السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 May 2024

முஹ்யித்தீன் மௌலிது பற்றிய pjயின் அபத்தங்கள் 03

 

முஹ்யித்தீன் மௌலிது பற்றிய pjயின் அபத்தங்கள் 03

மனிதனை ஜின் கடத்திச் செல்வதற்கு நபி மொழியில் ஆதாரம் உண்டு!
அப்துல்லாஹ் என்பவர் கூறுகின்றார், பாத்திமா என்ற எனது மகள் மொட்டை மாடியிலிருக்கும் போது இனந்தெரியாதோரால் ஹிஜ்ரி 537ல் கடத்தப்பட்டுள்ளாள். அப்போது அவள் பதினாறு வயது நிரம்பிய குமரியாக இருந்தாள். நான் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ரழியல்லாஹு அன்ஹுவிடம் உடன் சென்று என் மகளின் கதையைக் கூறினேன். என் கதையைக்கேட்ட அவர்கள் என்னைப் பார்த்து, நீர் கர்க் என்ற காட்டுப் பகுதியில் உள்ள பாழடைந்த கோட்டையின் பக்கம் சென்று அங்கு இருந்துகொண்டு பிஸ்மில்லாஹி அலா நிய்யத்தி அப்தில் காதிர் என்று கூறி பூமியில் உம்மைச் சுற்றி ஒரு வட்டத்தைப்போடும்.
இரவானதும் ஜின் கூட்டம் பலகோலங்களில் உன்னைக் கடந்து செல்லும். அவர்களின் பயங்கர கோலங்களைக்கண்டு நீ அச்சம் அடைய வேண்டாம். அதிகாலை ஆனதும் அவர்களின் மன்னர் படை பரிவாரங்களுடன் உன் அருகில் வருவார். உன் தேவையை உன்னிடம் விசாரிப்பார்.
என்னை அப்துல்காதிர் உங்களிடம் அனுப்பி வைத்தார் என்று கூறிவிட்டு, உமது மகளின் கதையை அவரிடம் எடுத்துக்கூறும் என்றார்கள் குறித்த இடம் சென்று ஷைய்கவர்கள் கூறிய படி செய்தேன்.
பயங்கரகோலத்தில் ஜின்களின் கூட்டம் என்னைக் கடந்து சென்றது. ஆனால் நான் நின்று கொண்டிருந்த வட்டத்தை நெருங்க அவர்களால் முடியவில்லை, இரவு பூராகவும் ஜின்களின் கூட்டம் சென்று கொண்டே இருந்தது. அவர்களின் அரசர் குதிரையில் அவரைச் சுற்றி பரிவாரங்களோடு வந்தார். என்னைக் கண்டதும் வட்டத்திற்கு வெளியே மன்னர் நின்று கொண்டு மனித இனத்தைச் சேர்ந்தவரே! உமது தேவை என்ன? என்று என்னைக் கேட்டார்.
அஷ்ஷெய்கு அப்துல்காதிர் உங்களிடம் என்னை அனுப்பிவைத்தார் என்றேன். உடன் குதிரையை விட்டும் இறங்கி பூமியை முத்தமிட்டார். வட்டத்தின் வெளியே அமர்ந்தார். அவருடன் வந்த பரிவாரமும் அமர்ந்து கொண்டனர். உன் கதை என்ன? என்று மன்னர் என்னிடம் கேட்டார். என் மகளின் கதையை அவரிடம் சொன்னேன். என் கதையைக் கேட்ட அவர் இதைச் செய்தவர் யார் என்று விசாரித்தார்? அவர்களால் எவரையும் அடையாளம் காண முடியவில்லை! பின் ஒரு மணித்துளி கடந்தபின், எனது மகளையும், ஒரு முரட்டு ஜின்னையும் மன்னர் முன்கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இது சீன நாட்டைச்சேர்ந்த முரட்டு ஜின் (மாரிது) என்று அங்கு கூறப்பட்டது. ஒரு குத்பின் கட்டுப்பாட்டுக்குக்கீழ் இருந்த ஒருவரை தூக்கி வருவதற்கு உம்மைத் தூண்டியது எது? என்று மன்னர் அம்முரட்டு ஜின்னிடம் கேட்டார். என் மனம் அவளைக் கவர்ந்து விட்டது. அவளை நான் விரும்பினேன் என்று அந்த ஜின் கூறியது. ஜின்னை கொல்லுமாறு மன்னர் பணித்தார். என் மகளை என்னிடம் ஒப்புவித்தார்.
அஷ்ஷெய்கு அப்துல் காதிர் அவர்களுக்கு இன்றிரவு நீங்கள் வழிபட்டது போன்று இதற்கு முதல் ஒரு நாளும் நான் கண்டதில்லை என்று மன்னரிடம் கூறினேன். அதற்கு உண்மைதான்! வீட்டிலிருந்து கொண்டே பூமியின் கோடியில் வாழுகின்ற முரட்டு ஜின்கள் உட்பட அனைவரையும் அவர் (முஹ்யித்தின் ஆண்டகை) அவதானித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கம்பீரமான பார்வைக்குப்பயந்து ஜின்கள் ஓடி அவர்கள் இடங்களில் ஒழிந்து கொள்வார்கள். அல்லாஹுத்தஆலா ஒரு குத்பை நியமித்தால் அவருக்கு மனிதர்கள், ஜின்கள் அனைவரிலும் ஆதிக்கத்தையும் வழங்கிவிடுகின்றான் என்று ஜின்களின் மன்னர் கூறினார்.
ஆதாரம் : பஹ்ஜதுல் அஸ்றார், பக்கம்-140
மேற்கண்ட ஆக்கபூர்வமான நிகழ்ச்சி முஹ்யத்தீன் மௌலிதிலும் இடம் பெற்றுள்ளது. பீ.ஜே. சாகிபு, இந்த அற்புத நிகழ்ச்சியை கடுமையாக விமர்சிக்கிறார். பி.ஜே.யின் விமர்சனத்தின் புனிதத் தன்மையை பார்க்கமுன் மனிதனை ஜின்கடத்தும் என்பதற்கான ஆதாரபூர்வமான சான்றுகளை முதலில் பார்ப்போம்.
அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஓரிரவு தன் மனைவியரிடம் சில செய்திகளைக் கூறினார்கள். அப்போது அம்மனைவியர்களில் ஒருவர் இது குராஃபாவின் செய்திகளைப் போன்றல்லவா இருக்கின்றது? என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குராஃபாவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? குராஃபா என்பவன் உக்றா என்ற வகுப்பாரைச் சார்ந்தவன்.
அறியாமைக் காலத்தில் ஜின் அவனைத் தூக்கிச் சென்று சில காலம் வைத்திருந்தது. பின்னர் மனிதர்களிடம் சேர்த்து விட்டது. அப்போது அங்கு கண்ட அதிசயங்களை மக்களிடம் கூறினான், (எனவே அதிசயமான செய்திகளைக் கேட்டால்) மக்கள் குராஃபாவின் செய்தி என்று சொல்லத் தொடங்கினர் என்று கூறினார்கள்.
ஆதாரம் : ஷமாயிலுத்திர்மிதி, ஹதீது எண் 251
இந்த நூலை மவ்லவி எம்.ஐ.ஹம்மது சுலைமான் தமிழாக்கம் செய்துள்ளார். இதற்கு பீ.ஜே. சாகிபு அணிந்துரை வழங்கியுள்ளார். அதில்,
நபிகள் நாயகத்தின் அங்க அவயங்களையும், பழக்க வழக்கங்களையும் கூறுவதற்கென்றே வரலாற்றாசிரியர்கள் தனியாக நூல்கள் எழுதியுள்ளனர்.
அத்தகைய நூல்களின் இமாம் திர்மிதி எழுதிய ஷமாயிலுத்திர்மிதி முதலிடத்தில் உள்ள நூலாகும். மேலும் பீ.ஜே. எழுதுகின்றார்,
…நபிகள் நாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்தாகவேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று என பரிந்துரைக்கின்றேன்.
பீ.ஜே. ஆதாரபூர்வமானது என்று அவரே பரிந்துரை செய்துள்ள நூலில் ஜின் மனிதனை கடத்தில் செல்லும் என்பது தெளிவாகி விட்டது.
தவ்ஹீது ஜமாஅத்தின் மூலபிதா இப்னு தைமிய்யா என்பது யாவரும் அறிந்த விடயம். இவர் அல்புர்கான் பைனஅவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷெய்த்தான் என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அதனை தமிழ்நாடு கோட்டார் எஸ்.கமாலுத்தீன் தமிழாக்கம் செய்து இறைநேசச் செல்வர்களும், ஷைத்தானின் தோழர்களும் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.(அல்ஜன்னத் இதழின் ஆசிரியரான இவர், பி,ஜே.யின் முன்னாள் நண்பர் என்பதும் அல்ஜன்னத்தின் ஆரம்ப ஆசிரியர் பி.ஜே.என்பது கவனிக்கத்தக்கது). அதில் 252ம் பக்கத்தில் சிலரை ஜின்கள் தூக்கிச்சென்று மக்கா, பைதுல் முகத்திஸ் போன்ற இடங்களுக்குக் கொண்டு செல்லும், சிலரை அரஃபா தினத்தன்று தூக்கிச்சென்று அதே இரவிலேயே திருப்பிக் கொண்டுவந்து அவருடைய ஊரிலேயே விட்டுவிடும் என்று எழுதியுள்ளார்.
இதைப் படித்த சூட்டோடு பீ.ஜே.யின் ஆய்வின் அபத்தங்களைப் படியுங்கள்! பி.ஜே. கூறுகிறார்.
ஜின் என்றொரு படைப்பு இருப்பது உண்மைதான். ஆயினும், அவை மனிதனைக் கடத்திச் செல்லும் என்பதற்கு எந்த ஆதாரமும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ கிடையாது?
மேலும் கூறுகிறார்
அப்துல் காதிர் ஜீலானி காலத்திற்கு முன்பிலிருந்து நபி (ஸல்) அவர்கள் காலம் வரையுள்ள ஐநூறு வருடங்களில் எந்த ஆணும், பெண்ணும் ஜின்களால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் ஆதாரம் இல்லை.
முஹ்யத்தீன் மௌலிது ஓர் ஆய்வு பக்கம்-76
இப்போது புரிகின்றதா? பி.ஜே. சாகிபின் ஆய்வின் ஆழம்? அபத்தம் எங்கே இருக்கின்றது! என்ற இரகசியம் விளங்குகின்றதா? இப்போது.
ஜின்கள் அப்துல் காதிர் ஜீலானிக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்பது குர்ஆனுடைய போதனைக்கு மாற்றமாகும் என்று பி.ஜே. சாகிபு
மனிதனைவிட ஜின் சக்திவாய்ந்தது என்று கூறும் இவர் பல்கீஸின் சிம்மாசனத்தை கண்மூடித் திறப்பதற்கு முன் கொண்டுவருவதாக ஒரு ஜின் கூறிய விபரம் திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதாக உளறுகிறார்.
பி.ஜே. சாகிபுக்கு ஹதீதும் விளங்கவில்லை. குர்ஆனும் புரியவில்லை. இப்ரீத் என்ற சக்திவாய்ந்த ஜின் அவை கலையமுன் அரசியின் சிம்மாசனத்தைக் கொண்டுவருவதாக கூறியதை சுலைமான் நபியவர்கள் ஏற்கவில்லை. அப்போது அச்சபையில் இருந்த ஆஸிப் இப்னு பர்கியா என்ற மனிதர் அதனை கண்மூடித் திறக்கும்முன் கொண்டு வந்ததாகத் திருக்குர்ஆன் மிகத்திருத்தமாக கூறும்போது இந்த பி.ஜே. குர்ஆனையே மாற்றி சித்தம் கலங்கிப் பேசுகின்றார்.
தொடரும்.....