السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 May 2024

மாண்டோரை உயிர்ப்பித்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!

 

மாண்டோரை உயிர்ப்பித்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!

அகிலத்தின் அருள்வடிவாக வந்த அற்புத நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அற்புதங்கள் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவையாகும். அன்னார் மூலம் வெளிவந்த அற்புதங்கள் ஒவ்வொன்றும் நிகரற்றவையாகும். ஒவ்வொரு முஃஜிஸாத்தும் அன்னாரின் நுபுவ்வத்தை உண்மைப்படுத்துவதாகவே உள்ளது. அல்லாஹ்வின் ஏகத்துவத்தைப் பறைசாற்றும் சாட்சியமாகவும் உள்ளது. இத்தியாதி அற்புதங்களில் மரணித்த பலரை மாநபியவர்கள் மறு உயிர்கொடுத்து உயிர்ப்பித்ததும் ஒன்றாகும். இது தொடர்பான நிகழ்வுகள் ஏராளம் ஏட்டில் பதியப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து சிலதைப் பொறுக்கி அடியிற்தருகின்றேன்.
இமாம் பைஹகி றஹ்மத்துல்லாஹி அலைஹி தலாயிலுன் நுபுவ்வத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.
ஒரு தினம் றஸுலே அக்றம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஒருவருக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள். எனது இறந்துபோன மகளை உயிர்ப்பித்துத் தந்தால் இஸ்லாத்தை ஏற்பேன் என்று அவர் நிபந்தனை விதித்தார். இறந்துபோன உனது மகளின் கப்றை அடையாளம் காட்டுமாறு நபியவர்கள் அந்த நபரிடம் கேட்டார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை அழைத்துக் கொண்டு மகளின் கப்றை அடையாளம் காட்டினார். பெயர் கூறி கப்றாளியை நபியவர்கள் விளித்தார்கள்.
அல்லாஹ்வின் திருத்தூதரே! தங்கள் அழைப்புக்கு அடி பணிந்தேன். எல்லாவிதமான நற்பாக்கியங்களும் தாங்களுக்கு உரித்தாக உள்ளன என்று கப்றிலிருந்து பதில் வந்தது.
மீண்டும் உலகில் வாழ விரும்புகின்றாயா? என்று திரு நபியவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் திருத்தூதரே! என் பெற்றோரை விட அல்லாஹ் என் மீது இரக்கமுள்ளவனாகவும், அன்புள்ளவனாகவும் உள்ளான். மறுமையைவிட உலகை யாராவது மேலாகக் கருதுவார்களா? இல்லை! நான் மீண்டும் உலகில் வாழ விரும்பவில்லை! என்று மீண்டும் பதில் வந்தது.
அல்லாமா காழி இயாழ் றஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களது ஷிபா என்ற நூலில் வரைகின்றார்கள்.
ஒரு மனிதர் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அவைக்கு வந்து, அல்லாஹ்வின் திருத்தூதரே! இறந்த எனது மகளை ஜாஹிலியாக் கால வழக்கப்படி இன்ன ஓடையில் வீசிவிட்டேன். இப்போது என் மகளை உயிர்ப்பித்துத் தாருங்கள்! என்று வினயமாக வேண்டினார்.
கருணை வடிவான காஸிம் நபியவர்கள் அவரை அழைத்துக்கொண்டு குறிக்கிட்ட ஓடைப் பக்கம் சென்று இறந்த அவரின் மகளின் பெயர் விளித்து அல்லாஹ்வின் அனுமதியுடன் எனக்கு பதில் கூறும்! என்றார்கள். கப்றிலிருந்து வெளிவந்து அல்லாஹ்வின் திருத்தூதரே! உங்கள் முன் நான் சரணம்! என்றாள்.
உன் தாயும், தந்தையும், முஸ்லிமாகி விட்டார்கள். நீர் விரும்பினால் உன் பெற்றோருடன் உன்னை சேர்த்து வைக்கின்றேன் என்று தாஹா நபியவர்கள் கூறினார்கள். அன்னையும், பிதாவும் எனக்கு அவசியமில்லை. இவ்விருவரையும் விட அல்லாஹ் என்மீது அதிக இரக்கமுள்ளவனாக இருக்கின்றான் என்று பதில் கூறினாள்.
இப்னு அதிய்யி, இப்னு அபித் துன்யா, இமாம் பைஹகி அபூநுஅய்ம் உள்ளிட்ட கீர்த்திமிக்க ஹதீதுத் துறை அறிஞர்கள் ஹளரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்.
நாங்கள் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுடன் ஸுப்பா என்ற திண்ணையில் இருப்பது வழக்கம். ஒரு தினம் கண் தெரியாத ஒரு கிழவி தனது இளம் மகனுடன் ஹிஜ்ரத் மேற்கொண்டு நபியவர்கள் முன் வந்தாள். சில நாட்கள் கழிந்த பின் மதீனாவில் பரவிய கொலறா இந்த வாலிபனையும் பிடித்தது. அவன் படுக்கையிலானான். சில நாட்களுக்குள் நோய் முற்றி மூச்சை விட்டான். அவர் வபாத்தானதும் நபிகள் நாயகமவர்கள் அவரின் நயனத்தை மூடினார்கள்.
மையித்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நபியவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள் அதற்கான முழு ஏற்பாட்டையும் செய்த பின் குளிப்பாட்ட ஆரம்பிக்கும்போது மகன் மரணித்துவிட்ட செய்தியை அவரின் தாய்க்கு எத்திவைக்குமாறு ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறினார்கள். அம்மூதாட்டியிடம் சென்று மகன் மரணித்த செய்தியை எத்தி வைத்தேன்.
அம்மூதாட்டித் தாய் வந்து மகனின் காலடியில் அமர்ந்தார். இரு பாதத்தையும் பிடித்துக் கொண்டு என் மகன் உண்மையாகவே மரணித்து விட்டார்தானா? என்று கேட்டார். அதிலென்ன ஐயம்! அவர் ஆன்மா அல்லாஹ்விடம் சென்று விட்டது என்றனர் நபிமணித் தோழர்கள். அத்தாய் முறையிடலானாள்.
யா அல்லாஹ்! நான் முழு விருப்பத்துடன்தான் இஸ்லாத்தை ஏற்றேன் என்பதை நீ நன்கு அறிவாய்! விக்ரகங்களில் வெறுப்படைந்து அதன் தொடர்பை என்னிலிருந்து அகற்றினேன். உனதருளை எதிர்பார்த்தே உன் வாயலுக்கு வந்தேன்.
எனது மகனின் மரணத்தால் விக்ரஹங்களை வணங்குவோர் மகிழ்ச்சியடையும் நிலையை எனக்கு ஏற்படுத்திவிடாதே! என்னால் தாங்க முடியாத இந்தச் சோதனையை என் மீது சுமத்திவிடாதே!
தனது முறையீட்டை முடித்ததும் இறந்த மகன் காலை உசுப்பினார். முகத்தை மூடியிருந்த துணியை அகற்றிவிட்டு எழுந்து வெளியே வந்தவர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தார். றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் வபாத்தான பின்பும் அவரும் அவரது தாயும் உயிர் வாழ்ந்தனர்.
ஆதாரம் : அஷ்ஷிபா, பாகம் 01, பக்கம் 449 - 450


கலீபத்துல் காதிரி,அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.