السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 23 May 2024

ஜனாஸாவின் சட்டமும், ஒழுங்கும். 11

 

━━━━━━━━━ ♛ ━━━━━━━━━╮  கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,        மௌலவி பாஸில் ஷெய்கு        *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*    பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.  ╰━━━━━━━━━━━━━━━━━━━╯

துக்கத்தை வெளிப்படுத்தல்:

---------------------------------

மைய்யித்துக்காக அழுவது தவறல்ல! ஆடைகளைக்கிழித்து தலையில், மார்பில் அடித்து கூச்சல்போடுவதும் ஒப்பாரி வைப்பதும் கூடாது, மரணம் நிகழ்வதற்கு முன்பும், பின்பும் அழாதிருப்பது ஏற்றம்; சப்தமிட்டு அழுவது மக்றூஃ; சப்தம் போடாமல் கண்ணீர் வடிப்பது ஆகும்; மௌத்திற்குப்பின் அழுவது மக்றூஃ 


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


فاذا وجبت فلا تبكين باكية 


மரணம் நிகழ்ந்து விட்டால் எந்தப் பெண்ணும் அழாதிருக்கவும்.


முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வபாத்தான போது ஹளறத் அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு மிம்பரில் ஏறி நின்று அன்னாரின் வபாத் செய்தியை அறிவிக்கும்போது இவ்வாறு கூறினார்கள்,


من كان منكم يعبد محمدا فان محمدا قد مات من كان يعبد الله فان الله حي لا يموت 


உங்களில் எவராவது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வணங்கினால், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வபாத்தாகிவிட்டார்கள், எவராவது அல்லாஹ்வை வணங்கினால், அல்லாஹ் உயிரோடு இருக்கின்றான்; அவன் மரணிக்கவில்லை; பின்னர் கீழ்வரும் திருவசனத்தை ஓதினார்கள்.


انك ميت وانهم ميتون


நீங்களும் மைய்யித்துத்தான், இன்னும் அவர்களும் மைய்யித்துத்தான்.


وما محمد الا رسول قد خلت من قبله الرسل افئن مات او قتل انقلبتم علي اعقابكم ومن ينقلب علي عقبيه فلن يضر الله شيئا وسيجزالله الشاكرين .


முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ்வின் திருத்தூதராகும், அவருக்கு முன்பும் பல திருத்தூதர்கள் வந்து போய்விட்டனர்; அவர் மரணித்துவிட்டால், அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் புறங்காட்டி சென்றுவிடுவீர்களா? (அவ்வாறு எவரேனும் புறங்காட்டி சென்று விட்டால், அதனால் அல்லாஹ்வுக்கு தீங்கிழைத்துவிடமாட்டான்; விரைவில் நன்றியுள்ளோருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான். 

3: 144


இதைக்கேட்டதும் ஸஹாபாக்கள் உணர்சிவசப்பட்டனர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! இத்திருவசனத்தை இப்போதுதான் முதற்தடவையாகக் கேட்பது போன்றிருந்தது என்று ஹளறத் உமர் பாறூக் றழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்; இத்திருவசனத்தின் தாக்கத்தால் அனைவரும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை சிரமேற்கொண்டனர்; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாபாத்தில் ஹளறத் அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத்தவிர்த்து ஏனைய ஸஹாபாக்கள் சபதமிட்டு அழலானார்கள்;


பொறுமை அழகானது! இரக்கம் மீக்குற்று அழுவதில் தப்பில்லை, ஓர் ஆலிம், ஸாலிஹான மனிதர் உள்ளிட்டவர்கள் வபாத்தான போது அவர்களின் இழப்புக்காக அழுவது முஸ்தஹப்பாகும்; ஆனால் எவராவது ஒருவரின் மரணத்தினால் தனது வருமானம், அல்லது பராமரிப்பு அற்றுப்போய்விட்டதை எண்ணி அழுவது மக்றூஃ; இவ்வாறு அழுவதில் அல்லாஹ்வில் நம்பிக்கையீனம் வெளிப்படுகின்றது;


ஐந்து நபர்களுக்காக அழுவது சுன்னத்தாகும்.


1- ஆலிம்.  

2- நீதமான இமாம் (ஆட்சியாளர்)

3- ஸலிஹான வலி

4- உண்மையான வீரன்

5- கொடைவள்ளல்.


மைய்யித்தின் அருமை பெருமைகளை கூறிக்கொண்டு கூச்சல்போட்டு அழுவது பெரும்பாவத்தில் உள்ளது ஹறாம்; சப்தம் கூட்டி அழுவது மைய்யித்தின் நலவுகளைக் கூறுவது உள்ளிட்ட இரண்டு கருமங்கள் ஒன்று சேர்வது ஹறாம்; இவ்விரண்டில் ஒன்று இருந்து மற்றது இல்லாது போனால் ஹறாமாகாது; 


ஆடையைக்கிழிப்பது, தலையில் அல்லது நெஞ்சில் அடிப்பது; முடியைப்பிடுங்குவது; தலையில் மண்வாரிப்போடுவது; கறுப்பு நிற ஆடை அணிவது உள்ளிட்ட இச்செயல்கள் அல்லாஹுத்த ஆலாவின் பொருத்தத்திற்கும், கழா கத்றுக்கும் எதிரானதாகும்; பொறுமை இழப்பும், கூச்சலும் எதில் வெளிப்படுகிறதோ அது ஹறாமாகும்; 


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعو. الجاهلية ،


கன்னத்தில் அடிப்பதும், சட்டைப் பையைக்கிழிப்பதும்; ஜாஹிலியாக்காலத்து சப்தங்களை உயர்த்துவதும் முஃமீன்களின் பண்பைச்சார்ந்ததில்லை.


இவ்வாறான கருமங்களால் மைய்யித்திற்கு வேதனை ஏற்படுவதில்லை, அல்லாஹுத்த ஆலாவின் நாட்டம் அநாதியில் கழாவோடு தொடர்பானதாகும்; ஆக்கலும், அழித்தலும் குறிப்பிட்ட விதத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.


மரணம் நிகழ்வதற்கு முன் அழுவது பாராட்டுக்குரியது; இதுதான் ஹளறத் அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹுவிடமிருந்து வெளிப்பட்டது, றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுந்து நின்று இவ்வாறு கூறினார்கள்:


ما تقولون في رجل خير فاختار لقاء الله 


அல்லாஹ் சந்திக்க விரும்பும் அந்த நல்ல மனிதரைப்பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? 


இதைக்கேட்டதும் ஹளறத் அபூபக்கர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அழத்தொடங்கினார்கள், ஸஹாபாக்களில் எவரும் அழவில்லை; அவர்களின் அழுகையை நல்லதாகக்காணவில்லை; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இக்கூற்றின் மூலம் ஸஹாபாக்கள் மத்தியில் தன்னைப்பற்றியே கூறுகின்றார்கள் என்பதை ஹளறத் ஸித்தீக்குல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு புரிந்து கொண்டார்கள்; அரபியில் இதற்கு نعي இளவு சொல்லுதல் என்று கூறப்படும்; ஒருவரின் மரணத்திற்குப் பின் அவரின் நலவுகளை க்கூறுவதற்கும் نعي எனப்படும்.


தஃஸியத்: ஆறுதல் கூறல்,

--------------------------------

நல்லடக்கம் செய்து மூன்று நாட்கள் வரை மைய்யித்தின் உறவினர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும், தஃஸியத் என்பது, சோதனையில் பொறுமைக்கான வழிகாட்டுதல், ஆறுதல் கூறுதலுக்குக் கூறப்படும்;.


பொறுமைக்கான வழிகாட்டுதல், என்பது "பொறுமை செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறுவதோடு பொறுமைக்கான நற்கூலியை எடுத்துக்கூறுவது; மைய்யித்துக்காக மன்னிப்புக் கேட்பது; பாதிக்கப்பட்டவர்களின் கவலையைப் போக்குவதற்காக துஆக்கேட்பது உள்ளிட்டவைக்குறிக்கும்; இவ்வாறு கூறுவது சுன்னத்தாகும்.


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


ما من مسلم يعزي اخاه من مصيبة الا كساه الله من حلل الكرامة .


எவராவது ஒரு முஸ்லிம் தனது முஸ்லிம் சகோதரனின் சோதனையில் ஆறுதல் கூறினால் அவருக்கு சங்கையான ஆபரணம் அணிவிக்கப்படும். 


ஆறுதல் கூறும் விதம்:


اعظم الله اجرك ، واحسن عزاك وغفر لميتك وجبر مصيبتك او اخلف عليك .


அல்லாஹுத்த ஆலா உமக்கு மகத்தான கூலி தருவானாக, இன்னும் உமது கவலையை அழகாக்குவானாக; இன்னும் உமது மைய்யித்தின் பிழையைப் பொறுப்பானாக; உமது சோதனையால் உடைந்ததை பிணைப்பானாக இன்னும் உமக்கு அருட்பாக்கியத்தைப் பகரமாக்குவானாக! 


முதன்முதலில் பலவீனமானவரிலிருந்து ஆறுதல் கூறுவதை ஆரம்பிக்க வேண்டும், கவலையோடுள்ள அனைவருக்கும் ஆறுதல் கூறவேண்டும்; மைய்யித்துடையவர்களும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்வது சுன்னத் 


கவலையை ஏற்படுத்தும் சாதாரணமான சிறு விடயமானாலும் கூட (வீட்டில் வளர்ப்புப் பூனை செத்தாலும்) ஆறுதல் கூறுவது சுன்னத்; சிறுவர் பெரியவர் பெண்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறவேண்டும்; பெண்களுக்கு திருமணம் முடிப்பதற்கு ஹறாமானவர்கள் மட்டும் ஆறுதல் கூறவேண்டும்; ஆறுதலுக்கான பதில் இவ்வாறு அமைய வேண்டும்.


جزاك الله خيرا وتقبل الله منك ومنه 


அல்லாஹுத்த ஆலா உமக்கு நற்கூலி தருவானாக! உம்தரப்பிலும் இன்னும் அவர் தரப்பிலும் ஒப்புக்கொள்வானாக! 


ஆறுதல் கூறும் காலம்:

--------------------------

இரு தரப்பில் ஒருவர் ஆறுதல் பெறல் என்ற நிபந்தனையில் மூன்று நாள் வரை தஃஸியத் சுன்னத்தாகும், இருவரில் ஒருவர் தூரத்திலிருந்தால் அவர் வந்தபின் அவருக்கு ஆறுதல் கூறவேண்டும்; மைய்யித்திற்குரியவர்கள் அடக்கம் தொடர்பான ஒழுங்கில் ஈடுபட்டிருப்பதால் அடக்கத்திற்குப்பின் தஃஸியத் கூறுவது ஏற்றமாகும்; அதிக கவலை இருந்தால் அமைதிப்படுத்துவதற்காக அடக்கத்திற்கு முன்பு தஃஸியத் கூறுவது ஏற்றமாகும்; மூன்று நாட்களுக்குப் பின் கவலைப்புதுப்பிக்கப்படுவதால் மூன்று நாட்களுக்குப் பின் தஃஸியத் மக்றூஃ; தஃஸியத்துக்கான சரியான காலம் மௌத்திலிருந்து ஆரம்பிக்கின்றது; கடிதம், தொலைபேசி; தொலைநகல் உள்ளிட்டவை மூலமும் தஃஸியத் செய்யலாம். 


உணவளித்தல்:,

----------------

அண்டை வீட்டார்கள், நெருங்கிய உறவினர்கள் மைய்யித்தின் குடும்பத்தவர்களுக்கு இரவு பகல் இரு வேளை உண்ணக்கூடியளவு உணைவைத்தயாரித்து அனுப்பி 

அவர்களை வற்புறுத்தி உண்ணவைக்கவைப்பது சுன்னத், ஏனெனில் கவலையால் சமைக்காமல் பசியோடு இருப்பார்கள்; கவலையால் உடல்பாதிக்கும் என்று புரியவைத்து சாப்பிடவைப்பது சுன்னத்; இந்த உணவை மைய்யித்தின் நெருங்கிய உறவினர்கள் அல்லாதவர்கள் சாப்பிடக்கூடாது, 


மைய்யித் வீட்டை விருந்து வைபவமாக்கக்கூடாது, அறுசுவையான உயர்ரக உணவைத் தவிர்க்க வேண்டும்; சந்தோஷத்தில் பரிமாறும் பிரியாணி, வறுவல் உள்ளிட்டவையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; இது நோக்கத்திற்கு எதிரானது. சில அறிவிலிகள் தங்களின் பெரியதனத்தைக்காட்ட இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.


நோய்க்கு சிகிச்சையளிப்பது:  

-----------------------

றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


ان الله لم يصع داء الا جعل عليه دواء غير الهرم 


நிச்சயமாக அல்லாஹுத்த ஆலா மரணத்தைத்தவிர எந்த ஒரு நோய்க்கும் அதற்கான மருந்தை ஏற்படுத்தியே தவிர வைக்க வில்லை.


காரண காரியங்களைப் பேணிக்கொண்டு விதியைமறுக்காமல் பொருந்திக்கொள்வதுதான் றிழா رضا ஆகும், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனைத்து தவக்குல் காறர்களுக்கும் செய்யித் நாயகராகும்; அன்னார் நோயுற்ற போது வைத்தியர்களிடம் பரிகாரம் செய்தார்கள்; பொருட்களில் அல்லாஹுத்த ஆலா வைத்திருக்கும் தனித்துவங்களை மறுக்கக்கூடாது. அல்லாஹ்வில் தவக்குல் வைத்திருப்பதாகக்கூறி நோய்க்கு பரிகாரம் பார்க்காமலிருப்பது அறிவீனமாகும்.


தௌபா:

------

பாவத்திலிருந்து தௌபாச்செய்வதை விரைவு படுத்துவது இன்னும் மௌத்திற்காக எந்த நேரமும் தயாராக இருப்பது வாஜிபாகும், திடீரென மரணம் வந்தால் தௌபாவுக்கான வாய்ப்பை இழந்தவராகிவிடுவார்.


மௌத்தை நினைவு கூர்வது சுன்னத், மௌத்தை நினைவு கூர்வதால் உலக ஆசை தணியும், நல்ல காரியங்கள் இரட்டிப்பாகும்.


மரணத்தை விரும்புதல்:

------------

 உலக காரியங்களில் உடல், உளப்பிரச்சினைக்காக மரணத்தை விரும்புவது மக்றூஃ மார்க்கத்தில் குழப்பம் ஏற்பட்டால், அல்லது ஏதும் மறுமைக்கான காரணங்களுக்காக மரணத்தை எதிர்பார்ப்பது சுன்னத்; உ+மாக பீஸபீலில் ஷஹாதத்தை எதிர்பார்ப்பது.


கப்றைத் தரிசித்தல்:

---------------------

கப்றைத்தரிசித்தல் மூலம் மறுமையின் நினைவு வருவதால் சுன்னத், பெண்களின் மனம் பலவீனமாக இருப்பதால் கப்றுகளைச் ஸியாறத்செய்வது மக்றூஃ, அன்னிய ஆண்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால் பெண்களுக்கு ஹறாம்; இதில் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றௌழாவை ஸியாறத் செய்வது விலக்கலாகும்; 


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


من حج وزار قبري بعد وفاتي كان كمن زارني في حياتي 


எவர் ஹஜ் செய்து எனது வபாத்திற்குப் பின் எனது கப்றை சியாறத் செய்கின்றாரோ அவர் என்னை உயிரோடு இருக்கும்போது ஸியாறத் செய்தவர் போன்றாவார்.


நபிமார்கள் வலிமார்களின் கப்றுகளை ஸியாறத் செய்வது தொடர்பில் இதே கருத்தை இப்னு றுப்ஆ றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், புகஹாக்களில் ஸூபிகள் நபிமார்கள் வலிமாராகளின் கப்றுகளை பெண்கள் ஸியாறத் செய்யலாம் என்கின்றனர்.


ஸியாறத் செய்பவர்கள் பின்வருமாறு கூறுவது சுன்னத்,


السلام عليكم دار قوم مؤمنين وانا ان شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية ، اللهم لا بحرمنا اجرهم ولا تفتنا بعدهم واغفرلنا ولهم 


என்று கூறுவது சுன்னத்.


கப்றைத் தரிசித்தலில் பின்வரும் நோக்கங்கள் உள்ளன,


1- மரணத்தையும், மறுமையையும் மட்டும் ஞாபகப்படுத்துவதற்காக:


 கப்றிலிருப்பவர்களைப்பற்றி அறிந்து கொள்ளாமல் கப்றுகளைப் பார்ப்பதால் இது நிறைவேறும்‌


2- துஆக்கேட்பதற்காக:


இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சுன்னத்,


3- பறக்கத் பெறுவதற்காக: 


     நல்லடியார்களான வலிமார்களைத் தரிசிப்பதால் இது நிறைவேறும், இவர்களின் பர்ஸகின் உலகத்தில் இவர்களுக்கு ஆட்சி அதிகாரமிருக்கிறது, உதவிசெய்யக்கூடிய கணக்கற்ற பறக்கத்துக்களுமிருக்கின்றன;


4- நண்பர்கள், பெற்றோர்களைப்போன்று கடமையை நிறைவேற்றுவதற்காக தரிசித்தல்,


من زار قبر والديه او احدهما يوم الجمعة كان كحجة وفي رواية غفر له وكتب له براءة من النار 


எவராவது ஒருவர் பெற்றோரின் கப்றை அல்லது இருவரில் ஒருவரை ஜும்ஆவுடைய தினத்தில் ஸியாறத் செய்தால் ஹஜ்செய்தவர் போன்றாகுவார், ஓர் அறிவிப்பில் அவர் பாவம் மன்னிக்கப்படும் இன்னும் நரகத்திலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்கும் என்று ஹதீது ஷரீபில் வந்துள்ளது.


5- இரக்கம் இன்னும் அன்னியொன்னியத்திற்காக: 


 உலகத்தில் நேசத்திற்குரியவர் கப்றிலிருப்பவரைச்சியாறத் செய்யும் போது அவர் உறவால் அன்னியொன்னியப்படுகிறார்.

                                       ஈஆப் ايعاب


 கப்றுகளிலிருப்பவர்கள் பரஸ்பரம் அறிந்து கொள்வார்கள், தங்களின் கபன் உடையுடன் மற்றவர்களைச் சந்திப்பார்கள், ஆகவேதான் கபனை அழகுபடுத்திப் போடுங்கள் எனப்படுகிறது; மேலும் தங்களை ஸியாறத் செய்பவர்களை அறிவார்கள்; அவர்கள் மூலம் அன்னியொன்னியமடைவார்கள்; அவர்களுக்குச் சொல்லப்படும் ஸலாத்திற்குப்பதில் கூறுவார்கள்;   


பூமிஅவர்களுக்குத் திரையாக ஆகாது, அவர்கள் மறைவான உலகில் உள்ளவர்கள்; அதைப்பற்றி நாம் ஈமான் கொள்ள வேண்டியது அவசியம்;


முஃமீன்களின் றூஹ் சொர்க்கத்திலும் காபிர்கள் றூஹ் ஸிஜ்ஜீன் என்ற நரகிலிருந்தாலும் நான்காம் வானத்திலிருக்கும் சூரியன் பூமியில் தொடர்பாக இருப்பது போன்று கப்றிலிலுள்ள உடலோடு தொடர்பாக இருக்கும்.


மரணித்தவர்களின் றூஹ் திங்கள், வெள்ளி மங்ரிபுக்குப் பின் வாழ்ந்த இடங்களுக்கு வந்து தங்களுக்கு நன்மைகளைச்சேர்த்து வைக்குமாறு வேண்டுகின்றன, நன்மைகளைச் சேர்த்து வைத்தால் சந்தோஷப்படும்; தவறினால் கவலையோடு திரும்பிச்செல்லும் என்பது அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் மத்ஹப் என்று இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்; 


யாஸீன் ஓதுதல்:


யாஸீன் சூறத் அல்லது வேறு திருவசனங்களை ஓதி அவர்களுக்குச்சேர்த்துவைத்த பின் அவர்களின் பாவமன்னிப்புக்காக துஆக்கேட்க வேண்டும், இதன் நன்மைகள் அவர்களைப்போய்ச் சேரும் என்ற எண்ணத்தில் தர்மங்கள் நல்லகாரியங்கள் செய்ய வேண்டும்; கப்றில் தலைப்பக்கமாக கப்றை முன்னோக்கி கிப்லாவை பின்நோக்கி ஸலாம் கூற வேண்டும்; 


கப்றில் அல்லது பெட்டியில் கைவைப்பது அல்லது முத்தமிடுவது மக்றூஃ ஆகும், இவ்வாறு நபிமார்கள் வலிமார்களின் கப்றுகளிலும் முத்தமிடுவது மக்றூஃ பறக்கத்தை நாடி ஒழுக்கத்தோடு முத்தமிடுவது ஆகும் என்று சிலர் கூறியுள்ளனர்; உயிரோடு இருக்கும் போது ஒழுக்கமாக நடந்து கொள்வதை விட கூடுதல் ஒழுக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும்; ஆகவே கப்றிலிருந்து சற்று இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்; 


அறிவில்லாத சில மூடர்கள் வலிமார்களின் கப்றில் நெஞ்சை வைப்பது, சாய்ந்து படுப்பது; முத்தம் என்ற பெயரில் சுஜூது செய்வது பாவமானதும் வரம்பு மீறியதுமாகும்.


ஈஸாலுத்தவாப்: 

--------------------

நான்கு இமாம்களின் கூற்றுப்படி திருக்குர் ஆன் ஓதும் நன்மை மைய்யத்திற்கு போய்ச்சேரும்,


وان ليس للانسان الا ما سعى  


மனிதனுக்கு அவன் முயற்சி செய்தது அன்றி இல்லை 


என்ற திருவசனம் நல்லமல்களை அதிகப்படுத்துவதற்கும் அவனை ஊக்கப்படுத்துவதற்குமாகும்;, சிலர் இத்திருவசனம் மாற்றப்பட்டது என்கின்றனர்; மற்றும் சிலர் இத்திருவசனம் நபி இப்றாஹீம் நபி மூஸா அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் சமுகத்தோடு தொடர்பானது என்கின்றனர்; றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர்களுக்கு அவர்கள் முயற்சித்ததும் அடுத்தவர்கள் முயற்சித்ததும் கிடைக்கும்;


முஸ்லிம் ஷரீபில் ஹளறத் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கும் ஹதீதில் இவ்வாறுள்ளது,


ஒரு பெண் தனது குழந்தையை றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடத்தில் 

தூக்கிக்காட்டி 

இந்த குழந்தைக்கும் ஹஜ் கடமையா? என்று கேட்டார்; ஆம் உமக்கும் கூலி கிடைக்கும் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் ‌ 


முஸ்லிம் ஷரீபில் மேலும் பதிவாகியுள்ளது.


ஒருவர் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடம் வந்து எனது தாய் வபாத்தாகி விட்டார்கள், அவருக்காக நான் ஸதக்காக் கொடுத்தால் அது அவரைச்சேருமா என்று கேட்டதற்கு ஆம் சேரும் என்றார்கள்.


இவ்வாறான ஆதாரங்கள் ஏராளம் உண்டு! விபரம் வேண்டியவர்கள் எமது ஜாஅல்ஹக் அசத்தியம் அழிந்தது என்ற பெருநூலைப்பார்க்கவும்.


கப்றில் பச்சைக்கொத்துக்களை நடுவதும் பூப்போடுவதும் சுன்னத், அதில் பசுமை இருக்கும் வரை அது தஸ்பீஹ் செய்யும்; அதனால் மைய்யித்தின் வேதனை இலேசாகிறது. இவை காய்ந்து போகுமுன் அதை அகற்றுவது ஹறாமாகும். சிலர் மைய்யவாடியை சுத்தம் செய்தல் என்ற போர்வையில் கப்றலிருக்கும் பச்சைகளையும் கப்றையும் நிர்மூலமாக்கி அடையாளத்தை இல்லாமல் செய்கின்றனர்; இவ்வாறான விஷமிகள் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


கப்றில் மரம் போன்றதை நட்டு அதற்கு நீர்பாய்ச்சி வளர்ப்பதால் அதன் வேர் மைய்யித்தை சென்றடையுமாயின் ஹறாமாகும், இல்லாவிட்டால் கடுமையான மக்றூஃ, ஹறாம் என்றும் கூறப்பட்டுள்ளது அறிவில்லாத சிலர் நன்மையெனக்கருதி இவ்வாறு செய்து பாவத்தை சம்பாதிக்கின்றனர்;


கப்றை மிதிப்பது உட்காருவது மலம்சலம் கழிப்பது ஹறாம் என்று ஷறஹ் முஸ்லிமில் கூறப்பட்டுள்ளது. மைய்ய வாடியில் மிருகங்களை மேய விடுவது மனிதன் மிதித்து நடப்பதை விட கடுமையான மக்றூஃ ஆகும்; மிருகம் கப்றில் சிறுநீர் கழிப்பதை எவராவது கண்டால் துரத்துவது வாஜிபாகும்; சாதாரணமான கப்றில் இச்சட்டமாயின் அல்லாஹ்வோடு யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட வலிமார்கள் விடயத்தில் எப்படியிருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். உயிருள்ளவர் எதையெல்லாம் வெறுப்பார்களோ அதை மரணித்தவர்களும் வெறுப்பார்கள்; உயிருள்ளவருக்கு வேதனை தருவது மரணித்தவருக்கும் வேதனை கொடுக்கும்; மைய்யித்தின் எலும்பை முறிப்பது உயிருள்ளவரின் எலும்பை முறிப்பது போன்றாகும்.

━━━━━━━━━ ♛ ━━━━━━━━━╮

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,     

 மௌலவி பாஸில் ஷெய்கு   

   *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

  பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

╰━━━━━━━━━━━━━━━━━━━╯