السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 21 May 2024

ஹெலியை கண்டுபிடித்த துருக்கியின் ஆளில்லா விமானம்

ஹெலியை கண்டுபிடித்த துருக்கியின் ஆளில்லா விமானம்

 விபத்துக்குள்ளான ஈரான் ஜனாதிபதியின் ஹெலியை கண்டுபிடித்த துருக்கியின் ஆளில்லா விமானம்


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ராயிஸி, வெளிநாட்டு அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள் பயணித்த ஹெலி ஞாயிற்றுக்கிழமை மாலை ஈரானின் வட மேற்கு பகுதியில் விபத்துக்குள்ளானது. அவர்கள் பயணித்த ஹெலி ஏறத்தாழ 12 மணி நேரமாக ராடாரில் இருந்து மறைந்திருந்தது. பின்னர், ஈரான் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க துருக்கியின் தயாரிப்பான "அகின்ஸி (Akinci)" ஆளில்லா விமானம் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி விபத்துக்குள்ளான பகுதிக்கு தேடுதல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குள் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலியின் சிதைவடைந்த பகுதிகள், குறித்த ஆளில்லா விமானத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு அதன் GPS புள்ளிகள் ஈரானிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. துருக்கியின் அகின்ஸி ஆளில்லா விமானத்தின் தேடுதல் நடவடிக்கைகள் துருக்கியின் அனடோலு செய்திச் சேவையின் X பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதுடன், அந்த நேரடி ஒளிபரப்பை 3.1 மில்லியன் பேர் பார்வையிட்டனர். 


நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட அகின்ஸி ஆளில்லா விமானம் முதன் முதலாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி வானில் பறக்கவிடப்பட்டதுடன், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் திகதி துருக்கி இராணுவத் தளபாடங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆளில்லா விமானம் 40,000 அடி உயரத்திலும் மேலாக பறக்கக்கூடிய ஆற்றல் கொண்டதுடன், தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களுக்கு அதிமான நேரம் பரந்த அளவிலான பகுதிகளை கண்காணிக்கக்கூடிய வல்லமையையும் கொண்டது. அகின்ஸி ஆளில்லா விமானமானது , துருக்கியின் இஸ்தான்புல் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் "பய்கர்" என்ற என்ற ஆளில்லா விமானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆளில்லா விமானம் அதிக உயரத்தில் பறக்கும் வல்லமையையும், அதி உயர் வெப்ப தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இது மிகவும் குறைவாக 100 மீற்றர உயரத்தில் மலைப்பாங்கான பகுதிகளிலும், சவாலான வானிலை மாற்றங்களின் போது பறக்கக்கூடிய வல்லமை கொண்டது.