கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
ஜனாஸா என்ற சொல் ஜனஸ் جنس என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது, இதன் பொருள்: மறைத்தல், அல்லது புதைத்தல் ஆகும்; ஷரீஅத்தின் பரிபாஷையில், சந்தூக்கில் வைக்கப்பட்ட மையித்திற்குக் கூறப்படும்; மையித் ميت என்ற சொல் இரு பாலுக்கும் பொதுவானது;
மௌத் என்பது, உடலிலிருந்து றூஹ் வெளியேறுவதைக் குறிக்கும், மரணம் மிகப் பெரிய சோதனையாக இருக்கிறது, அதுபற்றி பராமுகமாக இருப்பது அதை விட மோசமான சோதனையாக இருக்கும்; ஆகவேதான் மரணத்தை அதிகமாக ஞாபகப்படுத்திக் கொள்வது சுன்னத்தாக இருக்கின்றது;
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,
اكثروا من ذكر ها
மரணத்தின் நினைவை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
மரணத்திற்குத் தயாரில்லாத, பாவத்தின் சுமையை அதிகமாக்கிக் கொண்டுள்ள மனிதரல்லாதவரின் திடீர் மரணத்தில் மௌத்தின் கஷ்டம் குறைவாக இருக்கும்; ஜனாஸாவில் மக்கள் அதிகம் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக மரணத்தை பகிரங்கப் படுத்துவது சுன்னத்தாகும்;
இறையிலாளர்களான முதகல்லிமீன்களிடத்தில் "றூஹ்" என்பது, பசுமையான ஒன்றில் நீர் சேர்ந்திருப்பது போன்று உடலோடு ஒட்டியிருக்கும் நுண்மையான ஒரு பொருளாகும்; இவர்களின் கூற்றுப்படி, றூஹ் நித்தியமானது, அழிவில்லாதது; மரணத்தின் பின், முஃமினீன்களின் றூஹ் "இல்லியீன்" என்ற சொர்க்கத்திலிருக்கும்; அதன் ஒளி உடலோடு சேர்ந்திருக்கும்; இதற்கு முற்றிலும் மாறாக காபிர்களின் றூஹ் "ஸிஜ்ஜீன்" என்ற நரகத்தில் உடலோடு சேர்ந்திருக்கும்; திட்ட வட்டமான கருத்தின் படி, சுகமும், வேதனையும் றூஹோடும், உடலோடும் ஒன்று சேர்ந்ததாக இருக்கும்;
றூஹுகளை ஐந்து வகையாக விளக்கப்படுள்ளன,
1- நபிமார்களின் றூஹ்: உடலிலிருந்து வெளியேறியதும் சொர்க்கம் போய்ச்சேர்ந்து அங்குள்ள நிஃமத்துக்களை முழுமையாக அனுபவித்துக்கொண்டிருக்கும்.
2- இவ்வாறுதான் ஷுஹதாக்களின் றூஹுகளும் உடலிருந்து பிரிந்ததும் சொர்க்கம் புகுந்து அதன் நிஃமதுக்களிலிருந்து பயனடைந்து கொண்டிருக்கும்.
3- ஸாலிஹான முஃமினீன்களின் றூஹும் சொர்க்கம் புகுந்து அதன் நிஃமதுக்களைப் பார்த்துக் கொண்டிருக்கும், சுகம் அனுபவிக்காது.
4- முஃமினீன்களில் பாவிகளின் றூஹுகள் வானத்திற்கும், பூமிக்குமிடையில் காற்றில் தொடர்பாகியிருக்கும்.
5- காபிர்களின் றூஹுகள் "ஸிஜ்ஜீன்", என்ற நரகிலிருக்கும், ஸிஜ்ஜீன் என்பது ஏழாவது பூமிக்குக் கீழிருக்கும் தட்டுக்குக் கூறப்படும்.
முகத்தை முத்தமிடல்:,
-----------------------------
மையித்தின் உறவினர்களும், நெருங்திய நண்பர்களும் மையித்தின் முகத்தை முத்தமிடமுடியும், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹளறத் உத்மானிப்னு மழ்னூன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் முகத்தை முத்தமிட்டார்கள், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வபாத்தான பின், அன்னாரின் திரு முகத்தை ஹளறத் அபூபக்கர் சித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் முத்தமிட்டதாக புகாரி ஷரீபில் பதிவிடப்பட்டுள்ளது; உறவினர்களும், நெருங்கிய உற்ற நண்பர்கள் மாத்திரம் முத்தமிடுவது சுன்னத் என்று இமாம் சுப்கி றஹ்மதுல்லாஹி அலைஹி எல்லைப்படுத்துகின்றார்கள்; இன்னும், ஸாலிஹான மனிதரைப் பொறுத்தவரை முத்தமிடுவது ஆகுமானது; இவர்களல்லாதவர்களை முத்தமிடுவது மக்றூஃஆகும்.
முத்தமிடுவதில் ஒத்த இனமும் மஹ்றமியத்தும் நிபந்தனையாகும், அதாவது, ஆண் ஆணையும் ,பெண் பெண்ணையும் முத்தமிடலாம், தவிர திருமணமுடிக்க ஹறாமானவர்களையும் முத்தமிடலாம்; ஸஜ்தா செய்யும் இடத்தை முத்தமிடுவது ஏற்றமாகும்; ஆழ்ந்த துக்கத்திலிருப்பவர்களும், சுய கட்டுப்பாடில்லாதவர்களும் முத்தமிடுவது ஹறாமாகும்;
மைய்யித்தின் விடயத்தில் நான்கு விடயங்கள் பர்ளு கிபாயாவாகும்.
1- குளிப்பாட்டுவது,
2- கபனிடுவது
3- தொழுவிப்பது
4- நல்லடக்கம் செய்வது.
மையித்தின் கடமைகள் மரணம் நிச்சயமான பின்பே கடமையாகும், மரணத்தின் விடயத்தில் சந்தேகமிருந்தால் மரணத்தை உறுதிப்படுத்தும் வரை பிற்படுத்துவது வாஜிபாகும்.
பர்ளு கிபாயா
-------------------
சிலரின் செயலால் ஏனையோரின் பொறுப்பு நீங்கிவிடுவதைக் குறிப்பது பர்ளு கிபாயாவாகும், மையித்தைப்பற்றிய அறிவு ஒருவருக்கு மட்டும்தான் தெரியுமாக இருந்தால், நான்கு கடமைகளையும் நிறைவேற்றும் பொறுப்பு அவர்மீதே சாரும்; இந்த நான்கு பர்ளுகளும் பர்ளு கிபாயாவுக்குரிய செயல்கள் என்ற வரையறைக்குள்ளேதானிருக்கும்; மையித்தின் செலவுகள் அவர் சொத்தில், அல்லது கடமையானவர்களைச்சேரும்; இதன் விபரம் பின்னால் வரும் இன்ஷாஅல்லாஹ்! பர்ளு கிபாயாவுக்கான தொடர்பு புத்தியுள்ள பருவமடைந்த முகல்லிபீன்களைச் சார்ந்ததாக இருக்கும்; முகல்லப் என்பவர் ஷரீஅத்தின் கடமைகளைச் செய்யும் பொறுப்புள்ளவரைக் குறிக்கும்; மனிதர்களும், ஜின்களும் முகல்லப்களாவார்கள்; மலக்குகள் முகல்லப் அல்லர்;
இஹ்றாம் கட்டியவர்:
---------------------------
இஹ்றாம் கட்டிய மையித்திலும் நான்கு பர்ளும் கடமையாயினும் ஒரு வேறுபாடு உண்டு! இஹ்றாம் அணிந்த ஆணின் தலையும், பெண்ணின் முகமும் கபனில் திறந்திருக்க வேண்டும்; இன்னும் தைத்த ஆடைகளை அவர்களுக்கு பயன்படுத்தக்கூடாது; அவர்களின் கபனில் மணம் போன்றதைப் பாவிப்பது ஹறாமாகும்; வாசம் தொடர்பான பொருட்களை இஹ்றாம் கட்டியவரின் உடலிலோ, குளிப்பாட்டும் நீரிலோ; கபனிலோ பாவிக்கக்கூடாது என்பதற்கான காரணம் இஹ்றாமுடைய நிலையில் இவை ஹறாம் என்பதனாலாகும்; மௌத்தின் காரணமாக இஹ்றாமின் நிலை முற்றுப்பெறுவதில்லை; மரணத்தின் பின்பும் அது தொடரும்; தஹ்லீல் மூலம் மட்டுமே இஹ்றாமின் நிலை விடுபடும்; ஹஜ்ஜுக்காக, அல்லது உம்றாவுக்காக இஹ்றாம் கட்டியவர் இப்போது தஹ்லீல் ஆகவில்லை; தஹ்லீல் என்பது, ஹஜ்ஜின் வணக்கங்களிலிருந்து முற்றுப்பெறுவதற்குக் கூறப்படும்; இஹ்றாம் கட்டியவர் தஹ்லீல் ஆகுவதற்கு முன் மரணித்தால் கியாமத் நாளில் "லப்பைக்" கூறியவராக எழும்புவார்;
ان المحرم يأتي يوم القيامة ملبيا .
மையித்தின் செலவுகள்:
--------------------------
மையித்தின் செலவுகளில் நீரின் பெறுமதி, குளிப்பாட்டுவதற்கான கூலி; கபனின் பெறுமதி; மையித்தைத் தூக்கிச்செல்லல்; கப்று தோண்டல்; கப்றை மூடல்; உள்ளிட்ட கூலிகள் அடக்கமாகும்;
மையித்தின் செலவுகள் முதலில் மையித் விட்டுச்சென்ற சொத்திலிருந்து எடுக்க வேண்டும்; மனைவியின் மரணச்செலவு கணவன் மீதுள்ளதால் மனைவியின் சொத்திலிருந்து எடுக்கக்கூடாது; அதற்கான வசதி இருப்பது என்ற நிபந்தனையில் செலவுப்படி கொடுக்க வேண்டியவர் மீதே கடமையாகும்; வசதி என்பது ஃபித்றாவுக்குரிய அளவைப்போன்று ஒரு பகலும், ஒரு இரவும் சாப்பிடும் அளவை விட அதிகமாக இருப்பதைக் குறிக்கும்;
மையித்தின் சொத்தில், அடமானம்; ஸகாத் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்ட பின்புதான் மையித்தின் செலவு செய்யப்படும்; மையித்தின் செலவுக்குப் பின் கடனை நிறைவேற்ற வேண்டும்; இதற்குப்பின் வஸிய்யத் நிறைவேற்றப்படவேண்டும்; இதற்குப் பின்புதான் வாரிசுகளுக்குப் பங்கிடவேண்டும்;
மையித்தின் செலவுகளை வாரிசுகள் நிராகரித்தால், நீதிபதி வலுகட்டாயமாக அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்; மையித் எதையும் விட்டுச் செல்லாவிட்டால், உயிரோடு இருக்கும் போது அவரைப்பராமரிப்பது எவர் மீது கடமையோ அவர்மீது கடமையாகும்; அப்படியானவரும் இல்லையென்றால், இப்படியான கருமங்களுக்காக ஏதும் வக்பு சொத்துக்கள் இருந்தால் அதிலிருந்து செலவு செய்ய வேண்டும்; இதற்குப் பின் பைத்துல் மாலிலிருந்து செலவுகளைப் பாரமெடுக்கவேண்டும்; பின்னர், ஊரிலுள்ள முஸ்லிம்கள் மீது பொறுப்பாகும்; (அநாதவரான நிலையில்) மையித் திம்மி காபிராக இருந்தால், முஸ்லிம்கள் அதன் பொறுப்பை எடுக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகள்:
---------------------------
பெண் வசதியுள்ளவராக இருந்தாலும் கூட , மனைவியின் மையித் செலவுகள் வசதியுள்ள கணவன் மீதே சாரும் என்று ஷாபி மத்ஹபினர்கள் கூறுகின்றனர், ஹனபிகளிடத்தில் பெண்ணின் மரணச்செலவுகள் பொதுவாக கணவன்மீது சாரும்; மாலிகி, ஹன்பலி மத்ஹபினர்களிடத்தில் பெண்ணின் மரணச்செலவு அவர்மீது சேரும்.
தொடரும்...