் செருப்புக்கு ஒரு பழமும் தர முடியாது என்று மறுத்துவிட்டான். இதைக் கேட்ட பின் திரும்பிச் சென்று விட்டார்கள். அருகில் நின்றவர் கடைக்காரரை அணுகி பழம் கேட்டவர் யார்? என்று அறிவீரா? அவர்தான் மாலிக் பின் தீனார் என்று கூறியதும் கடைக்காரன் பதறினான், கவலைப்பட்டான்.
ஒரு கூடையில் பழத்தை நிறைத்து தனது அடிமையிடம் கொடுத்து இதை எப்படியாவது மாலிக் பின் தீனாரிடம் ஏற்கச் செய்ய வேண்டும். இதை அவர் ஏற்றுக் கொண்டால் நீ அடிமையிலிருந்து விடுதலை பெறுவீர்! என்றும் கடைக்காரன் கூறினான்.
அடிமை, பழக் கூடையை எடுத்துக்கொண்டு விரைந்து ஓடோடி வந்தான். பழக்கூடையை ஏற்குமாறு மாலிக் பின் தீனாரிடம் கெஞ்சினான். அவர் அதனை ஏற்க மறுத்து விட்டார். இதை நீங்கள் ஏற்றால் எனக்கு உரிமை தருவதாக என் எஜமான் வாக்களித்துள்ளான் என்று வினயமாக வேண்டினான் அடிமை. உனக்கு இதில் விடுதலை! எனக்கு அதில் அழிவு! தண்டனை?
அத்திப் பழத்திற்காக என்னால் மார்க்கத்தை விற்க முடியாது. இறுதி நாள் வரை அத்திப்பழம் தின்பதில்லை என்று நான் சத்தியம் செய்துள்ளேன் என்று இமாம் மாலிக் பின் தீனார் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
ஹளரத் மாலிக் பின் தீனார் ரழியல்லாஹு அன்ஹு மரணப் படுக்கையில் நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருக்கும்போது பாலுக்குள் தேனை ஊற்றி அதில் சூடான ரொட்டியைப் போட்டு தரீத் தயாரி்த்து திண்ண வேண்டும் என்று அவர்கள் மனம் விரும்பியது. அதனை தயாரித்து அவர்களின் முன் பணியாளன் வைத்தார்.
ஒரு மணி நேரமாக தரீதை மாலிக் பின் தீனார் ரழியல்லாஹு அன்ஹு உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். பின் கூறினார்கள்.
மனமே! தொடர்ச்சியாக முப்பது ஆண்டுகள் பொறுமையைக் கடைப்பிடித்தாய்! வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உன்னால் பொறுமை செய்ய முடியாதா? என்று கூறிய பின் கையிலிருந்த பாத்திரத்தை வீசி விட்டார்கள். நப்ஸின் ஆசையை அடக்கியவர்களாக அவர்களின் உயிர் பிரிந்தது. இதுதான் நபிமார்கள், ஷித்தீக்கீன்கள், ஆஷிக்கீன்கள், துறவிகள் உள்ளிட்டோரின் நிலையாகும்.
ஹளரத் சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் கூறுகின்றார்கள்,
தனது மனதை அடக்கி வெற்றி காண்பவன், தனியாக நின்று ஒரு நகரத்தை வெற்றி வாகை சூடிய வீரனைவிட பலசாலியாகும்.
நான் எனது நப்ஸோடு இருப்பது ஆட்டை மேய்க்கும் இடையனைப் போன்றுள்ளது. அவன் ஆட்டை ஒரு பக்கமாக மேய்த்துக் கொண்டிருக்கும்போது, அது வேறு ஒரு பக்கமாக சென்று மேயும். தனது நப்ஸை அழித்தவன் அதனை றஹ்மத் என்ற கபனில் சுற்றி, கறாமத் என்ற பூமியில் அடக்கம் செய்தவனாவான். தனது கல்பை அழித்துக் கொண்டவன் லஃனத் - சாபம் என்ற கபனில் சுற்றி தண்டனை - வேதனை என்ற பூமியில் அடக்கியவன் போலாவான். இவ்வாறு அலி ரழியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள்.
ஹளரத் யஹ்யா பின் றாஸி ரஹ்மத்துல்லாஹி கூறினார்கள்,
கடுமையான வணக்க வழிபாட்டைக்கொண்டு உனது நப்ஸுடன் போராடு! ஆத்மீக பயிற்சி என்பது இரவில் விளிப்பதும், பேச்சைக் குறைப்பதும், மனிதர்களின் துயரங்களை சகித்துக் கொள்வதும் குறைவாக உண்பதுமாகும்.
குறைவாக தூங்குவதால் எண்ணங்கள் தெளிவடையும், குறைவாகப் பேசுவதால் ஆபத்திலிருந்து விமோசனம் கிட்டும். துன்பங்களை சகித்துக் கொள்வதால் ஆத்மீகப் படித்தரம் உயரும். குறைவாக உண்பதால் மன இச்சைகள் அழியும். அதிகம் சாப்பிடுவது மனதை வன்மையாக்கும். மனதின் பிரகாசத்தை இல்லாமலாக்கி இருளடையச் செய்யும். பசியில்தான் ஞானத்தின் ஒளி இருக்கின்றது. வயிறு புடைக்க உண்பது அல்லாஹ்வி்ன் சமூகத்திலிருந்து தூரமாக்கும்.
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
பசியால் உங்கள் உள்ளங்களை வெளிச்சமாக்குங்கள்! பசியாலும், தாகத்தாலும் உங்கள் நப்ஸுடன் போராடுங்கள்! பசியால் சொர்க்கத்தின் கதவைத் தட்டிக் கொண்டேயிருங்கள்! பசியோடு இருப்பவன் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்யும் போராளியின் நற்கூலியைப் பெறுகின்றான். பசியோடும், தாகத்தோடும் இருப்பதைவிட சிறந்த அமல் அல்லாஹ்விடத்தில் வேறு எதுவும் கிடையாது. வயிற்றை நிரப்பி, இபாதத்தின் திருப்தியை இழந்தவனிடத்தில் வானத்து மலக்குகள் ஒருபோதும் வருவதில்லை.
ஹளரத் அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்,
நான் இஸ்லாத்தை ஏற்ற நாளிலிருந்து எனது றப்பை வணங்குவதிலுள்ள இன்பத்தை அடையும் ஆசையில் ஒருபோதும் வயிறு நிறைய உண்டதில்லை. நான் இஸ்லாமானதிலிருந்து அல்லாஹ்வை சந்திக்கும் ஆசையில் தாகம் தீர நீர் அருந்தியதில்லை. அதிகமாக சந்திக்கும் ஆசையில் குறைவாகவே உண்டேன். குறைவாக உண்பதினால் அதிகமாக வணக்கம் செய்ய முடியும். அதிகமாக உண்பதால் குறைவாகவே வணக்கம் செய்ய முடியம். அதிகமாக உண்பதால் உடல் கனத்து தூக்கம் மிகைக்கும். அவயங்கள் அயர்ந்துவிடும். பின் என்ன! தூங்குவதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. உயிரற்ற பிண்டமாக வாழ்வு கழியும். இவ்வாறு மின்ஹாஜுல் ஆபிதினில் வரையறுக்கப்பட்டிருக்கின்றது.
முனிய்யத்துல் முப்தி என்ற நூலில் வருகின்றது. அறிஞர் லுக்மானுல் ஹகீம் தனது மகனுக்கு இவ்வாறு உபதேசித்தார். மகனே! உண்பதையும், தூங்குவதையும் குறைத்துக்கொள்! ஏனெனில், அதிகம் உண்பவனும், அதிகமாக உறங்குபவனும் நல்லமல்கள் ஏதும் இன்றி வெறுங்கையுடன் மறுமையில் வருவான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள்,
அதிகமாக உண்பதாலும், பருகுவதாலும் உங்கள் உள்ளங்களை அழித்துக் கொள்ளாதீர்கள். அதிகரித்த நீரினால் பயிர் அழிவது போன்று ஊண், குடிப்பால் மனம் அழிந்து விடுகின்றது.
சில நல்லடியார்கள் குடலை, கொதிக்கும் கிடாரத்திற்கு ஒப்பிட்டுள்ளனர். அதிலிருந்து வெளியேறும் ஆவி, உள்ளத்தைத் தாவி, உள்ளத்தை அழுக்காகவும், கறுப்பாகவும் ஆக்கிவிடும். அதிகமாக உண்பதால் அறிவு, சிந்தனையில் குறைபாடு ஏற்படும். அதிக உணவு விவேகம், அறிவாற்றலை இழக்கச் செய்துவிடும்.
யஹ்யா நபி அலைஹிஸ்ஸலாம் ஷைத்தானைக் கண்டார்கள். அவன் அதிகமான மூடைகளைச் சுமந்து கொண்டிருந்தான். இவையெல்லாம் என்ன? என்று யஹ்யா நபியவர்கள் ஷைத்தானிடம் கேட்டார்கள். இவைகள்தான் ஆசைகள். இதன் மூலம்தான் மனிதர்களை வேட்டையாடுகின்றேன் என்றான் ஷைத்தான். என்னைக் கைது செய்யும் ஏதும் இதில் உள்ளதா? என்று நபியவர்கள் கேட்டார்கள். இல்லை, ஆனாலும் ஒரு நாள் வயிறு நிறைய உண்டீர்கள். அதனால், தொழுவதில் உற்சாகம் குறைந்திருந்தது. சோம்பல் கூடியது என்றான் இப்லீஸ்.
இது கேட்ட நபியவர்கள் இதன்பின் ஒருபோதும் வயிறு நிறைய உண்ணமாட்டேன் என்றார்கள். அப்படியாயின், இதன்பின் ஒருபோதும் நானும் யாருக்கும் உபதேசம் செய்ய மாட்டேன் என்றான் இப்லீஸ்.
ஓர் இரவு மட்டும் வயிறு நிறைய உண்ட ஒரு நபியின் நிலை இதுவாயின், ஆயுளில் ஒரு நாளாவது பசியோடு இருக்காதவனின் நிலை எப்படியிருக்கும்? வயிறு புடைக்க உண்ட பி்ன் அமல் செய்யலாம் என்று கூறுபவனின் நிலைதான் என்ன?
ஹளரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஓர் இரவு வயிறு புடைக்க ரொட்டி சாப்பிட்டார்கள். அதனால், இரவில் வழக்கமாக செய்யும் வணக்கத்தை நிறைவேற்றாமல் போய் விட்டது. அல்லாஹுத்தஆலா நபியவர்களுக்கு வஹி அறிவித்தான்.
யஹ்யாவே! மறுமையை விட இவ்வுலகை சிறப்பாகக் கருதுகின்றீரோ? ரஹ்மத்மிக்க எனது அண்மையை (அயலை) விட சிறப்பான வேறு அண்மையை (அயலை) தேர்ந்துள்ளீரோ? எனது கண்ணியம் மகத்துவத்தின் மீது ஆணையாக! நீ பிர்தௌஸ் சொர்க்கத்தையும், நரகத்தையும் பார்ப்பீராயின் கண்ணீருக்குப் பதில் இரத்தக் கண்ணீர் வடிப்பீர். மேலாடைக்குப் பதிலாக இரும்பாலான ஆடையை அணிவீர்.