السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 13 May 2024

கவித்தேனருவி

 

இந்தியாவில் வெளியிடப்பட்ட “கவித்தேனருவி” உலக சாதனை நூலில் இலங்கைக் கவிஞர் ஏறாவூர் டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “துயில் நதிப் பூக்கள்” புதுக்கவிதை நூலும் தேர்வாகி சாதனை

( ஐ. ஏ. காதிர் கான் )

தமிழ் நாடு – தமிழ்த்தொண்டன் “பைந்தமிழ்ச் சங்கம்” மற்றும் “நிலா வட்டம் இலக்கிய அமைப்பு” இணைந்து “கவித்தேனருவி” எனும் பத்தாயிரம் கவிதைகளின் தொகுப்பு உள்ளடங்கிய “உலக சாதனை நூல்” வெளியீட்டு விழா, அண்மையில் சென்னை, எருக்கஞ்சேரி, (VAM) “வாம் மஹால்” விழா மண்டபத்தில் இனிதே நடைபெற்று முடிந்தது.
கவிஞர் என். ஜாகிர் உஷேன் தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கம் பெற்ற “கவித்தேனருவி” எனும் பத்தாயிரம் கவிதைகளை உள்ளடக்கிய மிகப் பிரமாண்டமான இக்கவிதை நூல், சர்வதேச அளவிலான 100 கவிஞர்களின் தலா 100 கவிதைகள் அடங்கலாக வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன், “இந்திய நோபல் உலக சாதனை” யிலும் இச்சிறப்பு நூல் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.


அத்துடன், இம்மாபெரும் உலக சாதனைத் தொகுப்பான “கவித்தேனருவி” சிறப்புக் கவிதை நூலில், இலங்கையின் கிழக்கு மாகாணம் ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர் கவிஞர் டாக்டர் ஜலீலா முஸம்மில் வெளிக்கொணர்ந்த நூறு கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு,
“துயில் நதிப் பூக்கள்” எனும் தலைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
உலகளாவிய நாடுகளில் இருந்தும் பல கவிஞர்கள் இச்சிறப்பு நூலில் இணைந்து சிறப்பித்துள்ளமை வரவேற்புக்குரியது.


“நோபல் உலக சாதனை” அங்கீகாரம் பெற்ற “கவித்தேனருவி” நூல் வெளியீட்டு விழா நிகழ்வில், அனைத்து கவிஞர்களும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டும்,
“நோபல் சாதனையாளர்” சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்.


ஏறாவூர் எழுத்தாளர் கவிஞர் டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “துயில் நதிப் பூக்கள்” புதுக்கவிதை நூல், மிக விரைவில் இலங்கையிலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link