குதுபுல் அக்பர் நூருத்தீன் அபுல் ஹசன் அலி அஷ் ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரலாறு.
சிறு வயதிலையே கல்வியில் கவனம் செலுத்தி திருக்குர்ஆனை திறன்பட மனனம் செய்து தீனியத்தான கல்வியில் சிறந்து விளங்கிய அன்னார் தூனிஸ் நகரம் சென்று மார்க்க ஞானம் பெற்றார்கள். சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று ஞானத் திலகமாகத் திகழ்ந்தார்கள். அவர்களின் அறிவு கடல் போல் விரிவடைந்தது. மேலும் ஆத்மஞானத்தில் அனுபவம் பெற நாடி பக்தாத் நகர் சென்றார். அங்கு மஹான் வாஸித்தி இமாம் (றஹ்) அவர்களை அணுகி ஆத்ம ஞான அறிவுகளை கேட்டு வந்தார். ஒருநாள் ஷேஹ்_ வாஸித்தி இமாம் அபுல் ஹஸன் அலி ஹாயகத்தின் அந்தரங்கத்தை அறிந்து நீர் தேடும் காமிலான ஷேஹ்_ உமது நாட்டில் உமக்காக காத்திருக்கிறார். அங்கு போய் சேரும் என்று அறிவித்தல் கொடுத்தார்கள். இதைக் கேட்டு தம் தாய் நாடு திரும்பினார்கள்.
மெய் நிலைகண்ட ஞானியாகவும், பெரிய குத்பாகவும் உயர்வடைந்த மத சீலர் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் ஷாதுலிநாயகம் அவர்களின் ஊருக்கு அருகிலுள்ள மலைமீது தங்கியிருந்தார்கள். அவர்கள் யாரையும் தமது சீடர்களாக்கிக் கொள்ளவில்லை. இப்னு மஷீஷ் (றஹ்) இமாம் அவர்கள் “நான் ஓர் ஈச்சம் மரம் வளர்க்கிறேன். அது பெரிய விருட்சமாகி பிற்காலத்தில் மக்கள் பயன் அடைவார்கள்” என கூறியிருந்தார்கள். இது ஷாதுலிநாயகம் அவர்களின் மகத்துவத்தைப் பற்றிமுன் அறிவிப்பாக கூறப்பட்டதாகும். தமது பரந்த ஞானம் மக்களுக்கு பயனளிக்கும் பொருட்டு அம்மெய்ஞானத்தைப் புகட்ட இமாம் ஷாதுலி நாயகத்தை எதிர்பார்த்திருந்தார்கள். தாம் தேடும் குருநாதரைச் சந்தித்து ஷாதுலிநாயகம் குரு சேவையில் சிலகாலமும் ஈடுபட்ட பின்பு ஞான தீட்சை பெற்று செய்கு அங்கு அவர்கள் ஆணைப்படிஅனுஷ்டானத்தில் ஈடுபட்டார்கள்.
அல்லாஹ்வின் அன்பராகிவிட்ட ஷாதுலி இமாம் அவர்களை மக்கள் மத்தியிலே போய் (தஹ்வா) பிரசாரம் செய்யுமாறு அல்லாஹ் அருளினான். செய்கிடம் விடைபெற்று அவர்கள் உத்தரவுப்படி முதலில் ஷாதிலா சென்றார்கள். ஆரம்பமாக ஷாதிலாவில் ஆத்ம ஞான போதனைகளைப் புரிந்தார்கள். அதனால் ஷாதுலி என்ற பெயர் வந்ததாகவும் கூறுவதுண்டு. எனவே அவர்கள் ஏற்படுத்திய ஞானப் பாதைக்கும் ஷாதுலிய்யா தரீக்கா எனப் பெயர் வரலாயிற்று.
இஸ்லாத்தின் இதயத்தை இயக்கிவிட்டு புத்துயிர் அளித்ததால் நூறுத்தீன் (மார்க்கத்தின் சுடர்) என்ற பெயர் பெற்றார்கள். மெய்ஞானி ஷாதுலிநாயகம் அவர்களின் ஞானப் பேருரைகள் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தன. ஷரீஅத்தைகண்டிப்பாய் கடைபிடிக்கும்படி மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். அவர்களின் அற்புதக் கருத்துக்களை கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். ஷாதிலாவில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஷெய்கின் சொற்படி தூனிஸ் சென்றார்கள்.
இவ்வாறு பல ஊர்களுக்கும் சென்று ஷாதுலிய்யா தரீக்கா என்ற ஞான வழியை அமைத்து அதன் மூலம் மக்களை ஞானவான்களாக மாற்றினார்கள்.
ஷாதுலிநாயகம் அவர்கள் புகழ் ஓங்குவதை பொருக்க முடியாத சில பொறாமைகாரர்கள் அவர்களுக்கெதிராகப் பொய்ப் பிரசாரம் செய்தார்கள். அரசுக்கெதிராக மக்களை திரட்டுவதாக சுல்தானிடம் முறையிட்டார்கள். இதனால் ஷாதுலி இமாம் அவர்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. சுல்தானின் விசாரனைக்கு உட்பட்டார்கள். பொய்க்குற்றச் சாட்டுக்களை தமது தவ வலிமையால் தகர்த்து உண்மையை வெளிப்படுத்தி சுல்தான்களின் நன் மதிப்பையும் ஆதரவையும் பெற்றார்கள்.
ஷெய்காகச் செயலாற்றிய பின்பு குத்புல் அக்பராக உயர்ந்தார்கள். வலிமார்களின் படித்தரங்களில் குத்பு என்பதே குத்புல் அக்பரின் கருத்து. கிலாபதுல் குப்ரா எனும் மேல் அதிகாரத்தைப் பெற்று திருநபி அவர்களின் கலீபதுல் அக்பராக கடமை புரிந்தார்கள். மாமேதை ஷாதுலி இமாம் அவர்கள் சில ஹிஸ்புகளைத் தவிர நூல் வடிவில் என்னுடைய நூல்கள் என் சீடர்களே என கூறிவிட்டார்கள். அநேக ஞான ஆசிரியர்களை உருவாக்கினார்கள்.
அந்தச் சீடர்கள் இயற்றிய நூல்கள் ஞான இரத்தினங்களாக உள்ளன. சீடர்களும் சீடர்களின் சீடர்களும் இமாம்களாகவும் குத்புகளாகவும் பிரகாசித்து ஷாதுலிய்யா ஞானப் பாட்டின் மூலம் இஸ்லாமிய ஞானத்தை உணர்ந்து உலகெங்கிலும் பரப்பினார்கள்.
அல்லாமா பூஸரி இமாம் (றஹ்) அவர்கள் கோர்வை செய்த புர்தா ஷரீப் ஒன்றே இதனைப் புரிந்துகொள்ளப் போதுமானது.
குருநாதர் ஷாதுலி நாயகம் பல ஹஜ்ஜூக்கள் செய்துள்ளார்கள். கடைசியாக தங்கள் குடும்பத்தாருடனும் சீடர்களுடனும் ஹஜ் செய்யப் புறப்பட்டார்கள். அபுல் அஜாயி என்ற சீடரிடம் மண்வெட்டியையும் மற்றும் சிலபொருட்களையும் குறிப்பாக எடுத்துக் கொள்ளும் படிபணித்தார்கள். அதுபற்றி அறிய விரும்பிய சீடர்களிடம் நம்மில் யாராவது பிரயாணத்தின் போது இறந்துவிட்டால் அடக்கம் செய்யத் தேவைப்படும் என்று இமாம் ஷாதுலிநாயகம் அவர்கள் கூறினார்கள்.
ஹஜ்ஜூக்குப் புறப்பட்டு ஈஜாப் பாலைவனத்திலுள்ள ஹமைஸரா என்ற இடத்தை வந்தடைந்தார்கள். அந்த அருமைச் சீடர் அபுல் அப்பாஸ் அஹ்மதுல் முர்ஸி (றழி) அவர்களை அருகில் அமரச் செய்து அரிய அறிவுரைகளை அளித்துவிட்டு அனைவரையம் அழைத்துதங்கள் கலீபாவாக அவரை நியமித்து அனைத்து அதிகாரங்களையும் அளித்துள்ளதாகவும் அறிவித்தார்கள். பின்னர் அன்று இரவு முழுதும் அல்லாஹ்வை தியானிப்பதிலேயே ஈடுபட்டார்கள். அப்படியே அவர்கள் ஆத்மா அல்லாஹ் அளவில் அமைதி அடைந்தது.
ஹிஜ்ரி 656 ஷவ்வால் மாதம் கி.பி 1258 இவ்வுலகைவிட்டு நித்திய இல்லமாகிய மறு உலகை அடைந்தார்கள்.
அபுல்ஹஸன் அலியுஷ் ஷாதுலி நாயகம் அவர்களுக்கு சுமார் 70க்கு மேற்பட்ட அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அன்னவருக்கு மூன்று மகன்களும் ஒருமகளும் இருந்தனர்.
இத்தரீக்கா வழி நடந்தவர்கள் மகோன்னத மகான்களாக,அரும் ஆத்ம ஞானியாக அறிவுத் துறையின் அருள் ஜோதிகளாக திகழ்ந்தார்கள். அவர்களுள் மாமேதை அபுல் அப்பாஸ் அல் முர்ஸி (றஹ்),மாமேதை இப்னு அதாஉல்லாஹ் அல் இஸ்கந்தரி (றஹ்),மாமேதை அப்துல் அளீம் அல் முன்திரி (றஹ்), மாமேதை அல் மகீனுத்துன் அல்அஸ்மர் (றஹ்), மாமேதை யாகூதுல் அர்ஷ் (றஹ்),மாமேதைஅபூ ஸைய்யிதுல் பூஸிரி (றஹ்) போன்றவர்கள் முக்கியமானவர்கள். அறிவுலக ஆசான்களாகிய இவர்கள் நூற்றுக்கணக்கான சமய நூல்களை அறிவுலகுக்கு அளித்தவர்கள்.
ஷாதுலிநாயகம் அவர்களின் காலத்துக்குப் பின் இஸ்லாமிய உலகில் தோன்றிய பேரறிஞர்கள் பெரும்பாலானோர் புனித ஷாதுலிய்யா தரீக்கா வழி நடந்தவர்களே என்பதற்கு சரித்திரம் சான்று பகர்கின்றது. அல் ஹிகம், ஷவாகிதுல் ஹக் லதாயிபுல் மினன் போன்ற முக்கிய நூல்கள் ஷாதுலிய்யா தரீக்காவை சார்ந்த மகான்கள் அறிவுத்துறைக்கு அர்ப்பணம் செய்த பெரும் சொத்துக்களாகும்.