السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 15 May 2024

முஹ்யித்தீன் மௌலிது பற்றிய pjயின் அபத்தங்கள் 02

 

முஹ்யித்தீன் மௌலிது பற்றிய pjயின் அபத்தங்கள் 02

அப்துல்காதிர் ஜீலானியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமர்களை விடவும் மேலானவராக அல்லாஹ்வுக்குச் சமமானவராகக் காட்டும் இந்தக் கதையை உண்மை முஸ்லிம் எழுதியிருப்பானா? அல்லது அன்னியர்களின் சதித்திட்டத்தில் இந்தக்கதை உருவாக்கப்பட்டதா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பக்கம் 26.
திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் இந்தக் கதையை மௌலிது என்ற பெயரில் ஓதி வருவது நன்மையைப் பெற்றுத் தருமா? அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத்தருமா? என்று சிந்தித்துப் பாருங்கள். பக்கம் 26.
மேற்கண்ட கதையில் பீ.ஜே முக்கியமாக குறைகாண்பது காய்ச்சலை வேறு இடத்திற்கு இடமாற்றுவதிலாகும். இது அல்லாஹ்வின் வேலை என்றும் மற்றவர் மாற்றியதாகக் கூறினால் அது அல்லாஹ்வுடன் போட்டியிடுவது என்றும் கூறும் பீ.ஜே இது இப்படி ஒன்று நடந்ததாக கடுகளவு அறிவு உள்ளவனும் நம்பமாட்டான் என்றும் அடித்துக் கூறுகின்றார்.
இது பீ.ஜே.யின் வழக்கமான அவருக்குப் பரிச்சியமான பல்லவி. அடித்துக் கூறுவார். பின்னர் ஆதாரம் கிடைத்து விட்டது என்று கூறி அடங்கிப்போவார். இது அவருக்கு அத்துப்படி.
அனைத்து செயல்களையும் அல்லாஹ்தான் செய்கின்றான். அவன் ஆற்றல் இல்லாமல் எதனையும் யாராலும் செய்ய முடியாது என்பது அடிமட்ட முஃமினும் அறிந்தவிடயம் இது கூட பீ.ஜே. க்குப் புரியவில்லை.
அடுத்து விடயத்திற்கு வருவோம்.
யத்ரிப் நகரம் அதிகம் நோய்கள் பரவும் பீடை பூமியாகவே அடையாளம் காணப்பட்டு வந்தது. ஸஹாபாக்கள் ஹிஜ்ரத் செய்து இங்கு வந்த பின் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இது நபியவர்களுக்கு பெரும் கவலையைக் கொடுத்தது.
ஒரு தினம் ஹளரத் அபூபக்கர் ஸித்தீக், ஹளரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் கடுமையாக காய்ச்சலால் அவதிப்பட்டனர். மரணத்தின் நுழைவாயிலுக்கு வந்துவிட்டதாக எண்ணி மனம் வெதும்பினர். இந்நிலையில் மக்காவை நினைத்து புலம்பினார்கள்.
இது கண்ட காருண்ய நபியவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். யாஅல்லாஹ்! மக்கா நகரில் நாங்கள் வைத்த பாசத்தை விட அதிகமான பாசத்தை மதீனாவில் தருவாயாக. நாயனே! எங்களது (விளைச்சலின் அளவான ஸாஃஇலும், முத்திலும் பறக்கத் செய்வாயாக!) அதனை சீரானதாகவும் ஆக்கிவைப்பாயாக. மதீனா (நகரில்) உள்ள காய்ச்சலை ஜுஹ்பா என்ற இடத்திற்கு இடம் மாற்றுவாயாக.
ஆதாரம் : புகாரி ஷரீப்.
மற்றுமொறு அறிவிப்பில், மதீனாவில் உள்ள பீடைகளை முகீஃஆவுக்கு இடமாற்றுவாயாக என்று வந்துள்ளது.
முகீஃஆ என்பது ஜுஃபா என்ற பிரபலமான மீகாத் (இஹ்ராம் கட்டும் இடத்)திற்கு அருகிலுள்ள இடமாகும். இங்கு ஷிர்க் என்ற கொடிய பாவத்தைச் செய்கின்ற யஹு{திகள் வாழ்ந்து, பாதகம் புரிந்து வந்ததனால் காய்ச்சலை இங்கு மாற்றுமாறு மாநபி பணித்தார்கள். இதன்பின் இவ்விடம் காய்ச்சல் தொற்றும் பீடபூமியாக மாறிவிட்டது.
ஜுஹ்பா என்ற இடத்தில் பிறந்த குழந்தைகள் பருவமடைந்த பின் காய்ச்சல் பிடித்து கடுமையான பலவீனத்திற்கு உட்படுவர். இதிலிருந்து யாரும் தப்பிவிடவில்லை என்று இமாம் கத்தாபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்.
ஆதாரம் : பைஹகி.
இங்குள்ள தண்ணீரைக் குடிக்கும் எவரும் காய்ச்சலுக்கு இரையாகாமல் இருந்ததில்லை. என்றும், இது நபியவர்களின் நபித்துவத்திற்கு ஓர் சான்று என்றும் இமாம் நவவி ரஹ்மத்துள்ளாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.
ஒரு தினம் தலை விரிகோலமான கறுத்த (அவலட்சணமாக) ஒரு பெண் மதீனாவிலிருந்து வெளிப்பெயர்ந்து முஃகிறா என்ற இடம் நோக்கிச் செல்வதாக நபியவர்கள் கனவு கண்டார்கள். அதற்கு மதீனாவிலுள்ள நோய்கள் முஃகிறா என்ற இடத்திற்கு இடம்மாறிவிட்டதாக வலிந்துரை கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி ஷரீப்.
தப்றானியில் வரும் மற்றுமொறு அறிவிப்பில், மக்கா வழியில் ஒருவர் வருவதைக் கண்ட நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் வரும் வழியால் யாரையாவது கண்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்,
தலைவிரி கோலத்தில் நிர்வாணமாகச் செல்லும் கறுப்புப் பெண்ணைத் தவிர வேறு எவரையும் நான் காணவில்லை என்று மறுமொழிபகிர்ந்தார்.
அதுதான் காய்ச்சல் (எடுத்த உருவம்) இனிமேல் இப்பக்கம் வரமாட்டாது என்று உறுதி கூறினார்கள். உத்தமத் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள்.
ஒரு நாள் நபியவர்கள் முன் காய்ச்சல் தோன்றி (உள்ளே வர) அனுமதி கேட்டது. யார் நீ? என்று அதனிடம் நபியவர்கள் கேட்டார்கள். நான் உம்முமல்தம் (காய்ச்சல்) என்றது. நீர் குபா பக்கம் செல்லும் என்றார்கள்.
காய்ச்சலைக் கண்டு கதி கலங்கிய குபா பகுதி மக்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் முன் வந்து காய்ச்சல் பற்றி முறையிட்டார்கள். உங்கள் விருப்பம். விரும்பினால் பிரார்த்திக்கிறேன். அல்லது பொறுத்துக் கொள்ளுங்கள். அது அகன்று செல்ல பிரார்த்திக்குமாறு வேண்ட, நபியவர்களும் பிரார்த்தித்தார்கள்.
ஆதாரம் : தப்றானி, ஆபூயஃலா, இப்னுஹிப்பான் அறிவிப்பவர் : ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)
இப்போது நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுங்கள். முஹ்யத்தீன் மௌலிதில் வந்த நிகழ்வுக்கும் மேற்படி நீங்கள் படித்த ஹதீதுகளுக்குமிடையில் என்ன வித்தியாசத்தைக் காண்கின்றீர்கள்.
கௌதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு காட்டிய அற்புதம் முழுக்க முழுக்க நபிவழியில் உள்ளது இல்லையா?
நபியவர்கள் காய்ச்சலோடு பேசவில்லையா? அல்லாஹ்வின் விரோதிகள், வழிகேடர்கள் வாழும் இடங்களுக்கு காய்ச்சலை நபியவர்கள் இடம் மாற்றவில்லையா? கௌதுல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகை காட்டிய கறாமத்து குர்ஆனுடன் மோதுகின்றது என்றால், நபியவர்கள் செய்தது குர்ஆனுடன் மோதாதா?
கடுகளவு இஸ்லாமிய அறிவுள்ளவன் கூட இதனை நம்பமுடியாது என்றால் புனித புகாரி ஷரீபில் வரும் இந்த ஹதீதையும் நிஜமாகவே நடந்த இந்த முஃஜிஸாத்தையும் என்னவென்று விளிப்பது?
முஹ்யத்தீன் மௌலிதில் வரும் செய்தி அன்னியர்களின் சதி என்றால் புகாரி ஷரீபில் வரும் இதை ஒத்த நிகழ்வின் நியாயத்தன்மை?
பீ.ஜே. எதையும் பேசுவார், எழுதுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம். வெட்கம் ஈமானின் ஒரு பகுதி, இது இல்லாதவர்கள் எதையும் செய்யத் துணிவர். பீ.ஜே விசிறிகள் வெட்கித் தலை குனியட்டும் (இருந்தால்?)
தொடரும்....

கலீபத்துல் காதிரி,அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.