السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 16 May 2024

வணக்கம் செய்வதோடு ஹறாத்தையும் தவிர்க்க வேண்டும்.

 

வணக்கம் செய்வதோடு ஹறாத்தையும் தவிர்க்க வேண்டும்.

வழிபடல் طاعة என்பது பர்ழான கடமைகளை நிறைவேற்றுவதையும், ஹறாமான வஸ்த்துக்களை விட்டும் தவிர்ந்திருத்தல்; ஷரீஅத்தின் வரம்பை பேணுதல் உள்ளிட்டவையை குறிக்கும்;
திருக்குர்ஆனில்,
ولا تنس نصيبك من الدنيا
உலகத்திலுள்ள உன் நஸீபை (பங்கை) மறந்து விடாதே !
28: 77.
என்ற திருவசனத்திற்கு ஹளறத் முஜாஹித் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
இத்திருவசனத்தின் பொருள், அடியான் வணக்க வழிபாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும்.
வழிபாட்டின் எதார்த்தம்:
✥.❖.✥
வழிபாட்டின் எதார்த்தம் (حقيقة) என்பது, அல்லாஹ்வைப் பற்றிய ஞானம் (معرفة), இறையச்சம் அல்லாஹ்வில் ஆதரவு வைத்தல், எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வின் பக்கம் மீளுதல் உள்ளிட்டவையைக் குறிக்கும்.
எவராவது ஓர் அடியானிடம் மேற்கண்ட பண்புகள் இல்லாதிருந்தால் அவர் ஈமானின் எதார்த்தத் (ஹகீக்கத்)தை அடைந்து கொண்டவராக மாட்டார்.
ஆகவே, அடியான் அல்லாஹ்வின் ஒப்பு உவமை இல்லாத ஆற்றல் மிக்க படைப்பாளனும் (خالق) ஆலிமுமாகிய கீர்த்தி மிக்க றப்புடைய ஏனைய பண்புகளை ஈமான் கொண்டவனாக மாட்டார்.
ஒரு நாட்டறபி ஹளறத் முஹம்மது இப்னு அலி இப்னு ஹுஸைன் (றழியல்லாஹு அன்ஹும் ) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வை வணங்கும் போது அவனைப் பார்த்துள்ளீர்களா என்று கேட்டார்? .ஆம்! அவனைப்பார்த்த பின்புதான் அவனை வணங்குகின்றேன் என்று பதில் கூறினார்.
அது எப்படி என்று மீண்டும் கேட்டார்?.
கண் பார்வையால் அல்ல! இதயத்தின் ஈமானின் அறிவினால் பார்க்கின்றேன் அதை புலன்கள் எத்திக் கொள்ளாது, அவனுடைய கணக்கற்ற அத்தாட்சிகளூடாக ஒப்பில்லாத, நிகரற்ற பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளவனை அறிந்து கொள்கின்றேன்; எவருக்கும் அநியாயம் செய்பவனல்லன், வானம், பூமிக்கு அரசன், அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை என்றார்.
இதைக்கேட்ட நாட்டறபி உணர்ச்சிவசப்பட்டவராக
الله اعلم حيث يجعل رسالته
அல்லாஹ் தன்னுடைய தூதுவத்தை எங்கு வைக்க வேண்டுமென்பதை மிக்க அறிந்தவன். 6.: 125 என்று
கூறினார்.
அகமிய ஞானம் என்றால் என்ன?
ஒரு ஞானியிடத்தில் பாதினுடைய(அகமிய) ஞானம் என்றால் என்ன என்று கேட்கப்பட்டது?
அது அல்லாஹ்வின் இரகசியம்,! அதை அவன் அவனுடைய நண்பர்களின் உள்ளத்தில் போடுகின்றான்; அதைப்பற்றி எந்த ஒரு மலக்குகளுக்கோ, மனிதனுக்கோ தெரிவதில்லை.என்று பதில் கூறப்பட்டது.
ஹளறத் கஃபுல் அக்பார் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒரு மனிதன் ஒரு தானியத்தின் அளவு அல்லாஹ்வின் மகத்துவத்தைப் பற்றிய யகீனை அடைந்து கொண்டால், அவர் வானத்தில் பறக்கலாம், நீரில் நடக்கலாம் ;
தன்னை அறிய முடியாது என்பதை ஈமானின் மூலம் அறுதியாக்கி அந்த நிஃமத்திற்கு நன்றி கூறமுடியாது என்பதை ஏற்று அதற்கு நன்றி கூற வைத்த நாயன் மகா தூயவன்.
மஹ்மூது அல்வர்ராக் றஹ்மத்துள்ளாஹி அலைஹி தனது கவிதையில் இவ்வாறு பாடுகின்றார்கள்.
١-إذا كان شكري نعمة الله نعمة
علي له في مثلها يجب الشكر
٢- فكيف بلوغ الشكر الا بفضله
وان طالت الايام واتصل العمر
٣- إذا مس بالسراء عم سرورها
وان مس بالضراءعقبها الاجر
٤- وما منهما الا له فيه نعمة
تضيق لها الاوهام والبر والبحر
1- எந்த நிஃமத்துக்கு நன்றி செலுத்துவது வாஜிபானதோ, அந்த அல்லாஹ்வின் நிஃமத்துக்கான எனது நன்றியும் ஒரு நிஃமத்துதான்.
2- எனக்கு நீண்ட ஆயுள் கொடுக்கப்பட்டாலும் கூட அல்லாஹ்வின் கருணை இல்லாவிட்டால், எப்படி என்னால் நன்றி செலுத்த முடியும்?
3- மனிதனுக்கு எப்போது மகிழ்ச்சி ஏற்படுகின்றதோ அப்போது மகிழ்ச்சி பொதுமையாகிறது;
எப்போது துயரம் ஏற்படுகிறதோ அதன்பின் சிறந்த நற்கூலி கிடைக்கின்றது.
4- ஒவ்வொரு இன்பத்திலும், துன்பத்திலும் மறைந்திருக்கின்ற நிஃமத்தை கடலிலும், கரையிலும் காணமுடியாது.
அல்லாஹ்வின் மஃரிபத் உண்டாகிவிட்டால், அடிமைத்துவத்தின் உறுதிப்பாடு ஏற்பட்டுவிடும்; மனதில் ஈமான் பதிந்துவிட்டால் அல்லாஹ்வுக்குரிய வழிபாடு அவசியமாகிவிடும்.
ஈமான் வெளிப்படையானது, அந்தரங்கமானது என்று இருவகைப்படும்:
வாயால் மொழிவதை வெளிப்படையானது என்றும், மனதால் நம்புவதை அந்தரங்கமானது என்றும் கூறப்படும்.
இறை நெருக்கத்திலும், இபாதத், வழிபாடுகளிலும் முஃமின்கள் பல்வேறு படித்தரங்களில் இருக்கின்றனர்; ஈமானில் சகலரும் சமமாக கூட்டாகவே இருக்கின்றனர்.
ஒரு முஃமின் தவக்குல், இக்லாஸ், அல்லாஹ் வழங்கியதில் பொருத்தம், உள்ளிட்டவை எந்தளவு இருக்கின்றதோ அந்தளவு அவரின் தகுதி உயர்ந்து காணப்படும்
இக்லாஸ் என்பது, அடியான் தனது அமலுக்கான நற்கூலியை அல்லாஹ்விடம் வேண்டாமலிருப்பதாகும். காரணம், நன்மையை எதிர்பார்த்து தண்டனையை அஞ்சி ஒருவர் இபாதத் செய்வாராயின், அவர் தனது நன்மைக்காகவே இபாதத் செய்தவராவார்; அதனால் அவரின் இக்லாஸ் பூரணமானதாகாது.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
لا يكن احد كالكلب السوء ، وان خاف عمل ، ولا كالاجر السوء ان لم يعط اجرا لم يعمل
பயம்காட்டி அடித்தால் காரியமாற்றக்கூடிய மோசமான நாயைப் போன்று நீயும் இருக்காதே!
கூலி இல்லாமல் வேலை செய்ய மறுக்கின்ற தொழிலாளியைப் போன்றும் இருக்காதே!
அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
ومن الناس من يعبد الله علي حرف ، فان اصابه خير اطمان به
وان اصابته فتنة انقلب علي وجهه خسر الدنيا والاخرة ، ذلك هو الخسران المبين،
இன்னும் மனிதர்களில் (சந்தேகத்தின்) விளிம்பின்மீதிருந்து அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கின்றான்; அவனுக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால், அ(வ்வணக்கத்) தைக்கொண்டு அவன் அமைதியடைகின்றான்; ஏதேனும் ஒரே சோதனை அவனுக்கு ஏற்பட்டால் தன் முகத்தின் மீது அவன் புரண்டு (திரும்பி) விடுகின்றான்-. இம்மையிலும் மறுமையிலும் அவன் நஷ்டமடைந்து விட்டான் - அதுதான் தெளிவான நஷ்டமாகும். 22: 11
அல்லாஹுத்த ஆலா அமல்களுக்கான கூலியை வழங்காவிட்டாலும் அவன் வழங்கிய உபகாரத்திற்கும், பேரருளுக்கும் அவனுக்கு நாம் இபாதத் செய்வதும், அவனுக்கு வழிப்படுவதும் கடமையாகும்;
வணக்கத்திற்கு அவன் கருணையால் கூலி கொடுப்பதும், அதைச் செய்யத் தவறியவர்களுக்கு நீதியினடிப்படையில் கண்டிப்பதும் என்ற அவனுடைய வாக்கு முந்தி விட்டது.
தவக்குல் என்பது: மனிதனின் தேவை உள்ள நேரத்தில் அல்லாஹ்வில் இறுக்கமான நம்பிக்கை வைக்கவேண்டும்; அவசியத்தேவை ஏற்படும் பொழுது மட்டும் அவன் பக்கம் திரும்பவேண்டும், சோதனைகள் உள்ள பொழுது மனநிம்மதியாக இருக்கவேண்டும். பூரணமான மன அமைதியோடு இருக்க வேண்டும், காரணம்,
சோதனைகள் அல்லாஹ்வின் தரப்பால் தான் வருகின்றன என்பதை தவக்குல் தாரி நன்கு விளங்கியிருக்கின்றார். நன்மை, தீமைக்குரிய ஒவ்வொரு செயலும் தந்தை,، பிள்ளை, செல்வம் உள்ளிட்டவையிலிருந்து வருவதில்லை என்றும் உலகத்தை படைத்தாளுபவனால் தான் நிகழ்கின்றன என்பதை அவர் நன்கு புரிந்துள்ளார். எந்த ஒரு சந்தர்பத்திலும் அல்லாஹ் அல்லாதவரிடத்தில் ஊன்றுதல் வைக்கமாட்டார்.
அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்.
ومن يتوكل علي الله فهو حسبه
எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன். 65: 3
ழிறா, பொருத்தம் என்பது,
நடக்கின்ற செயல்களை முறுவலித்துக் கொண்டே ஒப்புக்கொள்வதாகும்.
சில அறிஞர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
أقرب الناس الي الله أرضاهم بما قسم لهم،
அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தில் திருப்தியுள்ளவர்தான் அல்லாஹ்விடத்தில் அதிக நெருக்கமுள்ளவராக இருப்பார்.
ومن كلام الحكماء
رب مسرة هي الداء ومرض هو الشف
எத்தனையோ சந்தோஷங்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன.; (அவ்வாறே) முகத்தைத் கெடுக்கின்ற நோய்களுமிருக்கின்றன என்று சில தத்துவ மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒரு புலவர் இப்படிப் பாடுகின்றார்:
١- كم من نعمة مطوية
لك بين انياب النوايب
٢- ومسرة قد اقبلت
من حيث ترتقب المصائب
٣- فاصبر علي حدثان دهرك
فالامور لها عواقب
ولكل كرب فرجة
ولكل خالصة شوائب
1- எத்தனையோ நிஃமத்துக்கள் சோதனைகளாகக் கொட்டுகின்றன.
2- எத்தனையோ மகிழ்சியானவை சோதனைகளைப் போன்று இறங்குகின்றன.
3- இன்பத்திலும், துன்பத்திலும் பொறுமை செய்து கொள்! காரணம் ஒவ்வொரு செயலுக்கும் முடிவு இருக்கின்றது.
4- ஒவ்வொரு துன்பத்திற்குப் பின்பும் மகிழ்ச்சி உண்டு! நல்லவை ஒவ்வொன்றிலும் கெடுதி ஒழிந்திருக்கின்றது.
وعسي ان تكرهوا شئيا وهو خير لكم
நீங்கள் வெறுக்கும் ஒரு பொருள் அது உங்களுக்கு நன்மையாக இருக்கவும் கூடும்.
2: 216.
அல்லாஹ்வின் மேற்கண்ட கூற்று நாம் திருப்தியடைவதற்குப் போதுமாகும்.
ஓர் அடியானின் இபாதத்தும், வழிபாடும் உலக மோகத்தைக் கைவிடாத வரை பூரணமடையாது.
ஒருதத்துவஞானி கூறுகின்றார்.
மனதில் திரைபோடாத நல்லுரைதான் மிகச்சிறந்ததாகும். இந்த திரைகள் உலகம் தொடர்பானவை யாகும்.
(இப்படியான நல்லுரைகளால் உலகத்தொடர்புகள் யாவும் அறுந்து போய்விடும்)
மற்றுமொரு தத்துவ அறிஞர் கூறுகின்றார்.
உலகம் என்பது ஒரு மணித்துளியாகும், அதனை வணக்க வழிபாடால் கடத்திவிடு!
அபுல் வலீது அல் பாஜி பாடுகின்றார்.
إذا كنت اعلم علما يقينا
بان جميع حياتي كساعة
فلم لا اكون ضنينا بها
واجعلها في صلاح وطاعة
1- நீர் மிகச்சிறந்த வகையில் அறிந்திருந்தாலும் உமது வாழ்வு ஒரு மணித்தூளியைவிட அதிகமல்ல!
2- நீ எதற்காக அதை பேணுதலோடு செலவிடாமலிருக்கின்றாய்?
எதற்காக அதில் வணக்கத்திலும், வழிபாட்டிலும் கழிக்காதிருக்கிறீர்.?
ஒருவர் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் திருத்தூரே! நான் மரணத்தை விரும்பவில்லை என்றார்.
உமக்கு ஏதும் சொத்துக்கள் இருக்கின்றனவா என்று கேட்டார்கள்.?
ஆமாம் உண்டு என்றார். உமது செல்வத்தை கொடுத்துவிடு! மனிதன் தனது செல்வத்தைக்கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றான் என்றார்கள்.
ஹளறத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுகின்றார்கள்.
البر في ثلاثة : في النطق ، والنظر ، والصمت ، فمن كان منطقه في غير ذكر الله فقد لغا ، ومن كان نظره في غير اعتبار فقد سها، ومن كانت صمته في غير تفكر فقد لها
மூன்று விடயங்களில் நன்மை உண்டு.!
1- பேச்சில்,
2- பார்வையில்
3- மௌனத்தில்
அல்லாஹ்வைப்பற்றிய நினைவு இல்லாத ஒருவரின் பேச்சு வீண்!
ஒருவரின் பார்வையில் படிப்பினை இல்லாதிருந்தால் அந்தப் பார்வை மறதியும் தவறுமாகும்
எவருடைய மௌனம் தனது முடிவைப்பற்றி சிந்திக்கக்கூடியதாக இல்லாதிருந்தால், அவருடைய மௌனம் அர்த்தமற்றது, காரணம், சிந்திப்பதன் மூலமே உலகத்தின் ஈர்ப்பிலிருந்து விடுபடமுடியும். விருப்பத்திற்குரியவையின் எதிர்பார்ப்பு இல்லாது போய்விடும். மனிதன் கூர்ந்து சிந்திக்கும் திறனைப் வழக்கமாக்கிக் கொள்வான்.
ஒவ்வொரு மனிதனும் ஹறாமான விஷயங்களில் பார்வையைச் செலுத்தாமலிருக்க வேண்டும்; காரணம், பார்வை என்பது குறி தவறாத அம்பாகும், சக்திமிக்க
அரசனாகும்,
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
النظرة سهم من سهام ابليس ، من تركها مخافة الله تعالي اعقبه ايمانا يجد طعمه في قلبه
பார்வை ஷைத்தானின் ஈட்டிகளில் ஓர் ஈட்டி! எவராவது அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அந்த ஹறாத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொணாடால், அல்லாஹுத்த ஆலா அவருக்கு ஈமானைக் கொடுப்பான், அதன்மூலமாக அதன் இன்பத்தை அவரின் மனதின் அடி ஆழத்தில் உணர்வார்.
எவராவது ஒருவர் தனது பார்வையை பொறுப்பில்லாமல் விட்டுவிட்டால் அவர் முடிவில்லாத உச்ச அவமானத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
சுதந்திரமான பார்வையுள்ள முகத்திரையை கிழித்துவிடும். அதனால் இழிவை சந்திக்க நேரும், நீண்ட காலம் நரகத்தில் இருப்பதை வாஜிபாக்கிவிடும்;
ஆகவே, உனது பார்வையை பாதுகாத்துக் கொள்! அதனை பொறுப்பற்று சுதந்திரமாக விட்டீராயின், கெடுதியில் வீழ்ந்து விடுவாய்! இதை உனது கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்தீராயின், உனது சகல உடல் உறுப்புக்களும் உனக்கு வழிப்படக்கூடியதாகி விடும் என்று சில தத்துவ ஞானிகள் கூறுகின்றனர்.
மனதுக்கு அதிக தீங்கை ஏற்படுத்தக்கூடியது செவியா? கண்ணா? என்று பிளேட்டோ விடம் கேட்கப்பட்டது,
இவை இரண்டும் ஒரு பறவையின் இரு சிறகுகளைப் போன்றவை, அவை இரண்டின் உந்துதலால் தான் அது பறக்கின்றது; அவற்றில் ஒன்று உடைந்து போனால் அடுத்ததால் பறப்பதற்கு அதிகம் சிரமத்தை எதிர்நோக்கும் என்று விடை பகர்ந்தார்.
முஹம்மத் இப்னு ழவ்உ கூறுகின்றார்கள்
அல்லாஹுத்த ஆலா புத்தியுள்ள ஒவ்வொருவரிடத்திலும், அவன் வெறுப்பதை நிர்பந்தமாகப் பார்க்கக்கூடிய குறைபாட்டை வைத்திருக்கின்றான்.
ஒருவர் ஒரு சிறுவனிடம் சிரித்து, சல்லாபம் செய்வதை ஒரு துறவி கண்டார்,
புத்தியும், மனமும் கெட்டுப் போனவனே!
கிறாமன் காதீபீன் மற்றும் பாதுகாப்புக்குரிய மலக்குகளைப் பார்த்து உமக்கு வெட்கம் வரவில்லையா?
உன்னுடைய அமல்களை எழுதிக்கொண்டே உன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள்; உனது தீமைகளுக்கு சாட்சியாகிக் கொண்டிருக்கின்றார்கள்; நீ மக்களுக்கு முன்னால் செய்வதற்கு நடுங்கிய உமது மறைவான தீமைகளையும் தெரிந்துபார்த்துக் கொண்டிருக்கின்றார்களே! என்று கூறினார்.
காழி அல்அர்ஜானி பாடுகின்றார்கள்.
تمتعنا يا ناظري بنظرة
فاوردتما قلبي اشر الموارد
أعيناي كفا عن فؤادي فإنه
من البغي سعي اثنين في قتل واحد .
1- என்னிரு விழியே!
நீ தவறான பார்வையால் வேலைப்பார்த்து எனது மனதை மிக மோசமான இடமாக ஆக்கி விட்டாய்!
2- என்விழியே! என்மனதை வழிகெடுக்கும் வேலையை நிறுத்து!
நீ இரண்டாக இருந்து கொண்டு ஒருவரைக் கொல்வதற்கு முயற்சிசெய்கின்றாய்!
ஹளறத் அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
கண்கள் ஷைத்தானின் வலைகள்; கண் உறுப்புக்களில் வேகமாக தாக்கம் செலுத்தக்கூடியவை,
மிக வேகமாக மல்லுக்கட்டக்கூடியது;
எவராவது தனது உடல் உறுப்புக்களை அல்லாஹ்வில் இபாதத்த்தில் கழித்தால் அவரின் மேலெண்ணத்தை அடைந்து விட்டார்; எவராவது தனது உடல் உறுப்புக்களை தனது மனோ இச்சைகளுக்குப் பின்னால் கட்டிக்கொண்டாராயின், அவருடைய அமல்கள் நாசமாகிவிடும்.