வையகக் காரணி, அகிலத்தின் அருட்பிளம்பு நபிகள் கோமான் ஈருலக இரட்சகர் ஏந்தல் நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் படைப்பு என்றும், அல்லாஹுத்தஆலா அவர்களின் ஒளியையே முதலில் படைத்தான். இந்த ஒளியிலிருந்தே அனைத்துப் படைப்பினங்களையும் வெளியாக்கினான் என்றும், சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூறி வருகின்றனர்.
ஸஹாபாக்கள் காலம் முதல் இதுநாள்வரை இக்கருத்து அறிஞர்களால் உரைக்கப்பட்டும், வரையப்பட்டும் வந்துள்ளது. நபிகள் நாயகத்தின் வரலாற்று நூற்களிலும், ஹதீதுப் பெரு நூற்களிலும் திருமறை விரிவுரைகளிலும், மௌலிது நூற்களிலும் இக்கருத்து முக்கியத்துவம் கொடுத்து கூறப்பட்டுள்ளது.
இக்கருத்து ஹிந்துக்களின் அத்வைத் சித்தாந்தத்தைப் போதிக்கும் பிழையான வாதம் என்றும், இக்கருத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்றும் சிலர் பகிரங்கமாகக் கூறுகின்றனர். அதனால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒளியிலிருந்து படைக்கப் பட்டார்கள். அவர்களின் ஒளியிலிருந்துதான் எல்லாம் படைக்கப்பட்டன என்பதை தக்க ஆதாரத்துடன் நிறுவியுள்ளோம். கவனமாகப் படியுங்கள்! உண்மையை தெளிவீர்கள்!
1. நிச்சயமாக அல்லாஹ்விடம் இருந்து பேரொளியும், தெளிவும் உள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது.
(அல்குர்ஆன் - 5 : 15)
2. அல்லாஹ் வானங்கள் பூமியின் பிரகாசமாக இருக்கின்றான். அவனது பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கி்ன்றது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டிருக்கிறது).
3. நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு) சாட்சியாகவும், நட்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும் அல்லாஹ்வின் அனுமதியின்படி (ஜனங்களை நீர்) அவன்பால் அழைப்பவராகவும் ஒளி வீசும் (மணி) விளக்காகவும் (இருக்கின்றீர்கள்).
(அல்குர்ஆன் - 33 : 45,46)
4. அல்லாஹ்வுடைய ஒளியை தம் வாய்களால் (ஊதி) அணைத்து விடலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்நிராகரிப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஒளி வீசும்படி) பூர்த்தியாகவே ஆக்கி வைப்பான்.
(அல்குர்ஆன் - 61 : 

5. இவர்கள் தங்கள் வாய்களைக்கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப்போவதில்லை
(அல்குர்ஆன் - 9 : 32)
முதல் திருவசனத்தில் நூர் என்ற சொல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும். வெளிச்சமில்லாமல் புத்தகத்தை படிக்க முடியாதது போன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் இன்றி திருக்குர்ஆனை விளங்க முடியாது.
இரண்டாவது திருவசனத்தில் அல்லாஹ்வுடைய நூர் என்று சுட்டிக்காட்டப்படும் வாக்கியமும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும். காரணம் அல்லாஹ் ஒப்பு உவமைகளை விட்டும் பரிசுத்தமானவன். ஆனால், இத்திருவசனத்தில் அல்லாஹ்வின் நூர் - (ஒளி)க்கு உவமை கூறப்பட்டுள்ளது. அதனால் இங்கு குறிக்கப்படும் நூர் - ஒளி - றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும்.
மூன்றாவது திருவசனத்தில் சிறாஜுன் முனீர் பிரகாசிக்கும் தீபம் என்று நாயகமவர்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் மற்றுமொரு இடத்தில் சூரியனையும் சிறாஜுன் முனீர் என்று குறிப்பிட்டுள்ளான். - ஒளி என்பது தானும் வெளியாகி ஏனையவற்றையும் வெளியாக்குவதற்கு கூறப்படும். சூரியன் தானும் பிரகாசித்து சந்திரன், நட்சத்திரங்கள், உள்ளிட்ட பல்வேறு கிரகங்களையும், தாரகைகளையும் பிரகாசிக்கச் செய்கின்றது.
இவ்வாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரகாசிக்கும் பேரொளியாக இருப்பதுடன், நபிமார்கள் ஸஹாபாக்கள், வலிமார்கள் உள்ளிட்டோரை பிரகாசிக்கச் செய்பவர்களாகவும் விளங்குகின்றார்கள்.
நான்காவதும், ஐந்தாவதும் திருவசனங்களில் குறிப்பிடப்படுகின்ற நூர் ஒளி என்பது றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும். காபிர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழித்து விட பகீரதப்பிரயத்தனம் செய்தனர். ஆனால் அல்லாஹுத்தஆலா பெருமானாரின் அனைத்துப் பணிகளையும் தடையின்றி பூர்த்தியாக்கினான்.
முதல் திருவசனத்தில் வரும் நூர் என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறிக்கும் என்று தப்ஸீர் ஜலாலைன் விளக்கம் சொல்கிறது.
தப்ஸீர் ஜலாலைன் இன் விரிவுரைத் தப்ஸீரான தப்ஸீர் ஸாவியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நூர் - ஒளி என்று குறிப்பிடக் காரணம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்வைகளை ஒளி பெறச்செய்கிறார்கள். மேலும், வெற்றியின் பக்கம் அவற்றுக்கு வழிகாட்டுகிறார்கள். மேலும், புறப்புலன்களால் பார்க்கப்படும் காட்சிக்கும், அகப்புலன்களால் அறியப்படும் அறிவுக்கும், நபியவர்கள் அஸலாக - மூலமாக விளங்குகின்றார்கள் என்றும் வரைந்துள்ளார்கள்.
இதே கருத்தையே தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக், தப்ஸீர் காஸின் உள்ளிட்ட அநேக தப்ஸீர்கள் கூறுகின்றன. இவற்றுள் தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் ஸாவி, தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக் ஆகிய தப்ஸீர்கள் அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதார்த்தம் ஒளி என்பதை ஹதீது நூற்கள் தெளிவாக பறைசாற்றுகின்றன. பின்வரும் விளக்கத்தை கவனியுங்கள்.
01. இமாம் அப்துர்ரஸ்ஸாக் அபூபக்கர் பின் ஹுமாம் ரலியல்லாஹு அன்ஹு, இமாம் மாலிக் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவரும், இமாம் அஹமது இப்னு ஹன்பல் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆசிரியரும், இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் றஹ்மத்துல்லாஹி அலைஹிமா ஆகியோரின் ஆசிரியரி்ன் ஆசிரியருமாவார். இவர்களின் பிரசித்தி பெற்ற ஹதீதுப் பெருநூல் முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் என்பதாகும். இதில் ஹளரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீது இடம்பெற்றுள்ளது. அது வருமாறு.
ஹளரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் திருத்தூதரே!
என்தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அனைத்திற்கும் முதல் அல்லாஹுத்தஆலா படைத்த முதல் படைப்பு எது? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் நீண்ட விடை பகர்ந்தார்கள்.
அல்லாஹுத்தஆலா முதலில் தன்ஒளியிலிருந்து உமது நபியின் ஒளியை படைத்தான். பின்னர், அந்த ஒளி அல்லாஹ் நாடிய விதத்தில் அவன் சக்தியால் சுற்றிக்கொண்டிருந்தது. அதுவேளை லௌஹுல் மஹ்பூழ் என்ற பலகை, கலம், சொர்க்கம், நரகம், சூரியன், வானம், பூமி, சந்திரன், ஜின், மனித இனம் எதுவும் இருக்கவில்லை.
அல்லாஹுத்தஆலா படைப்பை படைக்க நாடியபோது அந்த ஒளியை நான்காக பங்கிட்டான். அதில் ஒரு பகுதியிலிருந்து கலத்தையும், மறுபகுதியிலிருந்து லௌஹுல் மஹ்பூழையும் மூன்றாவதிலிருந்து அர்ஷையும் படைத்தான். எஞ்சிய நான்காவது பாகத்தை நான்காக பங்கிட்டான்.
அதன் முதற்பகுதியிலிருந்து அர்ஷை சுமக்கும் மலக்குகளையும், இரண்டாம் பகுதியிலிருந்து குர்ஷியையும், மூன்றாம் பகுதியிலிருந்து ஏனைய மலக்குகளையும் படைத்தான். மிஞ்சிய ஒரு பகுதியை மேலும் நான்கு பாகங்களாக்கினான். அதன் முதற்பாகத்திலிருந்து வானத்தையும், இரண்டாம் பாகத்திலிருந்து பூமியையும், மூன்றாம் பாகத்திலிருந்து சுவர்க்கத்தையும் படைத்தான். எஞ்சிய நான்காவது பாகத்தை மேலும் நான்கு பாகங்களாக்கினான். இப்படி ஹதீது நீன்று கொண்டே செல்கிறது.
மேற்கண்ட ஹதீதை இமாம் பைஹகீ அவர்கள் தலாயிலுன் நுபுவ்வத்திலும், புகாரி ஷரீபுக்கு விரிவுரை எழுதிய அல்லாமா கஸ்தலானி அவர்கள் மவாஹிபிலும், இமாம் இப்னு ஹஜர் மக்கி அவர்கள், அப்ழலுல் குறா, பதாவா ஹதீஸியா என்ற நூற்களிலும், அல்லாமா பாஸி அவர்கள், மதாலி உல் மஸர்ராத் என்ற நூலிலும், இமாம் ஸர்க்கானி அவர்கள் ஷறஹ் மவாஹிபுல் லதுன்னியாவிலும், ஷைய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திது திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹிம் மதாரிஜுன் நுபுவ்வத்திலும், இன்னும் ஏராளமான இமாம்களும் முஹத்திஸ்களும் இந்த ஹதீதின் ஸனதை - உறுதி செய்து இது ஸஹீஹான ஹதீதுதான் என்று கட்டியம் கூறியுள்ளார்கள்.
இமாம் முல்லா அலிகாரி றஹ்மத்துல்லாஹி அலைஹி மிஷ்காத் என்ற ஹதீதுத் தொகுப்பு நூலுக்கு பிரசித்தி பெற்ற மிர்காத் என்ற ஒரு விரிவுரையை எழுதிய அறிஞர். இவர் இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைத் தொகுத்து மௌலுஆத்துல் கபீர் என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளி கிழக்கிலும், மேற்கிலும் மிகத் தெளிவாக படர்ந்திருந்தது. அல்லாஹுத்தஆலா முதன்முதலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளியைத்தான் படைத்தான். அவன் (அல்லாஹ்) தனது திருமறையில் அவர்களுக்கு நூர் - ஒளி என்ற திருநாமத்தை சூட்டியுள்ளான் என்று எழுதியுள்ளார்கள்.
புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுதிய இமாம் அஹ்மது கஸ்தலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறினார்கள்.
அல்லாஹுத்தஆலா சிருஷ்டிகளை வெளியாக்க நாடியதும் அஹதிய்யத் என்ற நிலையில் ஸமதிய்யத் என்ற பேரொளியிலிருந்து ஹகீகத்தே முஹம்மதிய்யாவை வெளிப்படுத்தினான். இதில் (ஹகீகத்தே முஹம்மதிய்யாவில்) இந்த மேலுலகம், கீழுலகம் உள்ளி்ட்ட அனைத்து உலகங்களையும் வெளிப்படுத்தினான்.
ஆதாரம் : மவாஹிபுல்லதுன்னியா பாகம் - 01, பக்கம் - 55
அல்லாமா ஸர்க்கானி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மவாஹிபுல்லதுன்னியாவின் விரிவுரையில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
அஹதிய்யத் என்ற நிலை அல்லாஹ்வின் தாத்தின் முதற்குறிப்பாகும். அதன் வெளிப்பாட்டில் முதல் நிலையாகும். இந்த நிலையில் அல்லாஹ்வின் தாத்திற்கு வேறானது எதுவுமில்லை.
அல்லாஹ் தனியாக இருந்தான், அவனுடன் எவரும் இருக்கவில்லை என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழி இந்த நிலையையே சுட்டிக் காட்டுகின்றது. இதனை அல்காஷானி றஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆதாரம் : ஷரஹு ஷர்க்கானி பாகம் - 1 பக்கம் - 27
மிஷ்காத் என்ற ஹதீதுப் பெரு நூலுக்கு அறபியிலும், பாரசீகத்திலும் லம்ஆத் அஷிஃஅத்துல்லம் ஆத் - என்று விரிவுரை எழுதிய உலகப் புகழ்பெற்ற ஹதீதுத்துறை பேரறிஞர் ஷெய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
நபிமார்கள் அல்லாஹ்வின் தாத்தி்ன் திருநாமங்களிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். வலிமார்கள் ஸிபத்துக்களின் திருநாமங்களிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். ஏனைய படைப்புக்கள் ஸிபத்தின் செயற்பாடுகளினால் படைக்கப்பட்டுள்ளனர்.
றஸுல்மார்களின் நாயகரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாத்தே ஹக்கிலிருந்து படைக்கப்பட்டுள்ளார்கள். நபிகள் நாயகத்தின் ஹக்கி்ன் வெளிப்பாடு (ழுஹுர்) தாத்திலிருந்தாகும்.
ஆதாரம் : மதாரிஜுன் நுபுவ்வத் பாகம் - 2, பக்கம் - 609
தலாயிலுல்கைறாத் என்ற பிரபலமான ஸலவாத் தொகுப்பு நூலுக்கு அல்லாமா அஷ்ஷெய்கு பாஸி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய மதாலிஉல்மஸர்ராத் என்ற நூலில் எழுதுகின்றார்கள்.
இமாம் அஷ்அரி (சுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாவுக்குரிய இமாம்) கூறகின்றார்கள்.
அல்லாஹ் பேரொளியானவன். ஏனைய ஒளிகளைப் போன்று அல்ல. நபியவர்களின் பரிசுத்த றூஹுடைய பிரகாசமானது அல்லாஹ்வின் பேரொளியிலிருந்து உள்ளதாகும். மலக்குகள் அந்தப் பேரொளியின் சிதறல்களாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
அல்லாஹுத்தஆலா முதன் முதலில் எனது றூஹைப் படைத்தான். எனது றூஹிலிருந்துதான் ஏனைய படைப்பினங்களை வெளிப்படுத்தினான்.
ஆதாரம் : மதாலிஉல் மஸர்ராத் பக்கம் - 265
உலகப் புகழ்பெற்ற பேரறிஞர் ஷாஹ் வலியுல்லாஹ் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் முஹத்தித் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அன்பாஸே ரஹீமிய்யா என்ற நூலில் எழுதுகின்றார்கள்.
பர்ஷ் என்ற பூமியின் ஆழ்நிலத்திலிருந்து அர்ஷ் வரை உயர் மலக்கிலிருந்து தாழ்ந்த இனம் வரை அனைத்தும் ஹகீகத்தே முஹம்மதிய்யாவிலிருந்து வெளியாயின. நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.
முதன் முதலில் அல்லாஹுத்தஆலா என்னுடைய ஒளியையே படைத்தான். நீங்கள் இல்லாவிட்டால் நான் வானங்களைப் படைத்திருக்க மாட்டேன் நான் எனது றுபூபிய்யத்தையும் வெளியாக்கியிருக்கமாட்டேன் என அல்லாஹ் திருவுளமானான்.
தேவ்பந்திகளாலும், தப்லீக் ஜமாஅத்தினராலும் ஹகீமுல் உம்மத் என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படுபவர். மௌலவி அஷ்ரப் அலி தானவி ஆவார். இவர் தனது நஷ்ரூத்திப்ஃபிதிக்ரின் நபிய்யில் ஹபீப் என்ற நூலில் முதல் அத்தியாயமான நூரே முஹம்மதிய்யா என்ற தலைப்பில் எழுதுகின்றார்.
முதன் முதலில் எனது நூரைத்தான் அல்லாஹுத்தஆலா படைத்தான். என்ற ஹதீதிலிருந்து முதல் படைப்பு நூரே முஹம்மதிய்யா என்பது நிரூபணம் ஆகின்றது. ஏனெனில், அறிவிப்புக்களில் எப்பொருளைப்பற்றி முதற்படைப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவை நூரே முஹம்மதை வி்ட பிந்தியவையே என்பது இந்த ஹதீதிலிருந்து தெளிவாக்கப்பட்டுள்ளது.
தேவ்பந்து உலமாக்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் மௌலவி ஹுசைன் அஹ்மது மதனி என்பவர் அஷ்ஷிஹாபுத்தாகிப் என்ற நூல் பக்கம் 50இல் பின்வருமாறு எழுதுகின்றார்.
நம்முடைய முன்னோர்களான நமக்கு வழிகாட்டியாகச்சென்ற பெரியார்களி்ன் கொள்கைகளையும், கூற்றுக்களையும் சற்று கவனத்தில் எடுத்துக்கொண்டு பாருங்கள்! இவர்கள் அனைவருமே பேரொளி சிந்தும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய உள்ளமைப்பை பொருட்டாக்கி இறைவனின் அருட்கொடைகளையும், அவனது எல்லையற்ற பேருதவியையும் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறார்கள். இதையே தங்களது ஈடேற்றத்திற்குரிய சாதனமாகவும் நம்பியிருந்தனர். இவர்கள் அனைவரின் கொள்கையும் மிகத்தெளிவாக இருந்தது.
ஆதியிலிருந்து இந்த அண்ட கோளங்களில் அருல்மாரி பொழிந்து கொண்டிருந்த, இனியும் பொழியப்போகின்ற இறைவனின் பெரும் கருணை அது.
அது இவ்வுலகத்தையே உண்டாக்குவதாக இருந்தாலும் சரி! அல்லது வேறுவிதமான கருணையாக இருந்தாலும் சரி! இவை அனைத்திலுமே எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த தாத் என்னும் உள்ளமை அமைந்திருக்கிறது. அது சூரியனின் பேரொளி முதலில் சந்திரனுக்கு வருகிறது. தொடர்ந்து சந்திரனிலிருந்து எண்ணில் அடங்கா கண்ணாடிகளில் பிரதிபலிக்கிறது. அதாவது,
ஹகீகத்தே மு ஹம்மதிய்யா அண்ட கோளங்கள் மற்றும், அதில் வாழும் படைப்பினங்கள் அனைத்திலிருந்தும் வெளியாகின்ற ஆற்றல்களுக்கு மூலமாக இருக்கின்றது.
இந்தப் பொருளிலேயே நபியே! நீங்கள் இல்லாவிட்டால் இந்த அண்ட கோளங்களை நான் படைத்திருக்க மாட்டேன் என அல்லாஹ்வும், முதன்முதல் அல்லாஹ் படைத்தது என் நூரைத்தான் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். நான் நபிமார்களுக்கெல்லாம் நபியாவேன் என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்துள்ளார்கள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தாத்தொளியிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்பதினால் மஆதல்லாஹ் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பது போல், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வின் தாத் மூலமாகிவிட்டது என்பது பொருளாகாது. அல்லாஹ்வின் தாத்தின் ஒரு பகுதி, அல்லது தாத் அனைத்தும் நபியவர்களி்ன் தாத்தாக ஆகி விட்டது என்று கருதக்கூடாது. இப்படிக் கூறுவதிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வின் ஒரு பகுதி ஏதாவது ஒன்றுடன் சேர்வது அல்லது, ஒரு பொருளில் இறங்குவது - ஹுலுல் - இத்திஆத் ஆகியவைகளை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒரு பகுதி என்றோ, ஒரு படைப்புக்கு அல்லாஹ்வி்ன் தாத் தன்னே மூலமாக இருக்கின்றது என்றோ நம்புவது குப்றாகும்.
நபிகள் நாயகத்தின் படைப்பின் எதார்த்தத்தை அதன் பொருளை அல்லாஹ்வும், அவனது திருத்தூதருமே நன்கு அறிவார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
அபூபக்கரே! எனது ஹகீகத்தை அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எவரும் அறியமாட்டார்கள்.
ஆதாரம் மதாலிஉல் மஸர்ராத் பக்கம் - 129
அனைத்துப் படைப்பினங்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டினால், அவர்களி்ன் மூலமாக அல்லாஹ்வின் தாத்திலிருந்து படைக்கப்பட்டுள்ளன. இதனால், நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து தனது வுஜுதைப் பெற்றுக் கொண்டார்கள். ஏனைய படைப்பினங்களுக்குரிய வுஜுதை நபியவர்கள் வழங்கினார்கள் என்பது இதன் பொருள் அல்ல.
றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளி ஏதும் ஒரு துணைகொண்டு படைக்கப்படவி்ல்லை. அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எந்த ஊடகமும் இல்லை. அவர்கள் எதுவித ஊடகமும் இன்றி நேரடியாக அல்லாஹ்வின் தாத்திலிருந்தே படைக்கப்பட்டுள்ளார்கள்.
இமாம் ஷர்க்கானி கூறுகின்றார்கள்,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளி அல்லாஹ்வின் தாத்திலிருந்தே படைக்கப்பட்டது. அதனால், பெருமானாரின் படைப்புக்கு அல்லாஹ்வின் தாத் மூலப்பொருளாக ஆகி விட்டது என்பது பொருளல்ல. அல்லாஹ்வின் நாட்டம் பெருமானாரின் வுஜுதில் எந்த விதமான பொருளில் தொடர்பும் இன்றி கொளுகிவிட்டது என்பதே பொருளாகும். இதனை ஒரு எளிய பின்வரும் உதாரணத்தின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
பிரமாண்டமான, அழகான, தெளிவான கண்ணாடி சூரியனுக்கெதிராக வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்ணாடியில் விழுந்த சூரியனின் பிரதி விம்பத்தின் மூலம் எதிரிலிருந்த கண்ணாடி, நீர், காற்று உள்ளிட்டவைகளில் தெறித்து பிரபஞ்சம் முழுவதும் பிரகாசமாகிவிட்டது. கண்ணாடி நீர்த் தடாகம் போன்றவற்றில் சூரியனின் சுடர் பிரதி விம்பத்தோடு மட்டுமன்றி அவற்றின் தெளிவுக்குத்தக்க விதத்தில் பிரகாசிக்கக் கூடியதாகவும் மாறிவிட்டது. கண்ணாடியில் பட்டுத்தெறித்த சுடர் சுவரில் பட்டு சுவர் சூடேறிவிட்டது.
முதல் கண்ணாடி சூரியனிலிருந்து நேரடியாக ஒளியைப் பெறுகின்றன. ஏனைய கண்ணாடிகள் நீர்த்தடாகங்கள் முதல் கண்ணாடியில் இருந்து ஒளியைப்பெறுகின்றன. சுவரும் ஏனையவைகளும் ஊடகத்தின் மூலம் பிரகாசம் பெறுகின்றன. முதற் கண்ணாடியில் பிரபிம்பித்த ஒளி சூரியனின் நேரடி ஒளியாகும். இதனால் சூரியனின் ஒளியில் ஒரு பகுதியாக கண்ணாடி ஆகி விட்டது என்றோ, சூரியன் கண்ணாடியில் இறங்கிவிட்டது. என்றோ பொருள் ஆகாது. ஆனால், ஒரு உண்மை யாதெனில் முதல் கண்ணாடியிலிருந்து சுவரை சூடேற்றிய ஒளிவரை அனைத்தும் சூரியனின் ஒளியேயாகும். இதுபோன்றுதான்,
இந்த உண்மையை எளிதில் புரிந்து கொள்வதற்காகத்தான் அல்லாஹுத்தஆலா தனது ஒளிக்கு உதாரணம், மாடக்குழியில் இருக்கும் விளக்கைப் போன்றுள்ளது.... என்று குறிப்பிட்டுள்ளான்.
இயற்கை நியதிப்படி பன்மை என்பது ஒருமையில் இருந்து உண்டாகிறது. பன்மைக்குச் சிறப்பு ஒருமையிலிருந்தே கிடைக்கின்றது. ஒருமைக்குப் பெருமை தரும் ஒரு பிறப்பிடம் இருக்கின்றது. வானத்தில் கணக்கற்ற விண்மீன்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் சூரியனின் ஒளியிலிருந்தே ஒளியைப் பெற்று பிரகாசிக்கின்றன.
மரத்தின் இலைகளும், பூக்களும் காய் கனிகளும் வேரில் இருந்தே உணவைப் பெற்று பலன் பெறுகின்றன. மனிதனின் பௌதீகத்தின் மூலம் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களில் இருந்து தொடங்குகின்றது. மனிதனின் அனைத்து உறுப்புக்களும் ஒரு இதயத்திலிருந்தே பயன்பெற்று இயக்கமடைகின்றது. ஆக,
ஒவ்வொரு பன்மையிலும் ஒருமையின் பயன் ஊடுருவிக்கொண்டே இருக்கி்ன்றது என்பது தெளிவாகின்றது. எனவே, படைப்பினங்கள் அனைத்தும் ஏதோ ஒருமையிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும். பன்மைக்கு உதாரணமாக இருக்கும் படைப்பினங்கள் ஓர் ஒருமையிலிருந்தே பயன்பெற்றிருக்கு வேண்டும்.
இந்த மூலப் பிறப்பிடத்தை பையாழு என்றுரைக்கின்றனர். இதனையே ஹகீகத்தே முஹம்மதிய்யா என்றும், நூரே முஹம்மதிய்யா என்றும் குறிப்பிடுகின்றனர்.
றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளியாக இருப்பதினால் அவர்கள் மனிதர் அல்ல என்பது பொருளாகாது. நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வி்ன் றூஹ் என்பதினால் அவர் மனிதரில்லை என்றாகுமா?
வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களிடம் வஹி கொண்டுவரும்போது அதிகமாக ஹளரத் திஹ்யத்துல் கல்பி என்ற ஸஹாபியின் கோலத்தி்ல் வருவார்கள். இதனைக் கண்ணுற்றவர்கள் ஹளரத் திஹ்யத்துல் கல்பி என்ற ஸஹாபியுடன்தான் நபியவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். இதனால் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித கோலத்தில் இருக்கும்போது மலக்கு என்ற நிலையிலிருந்து நீங்கி விடுவார்களா?
பல நபிமார்களிடத்தில் மலக்குகள், மனித கோலத்தில் சமூகம் கொடுத்துள்ளனர். எனவே, மனிதத் தன்மையும், ஒளித்தன்மையும் ஒன்ரோடொன்று முரண்பட்டதல்ல. இரண்டு தன்மைகளும் பிரியாமல் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இருக்க முடியும்.
இந்த வகையில், நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சடரீதியாகவும், ஆத்மீக ரீதியாகவும் ஒளியாக இருக்கின்றார்கள். சடரீதியாகவும் அவர்கள் ஒளியாக இருப்பதினால்தான் அன்னாரின் திருமேனிக்கு நிழல் விழுவதில்லை.
அன்னார் ஆதமீக ரீதியாகவும் ஒளியாக இருப்பதினால்தான் ஒளியின் உச்ச வேகம்கொண்ட புறாக்கிலேறி விண்ணுலகப் பயணத்தை மேற்கொண்டார்கள். அல்லாஹ்வை புறக்கண்ணால் தரிசித்து உரையாடினார்கள்.
எனவே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒளி என்பதும், அவர்களிலிருந்து பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ளது என்று நம்புவதும் திருக்குர்ஆனினது திருநபி மொழிகளினதும் ஷரீஅத்தை சரியாக விளங்கிய சான்றோர்களினதும் உறுதிக் கூற்றாகும்.
இதில் ஷரீஅத்திற்கு விரோதமானவைகளோ, ஹி்ந்து கிரேக்க தத்துவங்களோ, ஏதும் கிடையாது.
இஸ்லாத்தின் தூய அறிவுப் பகுதியாகிய ஆத்மீக ஞானத்தை கிரேக்க, ஹிந்து தத்துவத்தோடு தொடர்புபடுத்தி இஸ்லாத்தின் பெறுமதிமிக்க பகுதியை கேவலப்படுத்துகின்ற படலம் வரலாற்றின் நீண்ட காலமாக தொடர் கதையாக இருந்து வருகின்றது. இதன் மூலம் முஸ்லிம்களை ஆத்மீகத்தில் ஆர்வமற்றவர்களாக ஆக்குவதோடு பெறுமதிமிக்க அறிவுக் கருவூலங்களையும், ஆத்மீக வாதிகளையும் முஸ்லிம் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துகின்ற சதி வேலையினை இவர்கள் செய்கின்றனர்.
இஸ்லாம் வெறும் சடவாத சமயமல்ல. இஸ்லாத்தின் பெறுமதிமிக்க பகுதி ஆத்மீகமாகும். இதன் மூலம்தான் முஸ்லிம்கள் கண்ணியம் பெற்றார்கள். உலகை வென்றார்கள். முஸ்லிம்களின் பெரு வளர்ச்சியும், இஸ்லாத்தின் பெறுமதியும் ஆத்மீகத்தில்தான் தங்கியுள்ளது என்பதை இஸ்லாத்தின் விரோதிகள் மிகத் தெளிவாக விளங்கியுள்ளனர். அதனால், தங்களுக்குச் சவாலாக இருக்கின்ற ஆத்மீக சக்திகளை நசுக்குவதற்கும் இஸ்லாத்தின் அறிவுக் கருவூலங்களை மக்கள் பார்வையிலிருந்து மறைப்பதற்கும் எடுக்கப்படுகின்ற சதியின் ஒரு பகுதிதான் சூபிசம் கிரேக்க, ஹிந்து தத்துவத்தின் மறுபகுதி என்ற புரளியாகும். இதனை நன்கு விளங்கி இஸ்லாத்தின் விரோதிகளின் ஏஜென்டுகளின் துர்ப்பிரசாரத்தின் அபாயத்தை விளங்கி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அனைத்து முஸ்லிம்களி்ன் இன்றியமையாத கடமையாகும். கருணையுள்ள ரஹ்மான் றஹ்மதுன் லில்ஆலமீன் ஆகிய உயிரிலும் மேலான கண்மனி நாயகத்தின் பேரொளியில் எங்களது கல்புகளை வெளிச்சமாக்கி வைப்பானாக!
- ஆமீன் -