السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 May 2024

கூட்டு துஆவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தீர்ப்பும் ஓர் ஆய்வு! 4

 

கூட்டு துஆவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தீர்ப்பும் ஓர் ஆய்வு!

கூட்டு துஆ கூடாது என்பதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முன்வைத்த குற்றச்சாட்டுகளில்,
"கூட்டு துஆ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஓதவில்லை" என்பதும் ஒன்றாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யாத விடையங்களை நாமும் செய்யக்கூடாது என்பது ஷரீஅத் கூறும் விதி அல்ல என்பதையும், ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதாத துஆக்களை நபியவர்களின் ஜீவிய காலத்திலேயே தொழுகையிலும், தொழுகைக்கு வெளியேயும் ஓதினார்கள் என்பதையும், நபியவர்கள் சொல்லாத, காட்டித் தராத வணக்க வழிபாடுகளை ஸஹாபாக்கள் நன்மை கருதி செய்து வந்ததையும், அதனை நபியவர்கள் ஏற்றும், குறைபாடு உள்ளதையும் திருத்தியும் அங்கீகரித்ததையும் கடந்த ஆய்வுகளில் விரிவாக பார்த்தோம்.
இத்தொடரில் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யாது தவிர்த்தவைகள் பற்றியும் அதற்கான நியாயங்களையும் ஆராய்வோம்.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஒன்றை தவிர்த்திருந்தால் பின்வரும் காரணங்கள் அநேகமாக காணப்படும்.
01. இயல்பா அவர்களின் சுபாவம் அல்லது மனவிருப்பின்மை.
உதாரணமாக,
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு உடும்பு சமைத்து வைக்கப்பட்டது. அதனை அவர்கள் சாப்பிடவில்லை. இது ஹராமா? என்று ஸஹாபாக்கள் கேட்டதற்கு இல்லை என்று மறுமொழி பகர்ந்தார்கள். எனவே உடும்புக் கறியை நபி அவர்கள் தவிர்த்தது ஹராம் என்பதனால் அல்ல என்பது விளங்கப்பட்டது.
02. மறதியினால் தவிர்த்திருக்கலாம்
ஒரு தினம் தொழுகையில் ஒரு ரக்காத்தை குறைத்து தொழுது முடித்ததும், தொழுகை சுருங்கி விட்டதா? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் மறந்து விட்டேன் என்று கூறினார்கள்.
தொழுகையில் நபி அவர்கள் விட்டவையை மார்க்கம் என்று ஸஹாபாக்கள் புரிந்து கொள்ளாமல் அதற்கான விளக்கத்தை ஸஹாபாக்கள் வேண்டினார்கள். நபியவர்களும் தான் விட்டது மார்க்கமல்ல என்று கூறினார்கள்.
03. பர்ளாஹிவிடும் என்ற அச்சம்
தராவீஹுத் தொழுகை கடமையாக (பர்ளாக) ஆகிவிடும் என்பதற்காக ஜமாத்தாக தொழுவதை தடுத்தார்கள்.
04. உம்மத்தின் மீது கொண்ட கருணை!
எனது உம்மத்தின் மீது சுமையாக, கஷ்டமாக இல்லாதிருப்பின், ஒவ்வொரு வுழுவிலும் பல் துலக்குவதை (மிஸ்வாக் செய்வதை) கடமையாக்கி இருப்பேன்.
எனது உம்மத்திற்கு கஷ்டம் இல்லாதிருப்பின், இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்ததன் பின் இஷா தொழுவதை பிற்ப்படுத்தி இருப்பேன் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
05. குழப்பத்தை பயந்ததனால்
நுபுவத்திற்கு முன் குறைஷிகள் கஃபாவை புனருத்தானம் செய்தனர். அப்போது அவர்களிடம் நிதி பற்றாக்குறையாக இருந்ததனால் இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாமவர்கள் இட்ட அத்திவாரத்தில் ஒரு பகுதியை விட்டு விட்டார்கள்.
பின்னர், அத்திவாரத்தில் குறைஷிகள் விட்டதையும் கஃபாவில் சேர்க்க றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் விரும்பினார்கள். ஆனால், மக்காவில் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களின் மனம் இதனால் குழப்பம் அடையும் என்று அஞ்சியதனால் அதனைத் தவிர்த்தார்கள்.
06. தனிப்பட்ட ஒன்றுக்காக தவிர்த்தல்.
சில விடயங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தனிப்பட்ட காரணத்திற்காகத் தவிர்த்திருந்தார்கள். இதில் மற்றவருக்கு எது வித பங்கும் கிடையாது.
உதாரணமாக,
வெள்ளை பூட்டையும், அதையொத்த வாடையுள்ளவைகளையும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவித்தார்கள். மலக்குகளுக்கு இவ்வாடை பிடிக்காது என்றதனால் தவிர்த்ததாக காரணம் கூறினார்கள்.
நபியவர்கள் பூண்டை பூரணமாக தவிர்த்ததனால் பூண்டு சாப்பிடுவது ஹராம் என்று தீர்ப்பு கூறவில்லை.
இப்படியாக நபியவர்கள் ஒன்றை தவிர்த்திருந்தால் அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும், அதனால் நாமும் அதைத்தவிர்க்க வேண்டும் என்பதற்கு அது சான்றாக அமையாது.
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தவிர்த்த விடயங்களுக்குப் பின் ஹராம் என்பதற்கு தெளிவான ஏதும் ஆதாரம் இல்லையாயின், அது தடுக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாகாது!
சில வேளை நபியவர்கள் தவிர்த்த விடயங்களை தவிர்ப்பது ஆகுமானதாக அல்லது சுன்னத்தாக அமையும்! அவை தக்க ஆதாரத்தை வைத்தே தீர்மானிக்கப்படும்..
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யாது விட்டவைகள் சில நேரம் ஆகும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக இருக்கலாம். அல்லது மார்க்கத்தில் அது கடமை இல்லை என்பதை தெளிவு படுத்துவதற்காகவும் இருக்கலாம்!
உதாரணமாக,
பெருநாள் தொழுகைக்கு அதான் சொல்வதை தவிர்த்தார்கள். இத்தவிர்ப்பினால் பெருநாள் தொழுகைக்கு முன் அதான் சொல்லுவது கடமை இல்லை என்பதை அறிய முடியும். காரணம் பெருநாள் தொழுகை பற்றி ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதுவும் கூறவில்லை. இது பெருநாள் தொழுகையில் அதான் இல்லை என்பதை தெளிவு படுத்துகின்றது.
பர்ளான தொழுகைக்குப் பின் கூட்டாக துஆக் கேட்டால் எந்தப் பெண்ணும் வெளியேற மாட்டார்கள். அதனால் வீணான சந்தேகங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். அத்தோடு அவர்களின் சிறு குழந்தைகள் சிரமப்படும்,
இப்படி பெரியதோர் அசம்பாவிதம் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் பர்ளான தொழுகைக்குப் பின் கூட்டாக துஆ கேட்பதை நபியவர்கள் தவிர்த்திருக்கலாம்.
நன்மையான காரியத்தை புதிதாக செய்வதை விட அதனால் ஏற்படும் தீய காரியத்தை தடுப்பதற்கு ஷரியத்தில் முன்னுரிமை உண்டு!. ஒன்றைச் செய்வதற்கும், விடுவதற்கும் பொருத்தமான காரணங்கள் இருக்க வேண்டும் தக்க காரணங்களை வைத்தே தீர்மானங்கள் எடுக்க வேண்டும். காரணங்கள் நீங்கும்போது தீர்ப்பும் மாறுபடும்.
பதனிஅருந்துவது ஷரீஅத்தில் கூடும். அதில் புளிப்பு ஏறி போதை வருமாயின் அது மதுவாக ஆகி விடுகின்றது. இது ஹராமாகும். பின் தெளிந்து போதையும் அகன்று விடுமாயின் வினாகிரி ஆகின்றது. வினாகிரி மிகச் சிறந்த உணவு என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
காரணங்கள்
நீங்கும்போது தீர்ப்பும் மாறுகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஆண், பெண் கலக்கும் நிலையும் அதனால் ஏற்படும் தீங்கும் இப்பொழுது பள்ளிவாசல்களில் கிடையாது. ஆகவே கூட்டாக துஆ கேட்பதில் எந்த தடையும் இல்லை.
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யாத ஒன்றை நன்மையை நாடி ஸஹாபாக்கள் செய்துள்ளனர். எண்ணமும், நோக்கமும் தூய்மையாயின் அதற்கு ஷரீஅத்தின் அங்கீகாரமும், பாராட்டும் உண்டு.
உதாரணத்திற்கு,
"குபா" என்ற இடத்தில் ஒருவர் இமாமத் செய்து வந்தார். அவர் ஒவ்வொரு ரக்காத்திலும் பாத்திஹா சூராவுக்கு பின்ஒரு சூறத்தை ஓதிய. பின், குல்குவல்லாகு அஹத் சூறாவையும் ஓதுவார், ஒவ்வொரு ரக்காத்திலும் ஓதுவார்.
இந்த செயல் ஸஹாபாக்களுக்கு பிடிக்கவில்லை. இவ்விடயம் நபியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. குறித்த ஸஹாபியை அழைத்து விளக்கம் கேட்டதற்கு,
அல்லாஹ்வின் திருத்தூதரே! அதனை நான் விரும்புகின்றேன் என்றார். உமது விருப்பம் உன்னை சொர்க்கத்திற்குள் நுழைத்து விடும் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சோபனம் கூறினார்கள்.
சிந்தித்துப் பாருங்கள்!
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் விட்ட ஒன்றை நபியவர்கள் காலத்திலேயே ஒரு ஸஹாபி செய்து வந்தார். அவரின் எண்ணத்தின் தூய்மை தெரிந்த பின் அச்செயலை அங்கீகரித்ததோடு அச்செயலின் காரணத்தினால் சொர்க்கம் செல்லும் பாக்கியத்தையும் பெறுவீர்! என்று சோபனம் கூறியதை பாருங்கள்!
ஹாபிழ் அல்லாமா இப்னு ஹஜருல் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புகாரி ஷரீபின் விரிவுரையான பத்ஹுல் பாரியில் இந்த ஹதீதுக்கு கீழே எழுதுகின்றார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யாத ஒரு வேலை அவர்களின் திருப்பொருத்தத்துடன் செய்யும்போது சொர்க்கத்திற்கு சோபனம் பெறுவதற்குரியதாகி விடுகின்றது.
ஆதாரம்: பத்ஹுல் பாரி. பாகம் 02. பக் 258
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யாத ஒரு விடயம் மற்றவர்கள் செய்யக் கூடாது என்பதற்கு ஒருபோதும் ஆதாரமாகாது!
ஒரு விடயம் தடுக்கப்பட வேண்டுமாயின், அதற்கு தக்க காரணம் காட்டப்பட வேண்டும்
ஒரு செயலில் ஏற்படும் நன்மையை விட தீமை அதிகம் காணப்படுமாயின், அந்த நன்மையான விடயத்தை தவிர்ப்பது கடமையாகும்;
எடுத்துக்காட்டாக,
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பெண்கள் ஜமாஅத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அக்காலத்தில் பெண்களுக்கு பூரண பாதுகாப்பு காணப்பட்டது. வஹி இறங்கிக் கொண்டிருந்த காரணத்தால் ஸஹாபாக்கள் மிகுந்த அச்சத்துடன் நடந்து கொண்டார்கள்.
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பின் வஹி நின்றுவிட்டதுடன் புதிது புதிதாக இஸ்லாத்தை தழுவியோரும் பள்ளிவாசலுக்கு வரத் தொடங்கினர். இக்காலத்தில் பெண்களின் பாதுகாப்பில் தளர்வு காணப்பட்டது. இதனை உணர்ந்து, பின் வர இருக்கும் பெரியதொரு விபரீதத்தை தடுப்பதற்காக ஜமாத்திற்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை அமீறுல்
முஃமினீன் உமர் பாறூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முற்றாகத் தடை விதித்தார்கள். இத்தடை இதுவரை நடைமுறையில் உள்ளது
பாருங்கள்! ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் செய்யாத ஒரு செயலைச் செய்து நபியவர்களின் பாராட்டை ஒரு நபித்தோழர் பெற்றார். அதே நேரத்தில் நபி அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு செயல் பின்னால் தடுக்கப்பட்டது!
இதிலிருந்து நாம் விளங்குவது என்ன?
அனுமதியும், தடையும் சில காரணங்களோடு சுழன்று கொண்டிருக்கின்றது.
கூட்டு துஆ கூடாது என்று தடுப்பதாயின், அதில் ஷரீஅத் அனுமதிக்காத ஒரு காரணம் இருக்க வேண்டும். நன்மையை விட தீமை மிகைத்து காணப்பட வேண்டியதாக அக்காரணம் அமைதல் வேண்டும். அப்படி ஒரு காரணம் கூட்டு துஆவில் உள்ளதா?
சிந்திக்க வேண்டும்!
நன்மைதரும் நற்காரியங்களைத் தடுத்து மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வழிகெட்ட வஹாபிகளின் கெட்ட எண்ணத்தை நிறைவேற்றுதைத் தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லை!
வஹாபிகளின் கூடாரமான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வஹாபிஸ சித்தாந்தங்களை மக்கள் பயன்படுத்தி பள்ளிவாசல்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த எடுத்த முடிவுதான் கூட்டுதுஆ கூடாது என்ற தீர்மானமாகும். இவர்களின் இத்தீர்ப்பு ஷரீஅத்தின் எந்த அடிப்படையையும் தழுவியதில்லை என்பதை நன்கு புரிந்து கொள்ளல் வேண்டும்.
தொடரும்.....

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.