السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 14 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.தொடர் 4

 

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும்.             தொடர் :- {4}

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

குளிப்பாடுவதில் விலக்களிக்கப்பட்டவர்கள்,
----------------------
ஷஹீதையும், விழுகட்டியையும் குளிப்பாட்டவும் இன்னும், அவர்களைத் தொழுவிக்கவும் கூடாது, ஷஹீத் என்பது ஷஹாதத் என்ற சொல்லிலிருந்து வந்தது; இதன் பொருள் சாட்சிபகர்தல்; அல்லாஹுத்த ஆலாவும், இன்னும் அவனுடைய திருத்தூதரும் அவர்களுக்கு சொர்க்கத்தைப்பற்றி சாட்சி கூறியுள்ளார்கள்; இந்த கண்ணோட்டத்தில் ஷஹீத் என்பவர் மஷ்ஹூத்லஹு சாட்சி சொல்லப்பட்டவர் என்ற பொருளைக் கொண்டுள்ளது.
மற்றுமொரு விதத்தில், ஷஹீதின் றூஹ் அடுத்தவர்களை விட முதலில் சொர்க்கத்தைப் பார்க்கின்றது, இந்த வகையில் ஷஹீத் என்ற சொல் ஷாஹித் சாட்சி பகர்பவர் என்ற பொருளைக் கொண்டுள்ளது;
ஷஹீத் என்பவர், காபிர்களோடு போராடி, போராடிய நிலையில் போராட்டத்தின் காரணத்தால் மரணித்தவராவார்; அவரை எவராவது ஒரு காபிர் கொன்றோ; அல்லது (களத்தில்) தவறுதலாக முஸ்லிமால் கொல்லப்பட்டாலோ; அல்லது அவரது ஆயுதமே திசைமாறியதால் கொல்லப்பட்டாலோ; அல்லது வாகனத்திலிருந்து விழுந்து மரணித்தாலோ; அல்லது இதுபோன்ற வேறு காரணங்களினால் மரணித்தாலோ; காபிர்களின் சண்டையில் காபிர்கள் உதவிக்கு அமர்த்திய முஸ்லிமால் கொல்லப்பட்டாலோ அவரை ஷஹீத் என்றே கூறப்படும்;
காபிர்களுடனான சண்டைதான் விதியே தவிர, கொண்றவர் யார்? என்பது விதியல்ல! சண்டை தொடர்பில் காபிர்களுடனான சண்டை பர்ளு கிபாயாவுக்காக, ஆகுமானதற்காக இருப்பது ஷர்த்தாகும்; உடன்படிக்கையை முறித்துக் கொள்ளாத திம்மிக்காபிரோடு சண்டை செய்வது ஹறாமாகும்.
பயங்கரவாதிகளோடு சண்டைசெய்து மரணிப்பவர் ஷஹீத் அல்ல! ஆனால், பயங்கரவாதிகள் காபிரை உதவிக்கு வைத்து அந்த காபிரால் கொல்லப்பட்டால் ஷஹீத் ஆகும்;
சண்டை முடிந்த பின் சண்டையில் ஏற்பட்ட காயத்தால் உயிர்வாழும் வாய்ப்பு இருந்து பின்னர் மரணித்தால் அழ்ஹறான கூற்றின்படி அவர் ஷஹீத் அல்ல; ஆனால், சண்டையில் காயப்பட்டு அக்காயத்தால் வெறும் அசைவு மட்டுமிருந்த நிலையில் சண்டைக்குப் பின் மரணித்தால், அவர் ஷஹீதின் சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்; காபிர்களின் சண்டையில் சண்டையின் காரணமில்லாமல் நோய் அல்லது அதுவல்லாத காரணத்தால் மரணித்தால் ஷஹீத் அல்ல;
ஷஹீதின் சட்டம்:
----------------++-
ஷஹீதை குளிப்பாட்டுவதும், தொழுவிப்பதும் ஹறாமாகும்; ஆயினும், கபன்செய்வதும், நல்லடக்கம் செய்வதும் வாஜிபாகும்; ஷஹீதின் உடல்மீது ஷஹாதத்தின் தடயம் நிலைத்து நிற்பதற்காக குளிப்பாட்டுவது ஹறாமாக்கப்பட்டுள்ளது; ஷஹாதத்தின் பக்கம் ஆர்வமூட்டுவதற்காக வேண்டியே ஷஹீதுக்கு இந்தளவு மகத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,
ان رائحته يوم القيمة كرائحة المسك
கியாமத் நாளில் நிச்சயமாக அவரின் வாசம் கஸ்த்தூரியின் வாசத்தை ஒத்திருக்கும்.
ஹ‌ளறத் ஜாபீர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஷஹீதுகளை அவர்களின் காயத்தோடு நல்லடக்கம் செய்வதற்கும், இன்னும் குளிப்பாட்டாதிருப்பதற்கும்; இன்னும், அவர்கள் மீது தொழுவிக்காதிருப்பதற்கும் கட்டளையிட்டார்கள். (புகாரிஷரீப்)
ஷஹீதுக்கு பின்வரும் கறாமத்துக்கள் நிரூபணமாகியுள்ளது,
குருதியின் முதல் சொட்டு விழுந்ததும் அவர்களின் குற்றம் மன்னிக்கப்படும், ஷஹீத் இப்போது மௌத்தின் நிலையிலிருப்பார்; இன்னும் சொர்க்கத்தில் அவரின் இடம் குறிப்பானதாக இருக்கும்; ஷஹீத் ஈமானிய ஆபரணங்களால் அலங்கரிக்கப் படுவார்; இன்னும் கப்றின் வேதனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்; அவரின் குடும்ப உறவினர்களில் எழுபேருக்கு அவரின் ஷபாஅத் ஏற்கப்படும்; மணமான வாழ்வைப் பெறுவார்;
அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்,
ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون
அல்லாஹ்வின் வழியில் ஷஹீதாக்கப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று கருதாதீர்கள், எனினும் தங்களுடைய றப்பிடத்தில் உயிருள்ளவர்களாகும்; இன்னும் உணவளிக்கப்படுகின்றார்கள்.
மரணத்திற்கு முன் ஜனாபத், ஹைழு, நிபாஸ் உள்ளிட்ட நிலையிலிருந்தாலும் கூட குளிப்பாட்டுவது ஹறாமாகும்; ஆயினும்; வெளிப்படையான நஜீஸ்கள் இருந்தால், அவற்றை அகற்றுவது வாஜிபாகும்; ஷஹீதை கபன் செய்து நல்லடக்கம் செய்வது வாஜிப்; குருதி தோய்ந்த துணியால் கபன் செய்வது ஏற்றமாகும்; அது போதாவிட்டால் உடல் மறையக்கூடியளவான துணி மூலம் பூரணப்படுத்த வேண்டும்; குருதி தோய்ந்த துணி என்பது, பொதுவாக அணியும் துணியாகும்; கவச உடை, செருப்பு உள்ளிட்டவையை அகற்றுவது சுன்னத்தாகும்;
ஷஹீதுகளின் வகைகள்.
----------------------
ஷுஹதாக்கள் மூன்று வகையிலுள்ளனர்,
1- இம்மை, மறுமை இரண்டிலும் உள்ள ஷஹீத்:
இவர் அல்லாஹ்வின் கலிமாவை உயர்த்துவதற்காக சண்டையிட்டவர்,
2- இம்மைக்கான ஷஹீத்:
இவர் அல்லாஹ்வின் கலிமாவை உயர்த்துவதற்காக அல்லாமல் ஙனீமத் பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக சண்டையிட்டவர்,
இவ்விரண்டு ஷஹீதுகளின் மைய்யித்தை குளிப்பாட்டவோ, தொழுவிக்கவோ கூடாது;
மறுமைக்கான ஷஹீத்:
இந்த ஷஹீதுக்கு மறுமையில் பதவியில் அதிகரிப்புக் கிட்டும், உலகத்தில் ஷஹீதல்லாதவராக கணிக்கப்படுவார்; இவரின் மைய்யித்தைக்குளிப்பாட்டி தொழுவிக்க வேண்டும்;
முஷ்ரிகீன்களோடு சண்டை செய்தவர்கள் என்ற விதியால் வெளியாக்கப்படும் வகையினர் அதிகளவில் உள்ளனர், அவர்களில் சிலர் வருமாறு,
குழந்தை பிரவசத்தில் மரணித்தவர், நீரில் மூழ்கி மரணித்தவர்; வறுமையாலும், தனிமையாலும் மரணித்தவர்; கல்வி கறுக்கொண்டிருக்கும் போது மரணித்தவர்; காதல் வயப்பட்டு மரணித்தவர்; ஆனால், ஒரு நிபந்தனை! பத்தினித்தனம் நிலைத்திருக்க வேண்டும்; தனிமையிலும் கூட ஷரீஅத்தின் வரம்பை மீறாதிருக்க வேண்டும்; காதலியோடு தனது காதலை மறைத்திருக்க வேண்டும்; ஷரீஅத்தில் ஆகுமான வாய்ப்பிருந்தும் அடைந்து கொள்வதில் சிக்கல் இருத்தல்;
விழு கட்டி:
-----------
விழு கட்டிக்கு. سقط எனப்படும், இதன் பொருள்,, விழுதல் அல்லது நீங்கக்கூடியது; விழக்கூடிய பொருளுக்கு سقط என்று கூறப்படும்; ஷரீஅத்தில் நிறை மாதத்திற்கு முன் கற்பத்திலுள்ள சிசு பிரசவமாவதைக் குறிக்கும்;
விழுகட்டியில் மூன்று வகையுண்டு:
1- பிறக்கும் சிசு பிறந்த பின் உயிர் இருக்கும் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளல், உ+மாக, துடித்தல், நாடித்துடிப்பு இருத்தல்; அழுவது அவசியமில்லை; இக்குழந்தைக்கு குளிப்பாட்டல், கபன் செய்தல்; தொழுவித்தல்; நல்லடக்கம் செய்தல் உள்ளிட்ட நான்கு கடமைகளும் அவசியமாகும்.
2- இச்சிசுவில் பிறந்த பின் உயிர் துடிப்புக்கான அடையாளம் காணப்படவில்லை, ஆயினும், உறுப்பமைப்பு முழுமையடைந்துள்ளது ; இந்த சிசுவுக்கு குளிப்பு, கபன்; நல்லடக்கம் உள்ளிட்ட மூன்று கடமைகளும் அவசியமாகும்; தொழுகை வாஜிபல்ல.
3- உறுப்பமைப்பு வெளியாகதது: இச்சிசுவுக்கு எந்த ஒன்றும் வாஜிபில்லை; இதைத் தொழுவிப்பது ஹறாமாகும்; இதை துணியால் சுற்றி அடக்கம் செய்வது சுன்னத்தாகும்.
ஸிக்து سقط என்பது ஆறுமாதத்திற்குட்பட்டு பிரசவமானது என்று இமாம் றமலி றஹ்மதுல்லாஹி அலைஹி நிபந்தனை விதிக்கின்றார்கள், மற்றும் சிலர் பிறந்த பின் அழாதது என்கின்றனர்; உறுப்பமைப்பு வெளியாக சிசுவுக்குத்தான் குளிப்பும் தொழுகையும் கடமையில்லை.
தொடரும்
All reactions:
Jihath S Mohamed